அத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்

நந்தி மண்டபத்தில் அமர்ந்து இளவரசனும், குந்தவை தேவியும் பேசிக்கொண்டிருந்தபோது – வானதி தூண் ஓரமாக நின்று கேட்டுக் கொண்டிருந்தபோது, – கால்வாயில் படகில் காத்துக் கொண்டிருந்த பூங்குழலிக்கும், சேந்தன்அமுதனுக்கும் முக்கியமான சம்பாஷணை நடந்து கொண்டிருந்தது.

“அமுதா! ஒன்று உன்னை நான் கேட்கப் போகிறேன். உண்மையாகப் பதில் சொல்வாயா?” என்றாள் பூங்குழலி.

“உண்மையைத் தவிர என் வாயில் வேறு ஒன்றும் வராது பூங்குழலி! அதனாலேதான் நாலு நாளாக நான் யாரையும் பார்க்காமலும், பேசாமலும் இருக்கிறேன்” என்றான் அமுதன்.

“சில பேருக்கு உண்மை என்பதே வாயில் வருவதில்லை. இளவரசருக்கு ஓலை எடுத்துக் கொண்டு இலங்கைக்குப் போனானே, அந்த வந்தியத்தேவன் அப்படிப்பட்டவன்.”

“ஆனாலும் அவன் ரொம்ப நல்லவன். அவன் யாரையும் கெடுப்பதற்காகப் பொய் சொன்னதில்லை.”

“உன்னைப் பற்றி அவன் ஒன்று சொன்னான். அது உண்மையா, பொய்யா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்…”

“என்னைப் பற்றி அவன் உண்மையில்லாததைச் சொல்வதற்குக் காரணம் எதுவும் இல்லை. இருந்தாலும், அவன் சொன்னது என்னவென்று சொல்!”

“நீ என்னைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசியதாகச் சொன்னான்.”

“அது முற்றும் உண்மை.”

“நீ என்னிடம் ஆசை வைத்திருப்பதாகச் சொன்னான், என்னை நீ மணந்து கொள்ள விரும்புவதாகச் சொன்னான்….”

“அவ்விதம் உண்மையில் அவன் சொன்னானா?”

“ஆம், அமுதா!”

“அவனுக்கு என் நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.”

“எதற்காக?”

“நானே உன்னிடம் என் மனதைத் திறந்து தெரிவித்திருக்க மாட்டேன்; அவ்வளவு தைரியம் எனக்கு வந்திராது. எனக்காக உன்னிடம் தூது சொன்னான் அல்லவா? அதற்காக அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.”

“அப்படியானால் அவன் சொன்னது உண்மைதானா?”

“உண்மைதான் பூங்குழலி! அதில் சந்தேகமில்லை.”

“உனக்கு ஏன் என்னிடம் ஆசை உண்டாயிற்று, அமுதா?”

“அன்பு உண்டாவதற்குக் காரணம் சொல்ல முடியுமா?”

“யோசித்துப் பார்த்துச் சொல்லேன். ஏதாவது ஒரு காரணம் இல்லாமலா இருக்கும்?”

“அன்பு ஏன் ஏற்படுகிறது, எவ்வாறு ஏற்படுகிறது என்று இதுவரை உலகில் யாரும் கண்டுபிடித்துச் சொன்னதில்லை, பூங்குழலி!”

“ஒருவருக்கொருவர் அழகைப் பார்த்து ஆசை கொள்வதில்லையா?”

“அழகைப் பார்த்து ஆசை கொள்வதுண்டு; மோகம் கொள்வதும் உண்டு. ஆனால் அதை உண்மையான அன்பு என்று சொல்ல முடியாது அது நிலைத்திருப்பதும் இல்லை. சற்று முன் வந்தியத்தேவன் என்று சொன்னாயே, அவன் என்னைப் பார்த்தவுடன் என்னிடம் சிநேகம் கொண்டு விட்டான். அவனுக்காக நான் என் உயிரையும் கொடுக்கச் சித்தமாயிருந்தேன். என் அழகைப் பார்த்தா, என்னிடம் அவன் சிநேகமானான்?”

“ஆனால் உன் சினேகிதன் என் அழகைப் பற்றி ரொம்ப, ரொம்ப வர்ணித்தான் இல்லையா?”

“உன் அழகைப் பற்றி வர்ணித்தான். ஆனால் உன்னிடம் ஆசை கொள்ளவில்லை. பழுவூர்ராணியின் அழகைப்பற்றி நூறு பங்கு அதிகம் வர்ணித்தான், அவளிடம் அன்பு கொள்ளவில்லை.”

