அத்தியாயம் 40 - இருள் மாளிகை

காணாமற்போன வந்தியத்தேவன் என்ன ஆனான் என்பதை இப்போது நாம் கவனிக்கலாம். இருளடர்ந்த மாளிகைக்கு அருகில் சென்று அவன் மறைந்து நின்றான் என்பதைப் பார்த்தோம் அல்லவா? மந்திரவாதியும் நந்தினியும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அவன் முதலில் காது கொடுத்துக் கேட்க முயன்றான். ஆனால் அவர்களுடைய பேச்சு ஒன்றும் அவன் காதில் விழவில்லை. அதைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் அவ்வளவாக அவனுக்குச் சிரத்தையும் இல்லை. நந்தினியுடன் பேசிக் கொண்டிருந்தபோது தன் அறிவு தன்னை விட்டு அகன்று ஒருவித போதை உணர்ச்சி உண்டாகியிருந்தது என்பதை இப்போது உணர்ந்தான். மறுபடியும் அவளைச் சந்திக்காமல் தப்பித்துக் கொண்டு போய்விட்டால் நல்லது. பழுவேட்டரையர்களிடம் அகப்பட்டுக் கொள்வதைக் காட்டிலும் இந்த இளையராணியிடம் அகப்பட்டு கொள்வதில் அபாயம் அதிகம் இருக்கிறது. அவர்கள் முன்னிலையில் தன் அறிவு நன்றாய் இயங்குகிறது; தோள் வலி ஓங்குகிறது; அரையில் உள்ள கத்தியில் எப்போதும் கை இருக்கிறது. யுக்தியினாலும் ஒரு கை பார்க்கலாம்; கத்தியினாலும் ஒரு கை பார்க்கலாம். ஆனால் இந்த மோகினியின் முன்னால் புத்தி மயங்கி விடுகிறது; கையும் கத்தி பிடிக்கும் சக்தியை இழந்து விடுகிறது. மீண்டும் இவள் முன்னால் சென்றால், என்ன நேருமோ என்னவோ? போதும் போதாதற்கு மந்திரவாதி ஒருவனுடைய கூட்டுறவும் இவள் வைத்துக் கொண்டிருக்கிறாள்! இரண்டு பேரும் சேர்ந்து என்ன மாயமந்திரம் செய்வார்களோ? குந்தவைப் பிராட்டியிடந்தான் இவளுக்கு எவ்வளவு துவேஷம்? அந்தத் துவேஷம் இவளுடைய கண்களில் தீப்பொறியாக வெளிப்படுகிறதே! ஒருவேளை மனத்தை மாற்றிக் கொண்டு பழுவேட்டரையரிடம் தன்னைப் பிடித்துக் கொடுத்தாலும் கொடுத்து விடலாம்! பெண்களின் சபல சித்தமும் சஞ்சல புத்தியும் பிரசித்தமானவை அல்லவா? ஆகையால் மீண்டும் இவளைச் சந்திக்காமல் தப்பித்துக் கொண்டு போய் விட்டால் நல்லது. ஆனால் எப்படி? தோட்டத்துக்குள் புகுந்துதான் வழி கண்டுபிடித்துப் போக வேண்டும்! மதில் ஏறிக் குதிக்க வேண்டும்! மதிலுக்கு வெளியில் தன்னைத் தேடி வந்தவர்கள் காத்திருந்தால்?…. வேறு ஏதேனும் உபாயம் இல்லையா? வந்தியத்தேவா! இத்தனை நாளும் உனக்கு உதவி செய்து வந்த அதிர்ஷ்டம் எங்கே போயிற்று? யோசி! யோசி! மூளையைச் செலுத்தி யோசி! கண்களையும் கொஞ்சம் உபயோகப்படுத்து! நாலாபக்கமும் பார்! இதோ இந்த இருள் அடைந்த மாளிகை இருக்கிறதே! இது ஏன் இருளடைந்திருக்கிறது? இதற்குள்ளே என்ன இருக்கும்? இதன் உள்ளே புகுந்தால் இதன் இன்னொரு வாசல் எங்கே கொண்டு போய் விடும்? எல்லாவற்றுக்கும் இதற்குள் புகுந்து பார்த்து வைக்கலாமா? இப்போது உபயோகப்படாவிட்டாலும் வேறு ஒரு சமயத்துக்கு உபயோகப்படலாம். யார் கண்டது?

ஆனால், இதற்குள்ளே எப்படிப் பிரவேசிப்பது? எவ்வளவு பெரிய, பிரம்மாண்டமான கதவு! இதற்கு எவ்வளவு பெரிய பூட்டு! அப்பப்பா! என்ன அழுத்தம்! என்ன கெட்டி! ஆ! இது என்ன? கதவுக்குள் ஒரு சிறிய கதவு போலிருக்கிறதே! கையை வைத்ததும் இந்தச் சிறிய கதவு திறந்து கொள்கிறதே! அதிர்ஷ்டம் என்றால், இதுவல்லவா அதிர்ஷ்டம்! உள்ளே புகுந்து பார்க்க வேண்டியதுதான்!

பெரிய கதவுக்குள்ளே, பார்த்தால் தெரியாதபடி பொருத்தியிருந்த சிறிய கதவைத் திறந்து கொண்டு வந்தியத்தேவன் அந்த இருளடைந்த மாளிகைக்குள் புகுந்தான்.உள்ளே காலடி வைத்ததும் அவனுக்குத் தோன்றிய முதலாவது எண்ணம், தான் அம்மாளிகைக்குள் புகுந்தது நந்தினிக்குக் கூடத் தெரிய கூடாது என்பதுதான். ஆகையால் சிறிய கதவைச் சாத்தினான். சாத்தியவுடன் உள்ளிருந்த இருள் இன்னும் பன்மடங்கு கனத்து விட்டதாகத் தோன்றியது. கதவு திறந்திருந்த ஒரு வினாடி நேரத்தில் சில பெரிய தூண்கள் நிற்பது தெரிந்தது. இப்போது அதுவும் தெரியவில்லை. இருட்டு என்றால், இப்படிப்பட்ட இருட்டைக் கற்பனை செய்யவும் முடியாது!.. சீச்சீ! வெளிச்சத்திலிருந்து இருட்டில் வந்திருப்பதால் முதலில் இப்படித்தான் இருக்கும். சற்று போனால் இருட்டின் கனம் குறைந்து பொருள்கள் மங்கலாகக் கண்ணுக்குப் புலப்படும். இதை எத்தனையோ தடவை அனுபவத்தில் கண்டிருந்தும், இருளைக் கண்டு கலக்கம் ஏன்? சும்மா நிற்பதற்குப் பதில் கொஞ்சம் நடந்து பார்க்கலாம். கையினால் தடவிக் கொண்டே போகலாம். முதலில் தெரிந்த தூண் இப்போது இல்லாமல் எங்கே போய்விடும்…? சற்றுத் தூரம் குருடனைப் போல் கையை முன்னால் நீட்டிக் கொண்டு வந்தியத்தேவன் நடந்தான். அவன் நினைத்தபடியே ஒரு தூண் கைக்குத் தட்டுப்பட்டது! ஆ! எவ்வளவு பெரிய தூண்! கருங்கல் தூண்! இதைச் சுற்றி வளைத்துக் கொண்டு மேலே போய்ப் பார்க்கலாம். மேலும் கொஞ்ச தூரம் நடந்ததும் இன்னொரு தூண் கைக்கு அகப்பட்டது. ஆனால் இன்னமும் கண்ணுக்கு ஏதும் தெரிந்தபாடாயில்லை. திடீரென்று கண் குருடாகப் போய் விட்டதா, என்ன? இது என்ன பைத்தியக்கார எண்ணம்! கண் திடீர் என்று எப்படிக் குருடாகும்? இன்னும் கொஞ்சம் நடந்து பார்க்கலாம். மேலே தூண் ஒன்றும் கைக்கு அகப்படவில்லை! ஏதோ பள்ளத்தில் இறங்குவது போன்ற உண்ர்ச்சி உண்டாகிறது! ஆ! இதோ ஒரு படி! நல்லவேளை, விழாமல் தப்பினோம்! இப்படியே இந்த இருட்டில் ஒன்றும் தெரியாமல் எத்தனை நேரம், எத்தனை தூரம் போவது?…. எதனாலோ வந்தியத்தேவன் மனத்தில் ஒரு பீதி உண்டாயிற்று. மேலே போகத் துணிவு ஏற்படவில்லை. வந்த வழியில் திரும்ப வேண்டியதுதான்! கதவைத் திறந்து கொண்டு லதா மண்டபத்துக்கே போக வேண்டியதுதான்! இந்தப் பயங்கர இருட்டில் உழலுவதைக் காட்டிலும் நந்தினியை மீண்டும் சந்தித்து அவளுடைய யோசனைப்படி நடப்பதே நல்லது. என்ன வாக்குறுதி கேட்டாலும் இப்போதைக்குக் கொடுத்து விட்டால், பிறகு சமயம் போல் பார்த்துக் கொள்கிறது! இவ்வாறு எண்ணி வந்தியத்தேவன் திரும்பினான். ஆனால் திரும்பிச் செல்லும் வழி வந்த வழியேதானா? எப்படிச் சொல்ல முடியும்!…. நடக்க நடக்கக் கைக்கு ஒன்றும் தட்டுப்படவில்லையே! அந்தக் கருங்கல் தூண்கள் எங்கே போயின! கதவைக் கண்டுபிடிக்க முடியாமலே போய் விடுமோ? இரவெல்லாம் இந்த இருளில் இப்படியே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்க நேரிடுமோ? கடவுளே! இது என்ன ஆபத்து!…