“அதன் காரணம் எனக்குத் தெரியும்.”

“அது என்ன?”

“அதோ இளவரசருடன் பேசிக் கொண்டிருக்கும் இளைய பிராட்டியிடம் அந்த வீரனின் மனம் சென்று விட்டதுதான் காரணம்.”

“இதிலிருந்தே அழகுக்கும் அன்புக்கும் சம்பந்தமில்லையென்று ஏற்படவில்லையா?”

“அது எப்படி ஏற்படுகிறது? இளையபிராட்டியைவிட நான் அழகி என்றா சொல்லுகிறாய்?”

“அதில் என்ன சந்தேகம், பூங்குழலி! பழையாறை இளையபிராட்டியைக் காட்டிலும், அதோ தூண் மறைவில் நிற்கும் கொடும்பாளூர் இளவரசியைக் காட்டிலும், நீ எத்தனையோ மடங்கு அழகி. மோகினியின் அவதாரம் என்று பலரும் புகழும் பழுவூர் இளையராணியின் அழகும் உன் அழகுக்கு இணையாகாது. இப்படிப்பட்ட தெய்வீகமான அழகுதான் எனக்குச் சத்துருவாயிருக்கிறது. அதனாலேயே என் மனத்தில் பொங்கிக் குமுறும் அன்பை என்னால் உன்னிடம் வெளியிடவும் முடியவில்லை. வானுலகத் தேவர்களும் மண்ணுலகத்தின் மன்னாதி மன்னர்களும் விரும்பக்கூடிய அழகியாகிய நீ, எனக்கு எங்கே கிட்டப்போகிறாய் என்ற பீதி என் மனத்தில் குடி கொண்டிருக்கிறது!”

பூங்குழலி சற்று யோசனையில் ஆழ்ந்திருந்து விட்டு “அமுதா! உன் பேரில் எனக்கு ஆசை இல்லை என்று நான் சொல்லிவிட்டால், நீ என்ன செய்வாய்?” என்று கேட்டாள்.

“சில நாட்கள் பொறுமையுடன் இருப்பேன். உன் மனம் மாறுகிறதா என்று பார்ப்பேன்.”

“அது எப்படி மாறும்?”

“மனிதர்கள் மனது விசித்திரமானது. சிலசமயம் நம் மனத்தின் அந்தரங்கம் நமக்கே தெரியாது. புறம்பான காரணங்களினால் மனம் பிரமையில் ஆழ்ந்திருக்கும். பிரமை நீங்கியதும் உண்மை மனம் தெரிய வரும்…”

“சரி பொறுத்திருந்து பார்ப்பாய், அப்படியும் என் மனதில் மாறுதல் ஒன்றும் ஏற்படாவிட்டால்…”

“உன்னிடம் வைத்த ஆசையை நான் போக்கிக் கொள்ள முயல்வேன்…”

“அது முடியுமா?…”

“முயன்றால் முடியும்; கடவுளிடம் மனத்தைச் செலுத்தினால் முடியும். நம் பெரியோர் பகவானிடம் பக்தி செலுத்தித்தான் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார்கள்…”

“அமுதா! நீ என்னிடம் வைத்திருக்கும் அன்பு உண்மையான அன்பு என்று எனக்குத் தோன்றவில்லை.”

“ஏன் அப்படிச் சொல்கிறாய்? உண்மை அன்பின் அடையாளம் என்ன?”

“என்னிடம் உனக்கு உண்மை அன்பு இருந்தால், நான் உன்னை மறுதளித்ததும் என்னைக் கொன்று விட வேண்டும் என்று உனக்குத் தோன்றும். உனக்குப் பதிலாக நான் வேறு யாரிடமாவது அன்பு வைப்பதாகத் தெரிந்தால் அவரையும் கொன்றுவிட வேண்டுமென்று நீ கொதித்து எழுவாய்….”

“பூங்குழலி! நான் கூறியது தெய்வீகமான, ஸத்வ குணத்தைச் சேர்ந்த அன்பு. நீ சொல்வது அசுர குணத்துக்குரிய ஆசை; பைசாச குணத்துக்குரியது என்று சொல்லலாம்…”

“தெய்வீகத்தையும் நான் அறியேன்; பைசாச இயல்பையும் நான் அறியேன். மனித இயற்கைதான் தெரியும். அன்பு காரணமாக இன்பம் உண்டாக வேண்டும். அதற்குப் பதிலாகத் துன்பம் உண்டானால் எதற்காக அதைச் சகித்திருப்பது? நாம் ஒருவரிடம் அன்பு செய்ய, அவர் பதிலுக்கு நம்மிடம் அன்பு செய்யாமல் துரோகம் செய்தால் எதற்காக நாம் பொறுத்திருக்க வேண்டும்? பழிவாங்குவது தானே மனித இயல்பு?”