ஆகா! இது என்ன ஓசை! சடசட வென்ற ஓசை! எங்கேயிருந்து வருகிறது? வௌவால்கள் சிறகை அடித்துக் கொள்ளும் ஓசையாக இருக்க வேண்டும். அவ்வளவு இருட்டில் வௌவால்கள் நிறையக் குடிகொண்டிருப்பது இயல்புதானே? இல்லை! இது வௌவால் இறகின் சத்தம் மட்டும் இல்லை! காலடிச் சத்தம்! யாரோ நடக்கும் சத்தம்!…. நடப்பது யார்? மனிதர்கள்தானா? அல்லது… வந்தியத்தேவனுடைய தொண்டை உலர்ந்து போயிற்று! நா மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது! திடீரென்று யாரோ அவன் முகத்தில் இடித்தாற் போலிருந்தது. வந்தியத்தேவன் தன் சக்தியையெல்லாம் காட்டி ஒரு குத்து விட்டான்! குத்திய கை துண்டிக்கப்பட்டது போல வலித்தது. இன்னொரு கையினால் தொட்டுப் பார்த்தான். இருட்டில் கருங்கல் தூணின் மேல் மோதிக் கொண்டதுமல்லாமல் அதைக் குத்தியதாகவும் தெரிந்து கொண்டான்! கையை அவ்வளவு ‘விண், விண்’ என்று வலித்திராவிட்டால் வந்தியத்தேவன் சிரித்தேயிருப்பான். ஆயினும் அதனால் அவனுடைய பயம் சிறிது அகன்றது. முழுதும் அகலவில்லை. காது கொடுத்துக் கேட்டபோது அந்தக் காலடிச் சத்தம் மேலும் மேலும் கேட்டது. ஒரு சமயம் எட்டிப் போவது போல இருந்தது! இன்னொரு சமயம் நெருங்கி வருவது போல் இருந்தது! வந்தியத்தேவன் நின்ற இடத்திலேயே நின்று உற்றுக் கேட்டான். அதே சமயத்தில் ஓசை வந்த திசையை நோக்கி அவனுடைய கண்களும் உற்றுப் பார்த்தன.