“இல்லை, பூங்குழலி! பழிவாங்குவது மனித இயல்பு அல்ல, அது ராட்சஸ இயல்பு. ஒருவரிடம் நாம் அன்பு வைத்திருப்பது உண்மையானால் அவருடைய சந்தோஷம் நமக்கும் சந்தோஷம் தர வேண்டும். அவர் நம்மை நிராகரிப்பது முதலில் கொஞ்சம் வேதனையாயிருந்தாலும் பொறுத்துக்கொண்டு பதிலுக்கு நன்மையே செய்தோமானால் பின்னால் நமக்கு ஏற்படும் இன்பம், ஒன்றுக்குப் பத்து மடங்காகப் பெருகியிருக்கும்…”

“நீ சொல்வது மனித இயல்பேயல்ல; மனிதர்களால் ஆகக் கூடிய காரியமும் அல்ல. வந்தியத்தேவனுடன் வைத்தியர் மகன் ஒருவன் வந்தான். அவன் என்னைப் பார்த்ததும் ஆசை கொண்டான். அது நிறைவேறாது என்று அறிந்ததும், அவனுடைய ஆசைக்கு குறுக்கே நிற்பதாக அவன் எண்ணி வந்தியத்தேவனைப் பழுவேட்டரையர் ஆட்களிடம் காட்டிக் கொடுக்க முயன்றான். என்னையும் அவன் கொன்றுவிட முயன்றிருப்பான்.”

“அப்படியானால் அவன் மனித குலத்தைச் சேர்ந்தவன் அல்ல; கொடிய அசுர குலத்தைச் சேர்ந்தவன்.”

“அதோ கொடும்பாளூர் இளவரசி நிற்கிறாள். அவள் பொன்னியின் செல்வருக்குத் தன் உள்ளத்தைப் பறிகொடுத்திருக்கிறாள். பொன்னியின் செல்வர் அவளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவள் என்ன செய்வாள்? நிச்சயமாகப் பொன்னியின் செல்வருக்கு விஷம் வைத்துக் கொல்ல முயல்வாள். அவருடைய மனத்தை வேறு எந்தப் பெண்ணாவது கவர்ந்து விட்டதாக அறிந்தால் அவளையும் கொல்ல முயல்வாள்.”

“ஒரு நாளும் நான் அப்படி நினைக்கவில்லை பூங்குழலி; சாத்வீகமே உருக்கொண்ட வானதி அப்படி ஒருநாளும் செய்ய முயல மாட்டாள்.”

“இருக்கலாம்; நானாயிருந்தால் அப்படித் தான் செய்ய முயலுவேன்.”

“உன்னைக் கடவுள் மன்னித்துக் காப்பாற்ற நான் பிரார்த்தித்து வருவேன்….”

“கடவுள் என்ன என்னை மன்னிப்பது! நான் கடவுளை மன்னிக்க வேண்டும்!”

“நீ தெய்வ அபசாரம் செய்வதையும் கடவுள் மன்னிப்பார்!”

“அமுதா! நீ உத்தமன், என் பெரிய அத்தையின் குணத்தைக் கொண்டு பிறந்திருக்கிறாய்…”

“அது என்ன விஷயம்? திடீரென்று புதிதாக ஏதோ சொல்கிறாயே?”

“என் பெரிய அத்தை இறந்துபோய் விட்டதாக நம் குடும்பத்தார் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா?”

“யாரைச் சொல்கிறாய்? என் தாய்க்கும், உன் தந்தைக்கும் உடன் பிறந்த மூத்த சகோதரியைத் தானே”.

“ஆம்! அவள் உண்மையில் இறந்து விடவில்லை.”

“நானும் அப்படித்தான் பராபரியாகக் கேள்விப்பட்டேன்.”

“அவள் இலங்கைத் தீவில் இன்றைக்கும் பைத்தியக்காரியைப் போல அலைந்து கொண்டிருக்கிறாள்….”

“குடும்பச் சாபக்கேட்டுக்கு யார் என்ன செய்ய முடியும்?”

“அவள் இன்று பைத்தியக்காரியைப் போல் அலைவதற்குக் குடும்பச் சாபம் மட்டும் காரணம் அல்ல. சோழகுலத்தைச் சேர்ந்த ஒருவனின் நம்பிக்கைத் துரோகம்தான் அதற்குக் காரணம்.”

“என்ன? என்ன?”

“இளம்பிராயத்தில், என் அத்தை இலங்கைக்கு அருகில் ஒரு தீவில் வசித்து வந்தாள். அவளைச் சோழ ராஜகுமாரன் ஒருவன் காதலிப்பதாகப் பாசாங்கு செய்தான், அவள் நம்பிவிட்டாள். பிறகு அந்த இராஜகுமாரன் இளவரசுப் பட்டம் சூட்டிக் கொண்டதும் அவளை நிராகரித்து விட்டான்….”

“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரிந்தது, பூங்குழலி?”

“என் ஊமை அத்தையின் சமிக்ஞை பாஷை மூலமாகவே தெரிந்து கொண்டேன். இன்னொன்று சொல்கிறேன் கேள்! சில காலத்துக்கு முன்பு பாண்டிய நாட்டார் சிலர் இங்கே வந்திருந்தார்கள். என் அத்தையை வஞ்சித்த இராஜ குலத்தினரை பழிக்குப்பழி வாங்குவதற்கு என் உதவியைக் கோரினார்கள். அப்போதுதான் என் அத்தையின் கதையை அறிந்திருந்த எனக்கு இரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது. அவர்களுடன் சேருவதென்றே முடிவு செய்துவிட்டேன். அச்சமயம் என் பெரிய அத்தையின் மனப்போக்கை அறிந்து கொண்டேன். அவள், தனக்குத் துரோகம் செய்தவனை மன்னித்ததுமில்லாமல், அவனுக்கு இன்னொரு மனைவி மூலம் பிறந்த பிள்ளையைப் பல தடவை காப்பாற்றினாள் என்று அறிந்தேன். பிறகு பாண்டிய நாட்டாருடன் சேரும் எண்ணத்தை விட்டுவிட்டேன். நீ சொல்கிறபடி, என் அத்தையின் அன்பு தெய்வீகமான அன்புதான். ஆனால் என் அத்தையைப் போல் நான் இருக்க மாட்டேன்.”

“பின்னே என் செய்வாய்?”

“என்னை எந்த இராஜகுமாரனாவது வஞ்சித்து மோசம் செய்தால், பழிக்குப்பழி வாங்குவேன். அவனையும் கொல்வேன்; அவனுடைய மனத்தை என்னிடமிருந்து அபகரித்தவளையும் கொல்லுவேன். பிறகு நானும் கத்தியால் குத்திக் கொண்டு செத்துப் போவேன்!”

“கடவுளே! என்ன பயங்கரமான பேச்சுப் பேசுகிறாய்?”

“அமுதா! இரண்டு வருஷமாக என் மனத்திலுள்ள கொதிப்பை நீ அறிய மாட்டாய். அதனால் இப்படிச் சாத்வீக உபதேசம் செய்கிறாய்!”

“உன் அத்தைக்கு இல்லாத கொதிப்பு உனக்கு என்ன வந்தது!”

“அது என் அத்தையின் சமாசாரம்; இது என் சமாசாரம்!”

“உன்னுடைய சமாசாரமா? உண்மைதானா, பூங்குழலி! நிதானித்துச் சொல்!”

“ஆம், அமுதா! என் உடம்பிலிருந்து கொஞ்சம் இரத்தத்தையும், அந்த வானதியின் உடம்பிலிருந்து கொஞ்சம் இரத்தத்தையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால், ஏதாவது வித்தியாசம் இருக்குமா?”

“ஒரு வித்தியாசமும் இராது.”

“அவள் எந்த விதத்திலாவது என்னைவிட உயர்ந்தவளா? அறிவிலோ, அழகிலோ, ஆற்றலிலோ?”

“ஒன்றிலும் உன்னைவிட உயர்ந்தவள் அல்ல. நீ அலை கடலில் வளர்ந்தவள். அவள் அரண்மனையில் வளர்ந்தவள். நீ காட்டு மிருகங்களைக் கையினால் அடித்துக்கொல்லுவாய்! கடும் புயற்காற்றில் கடலில் ஓடம் செலுத்துவாய்! கடலில் கை சளைத்துத் தத்தளிக்கிறவர்களைக் காப்பாற்றுவாய்! வானதியோ கடல் அலையைக்கண்டே பயப்படுவாள்! வீட்டுப் பூனையைக் கண்டு பீதிகொண்டு அலறுவாள்! ஏதாவது கெட்ட செய்தி கேட்டால் மூர்ச்சையடைந்து விழுவாள்!”