ஆ! வெளிச்சம்! அதோ வெளிச்சம்! கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி வருகிறது! நெருங்கியும் வருகிறது! வெளிச்சத்துடன் புகை! யாரோ தீவர்த்தியுடன் வருகிறார்கள். நந்தினிதான் தன்னைத் தேடிக் கொண்டு வருகிறாளோ, என்னமோ! அப்படியானால் நல்லது. வேறு யாராவதாயிருந்தால்? எல்லாவற்றுக்கும் சிறிது நேரம் ஒளிந்திருந்து பார்க்கலாம். ஒளிந்து நிற்பதற்கு இங்கே இடத்துக்குக் குறைவில்லை! தூரத்திலே வந்த தீவர்த்திக் கொழுந்து அது ஒரு விசாலமான மண்டபம் என்பதைக் காட்டியது. அதில் பெரிய பெரிய தூண்கள் இருந்தன. தூண்களில் பயங்கரமான பூதங்களின் வடிவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. கீழேயிருந்து ஒரு படிக்கட்டு மேலே வந்து அங்கே ஒரு வளைவு வளைந்து திரும்பி மேலேறிச் சென்றது. அந்தப் படிக்கட்டின் அடிப்பக்கத்திலிருந்துதான் தீவர்த்தி வெளிச்சம் வந்தது என்பதையும் அறிந்து கொண்டான். ஆகையால் வருவது நந்தினியாக இருக்க முடியாது. ‘பாதாளச் சிறை’ என்று தான் கேள்விப்பட்டது இந்த இருண்ட மாளிகையின் அடியிலேதான் இருக்கிறதோ? ஒருவேளை அங்கிருந்துதான் யாரேனும் வருகிறார்களோ? பாதாளச் சிறையின் பயங்கரங்களைப் பற்றி வந்தியத்தேவன் அதிகம் கேள்விப்பட்டிருந்தபடியால், அந்த எண்ணம் அவனுடைய ரோமக் கால்களில் எல்லாம் வியர்வை துளிக்கும்படி செய்தது. அடுத்த கணம் ஒரு பெரிய தூணின் மறைவில் போய் நின்று கொண்டான். மகா தைரியசாலியான வந்தியத்தேவனுடைய கைகால்கள் எல்லாம் அச்சமயம் வெலவெலத்துப் போய் நடுநடுங்கின!

படிக்கட்டின் வழியாக மேலேறி மூன்று உருவங்கள் வந்தன. மூவரும் மனிதர்கள்தான். ஒருவன் கையில் தீவர்த்தியிருந்தது. இன்னொருவன் கையில் வேல் இருந்தது. நடுவில் வந்தவன் கையில் ஒன்றும் பிடித்திருக்கவில்லை. தீவர்த்தி வெளிச்சத்தில் அவர்கள் முகங்கள் புலப்பட்டதும் வந்தியத்தேவனுடைய பீதி அடியோடு அகன்றது. பீதியைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான வியப்பு உண்டாயிற்று. அவர்களில் முன்னால் வந்தவன் வேறு யாரும் இல்லை; வந்தியத்தேவனுடைய பிரிய நண்பனாகிய கந்தமாறன்தான்! நடுவில் வந்த உருவம், முதலில், ஓர் அதிசயமான பிரமையை வந்தியத்தேவனுக்கு உண்டாக்கிற்று. பழுவூர் இளையராணியாகிய நந்தினி தான் வருகிறாள் என்று தோன்றியது. மறு கணத்திலேயே, அந்தப் பிரமை நீங்கியது. வருகிறவன் ஆண் மகன் என்று தெரிந்தது. கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் அரை குறையாகத் தான் பார்த்த இளவரசர் மதுராந்தகத் தேவர் என்பதை அறிந்து கொண்டான். மூன்றாவதாக, கையில் தீவர்த்தியுடன் வந்தவனை வல்லவரையன் முன்னால் பார்த்ததில்லை. அவன் வாசற் காவலனாகவோ, ஊழியக்காரனாகவோ இருக்க வேண்டும்.