“அப்படியிருக்கும்போது இளையபிராட்டி என்னைத் துச்சமாகக் கருதக் காரணம் என்ன? வானதியைச் சீராட்டித் தாலாட்டுவதின் காரணம் என்ன?”

“பூங்குழலி! இளையபிராட்டியின் மீது நீ வீண்பழி சொல்லுகிறாய். அவருக்கு வானதி நெடுநாளையத் தோழி. உன்னை இப்போதுதான் இளைய பிராட்டிக்குத் தெரியும். இளவரசரைக் கடலிலிருந்து காப்பாற்றி இங்கே கொண்டு வந்து சேர்த்ததற்காக உனக்கு எவ்வளவோ அவர் நன்றி செலுத்தவில்லையா?”

“ஆம்! அந்த அரண்மனைச் சீமாட்டியின் நன்றி இங்கே யாருக்கு வேணும்? அவளே வைத்துக் கொள்ளட்டும். அமுதா! இளவரசரைப் படகில் ஏற்றிக்கொண்டு திரும்ப புத்த விஹாரத்துக்குப் போக வேண்டுமாயிருந்தால், நீ மட்டும் படகைச் செலுத்திக் கொண்டுபோ! நான் வந்தால், ஒரு வேளை வேண்டுமென்றே படகைக் கவிழ்த்தாலும் கவிழ்த்து விடுவேன்…”

“ஒருநாளும் நீ அப்படிச் செய்யமாட்டாய், பூங்குழலி! இளவரசர் என்ன குற்றம் செய்தார், அவர் ஏறியுள்ள படகை நீ கவிழ்ப்பதற்கு?”

“அமுதா! எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது. என் சித்தம் என் சுவாதீனத்தில் இல்லை. என் அத்தைக்கு இவர் தந்தை செய்த துரோகத்தை நினைத்துப் படகைக் கவிழ்த்தாலும் கவிழ்த்து விடுவேன். நீயே படகை விட்டுக் கொண்டுபோ!”

“அப்படியே ஆகட்டும்; நானே இளவரசரைக் கொண்டு போய் விட்டு வருகிறேன். நீ என்ன செய்வாய்?”

“நான் வானதியைப் பின் தொடர்ந்து சென்று, அவள் தலையில் ஒரு கல்லைத் தூக்கிப் போடுவேன்!” இவ்விதம் கூறிக்கொண்டே பூங்குழலி குனிந்து கால்வாயின் கரையில் கிடந்த ஒரு கூழாங்கல்லை எடுத்தாள். அச்சமயம் கால்வாயின் கரையில் இருந்த அடர்த்தியான தென்னந் தோப்புக்குள்ளிருந்து கம்பீரமான ராஜ ரிஷபம் ஒன்று வெளியேறி வந்தது. அதைப் பார்த்த பூங்குழலி தன் கோபத்தை அக்காளையின் மேல் காட்ட எண்ணிக் கூழாங்கல்லை அதன் பேரில் விட்டெறிந்தாள்.

அந்தக் கூழாங்கல் ரிஷபராஜனின் மண்டைமீது விழுந்தது. காளை ஒரு தடவை உடம்பைச் சிலிர்த்துக் கொண்டது. கல் வந்த திசையை உற்றுப் பார்த்தது.

“ஐயோ பூங்குழலி! இது என்ன காரியம்? மாட்டின் மீது கல்லை விட்டெறியலாமா?” என்றான் அமுதன்.

“எறிந்தால் என்ன?”

“வாயில்லாத ஜீவன் ஆயிற்றே! அதற்குத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் தெரியாதே?”

“என் குலத்தில் வாயில்லாத ஊமைப் பெண் ஒருத்தி இருந்தாள்! அவளுடைய மனத்தைப் புண்படுத்தியவர்களை என்ன செய்வது? அவள் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாமையால்தானே, அவளை அரசகுமாரன் ஒருவன் வஞ்சித்து அவளுடைய வாழ்க்கையைப் பாழாக்கினான்?”

“உன் அத்தைக்கு யாரோ செய்த அநீதிக்கு இந்த மாடு என்ன செய்யும்?”