வந்தியத்தேவனுடைய மூளை அதிவேகமாக வேலை செய்தது. அவர்கள் அந்தப் பாதாள வழியில் படிக்கட்டு ஏறி வருவதன் மர்மம் என்னவென்பது வெகு விரைவில் அவனுக்கு விளங்கி விட்டது.பழுவூர் இளையராணி பல்லக்கில் ஏறி முதலாவது நாளே வந்து விட்டாள். பெரிய பழுவேட்டரையர் அன்றிரவு தஞ்சைக் கோட்டைக்குத் திரும்பி விட்டார். இருவரும் கோட்டை வாசல் வழியாகப் பகிரங்கமாக வந்து விட்டார்கள். ஆனால், மதுராந்தகத்தேவர் வெளியில் போனதும் தெரியக் கூடாது; திரும்பி வருவதும் தெரியக் கூடாது. அதற்காக இந்த இரகசியச் சுரங்க வழியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த இருளடைந்த மாளிகையின் மர்மமே இதுதான் போலும்! கந்தமாறன் தன்னைக் கொள்ளிடக் கரையில் விட்டுப் பிரிந்த பின்னர், வேறு எங்கேயோ ஓரிடத்தில் பெரிய பழுவேட்டரையருடன் சேர்ந்திருக்கிறான். இந்த அந்தரங்க வேலைக்கு அவனைப் பழுவேட்டரையர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மதுராந்தகத்தேவரைச் சுரங்க வழியில் அழைத்துச் செல்லத் துணையாக அனுப்பி வைத்திருக்கிறார். ஆகா! இப்போது நினைத்துப் பார்த்தால் ஞாபகம் வருகிறது. “எனக்குக் கூடத் தஞ்சாவூரில் ஒரு வேலை இருக்கிறது. நானும் அங்கே வந்தாலும் வருவேன்!” என்று கந்தமாறன் சொன்னான் அல்லவா?…. இப்போது இங்கே திடீர் என்று, தான் கந்தமாறன் முன்னால் போய் நின்றால், அவன் என்ன செய்வான்?…. இந்த எண்ணம் தோன்றியவுடனேயே அதை வல்லவரையன் மாற்றிக் கொண்டான். இந்தச் சமயத்தில் கந்தமாறன் முன்னால் தான் எதிர்ப்பட்டால், அவன் செய்துள்ள சபதத்தை முன்னிட்டுத் தன்னைக் கொல்ல நேரிடும்; அல்லது தான் அவனைக் கொல்ல நேரும். அப்படிப்பட்ட தர்ம சங்கடத்தை எதற்காக வருவித்துக் கொள்ள வேண்டும்?….

இதற்குள் அந்த மூவரும் படிக்கட்டில் மேலேறிப் போய் விட்டார்கள். வெளிச்சமும் வர வர மங்கத் தொடங்கியது. அவர்களைப் பின்தொடர்ந்து போகலாமா என்று வந்தியத்தேவன் ஒருகணம் நினைத்து, அதையும் உடனே மாற்றிக் கொண்டான். அவர்கள் கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையரின் அரண்மனைக்குப் போகிறார்கள் என்பது நிச்சயம். அங்கே தான் திரும்பிப் போவதில் என்ன பயன்? சிங்கத்தின் குகையிலிருந்து தப்பித்து வந்த பிறகு தலையைக் கொடுப்பது போலத்தான்! இனித் திரும்ப நந்தினி இருந்த லதா மண்டபத்துக்குப் போவதிலும் பயன் இல்லை. ஒருவேளை பெரிய பழுவேட்டரையர் இதற்குள் அங்கு வந்திருக்கலாம். அதுவும் அபாயகரந்தான் வேறு என்ன செய்யலாம்?… ஏன்? இந்தப் படிக்கட்டு வழியாக இறங்கிப் போய்ப் பார்த்தால் என்ன? இவ்விதம் எண்ணி நம் வாலிப வீரன் அந்தச் சுரங்கப் படிக்கட்டில் இறங்கினான்.

results matching ""

    No results matching ""