“இந்த மாடு அப்படியொன்றும் நிராதரவான பிராணி அல்ல. இதற்குக் கூரிய கொம்புகள் இருக்கின்றன. தன்னைத் தாக்க வருபவர்களை இது முட்டித் தள்ளலாம். காது கேளாத பேச முடியாத உலகமறியாத ஏழைப் பெண்ணால் என்ன செய்ய முடியும்? என்னிடம் அப்படி ஒரு இராஜகுமாரன் நடந்து கொண்டால் நான் அவனை இலேசில் விடமாட்டேன்!”

“இலேசில் விடமாட்டாய்! காளைமாட்டின் மேல் கல்லை எடுத்தெறிவாய்! அதுவும் கால்வாயில் படகில் இருந்து கொண்டு மாடு உன்கிட்டே வந்து உன்னைமுட்ட முடியாதல்லவா?”

“என்னை முட்ட முடியாவிட்டால் வேறு யாரையாவது அந்தக் காளை முட்டித் தள்ளட்டுமே!”

“உனக்கு யார்மேலோ உள்ள கோபத்தை இந்தக் காளையின் பேரில் காட்டியதுபோல்; அல்லவா?”

இவர்களுடைய சம்பாஷணையை என்னவோ அந்த ரிஷபத்தினால் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், பூங்குழலி கூறியது போலவே கிட்டத்தட்ட அது செய்துவிட்டது. கால்வாயில் இறங்கிப் படகிலிருந்து பூங்குழலியின் மீது அது தன் கோபத்தைக் காட்ட முடியவில்லை. திரும்பித் துள்ளிக் குதித்துக் கொண்டு சென்றது. அச்சமயம் வானதி தென்னந்தோப்பின் மறுபுறத்தில் இருந்த பல்லக்கை நோக்கித் தனியாகப் போய் கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளம் குதூகலத்தினால் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. எதிரில் துள்ளிக் குதித்துக் கொண்டு வந்த ரிஷபராஜனைப் பார்த்ததும் முதலில் அவள் குதூகலம் அதிகமாயிற்று. ஆனால் ரிஷபராஜன் தலையைக் குனிந்து கொண்டு, கொம்பை நீட்டிக்கொண்டு, வாலைத் தூக்கிக் கொண்டு தன்னை நோக்கி வருவதைக் கண்டதும் பயந்து போனாள். கால்வாய்க் கரையை நோக்கித் திரும்பி ஓடிவருவதைத் தவிர வேறு வழியில்லை. நந்தி மண்டபத்துக்கு வெகு சமீபத்தில் கால்வாய்க் கரைக்கு அவள் வந்து விட்டாள். அப்புறம் மேலே செல்லமுடியவில்லை. ஏனெனில், கரையிலிருந்து கால்வாய் ஒரே கிடுகிடு பள்ளமாயிருந்தது. கரையோரமாக நந்தி மண்டபத்துக்கு வரலாம் என்று திரும்பினாள். அச்சமயம் ரிஷபம் அவளுக்கு வெகு சமீபத்தில் வந்திருந்தது. பின்புறமாக நகர்ந்து கால்வாயில் விழுவதைத் தவிர வேறு மார்க்கம் ஒன்றும் இல்லை. அப்போதுதான், “ஐயோ! ஐயோ! அக்கா! அக்கா!” என்று அவள் கத்தினாள். வானதியின் அந்த அபயக் குரல் பொன்னியின் செல்வன், குந்தவை இவர்களின் காதில் வந்து விழுந்தது.

வானதியின் அபயக் குரல் வந்த திசையைப் பொன்னியின் செல்வனும் குந்தவையும் திடுக்கிட்டு நோக்கினார்கள். அவர்கள் இருந்த நந்தி மண்டபத்துக்குச் சற்றுத் தூரத்தில், கால்வாயின் உயரமான கரையில் வானதி தோன்றினாள். கால்வாயின் பக்கம் அவள் முதுகு இருந்தது. அவள் தனக்கு எதிரே ஒரு பயங்கரமான பொருளைப் பார்ப்பவள் போலக் காணப்பட்டாள். அவளை அவ்விதம் பயங்கரப்படுத்தியது என்னவென்பது மறுகணமே தெரிந்து விட்டது “அம்ம்ம்ம்மா!” என்ற கம்பீரமான குரல் கொடுத்துக் கொண்டு, அவளுக்கு எதிரில் ரிஷபராஜன் தோன்றினான்.

இன்னும் ஒரு அடி வானதி பின்னால் எடுத்து வைத்தால் அவள் கால்வாயில் விழ வேண்டியதுதான். பின்னால் நகருவதைத் தவிர அவளுக்கு வேறு வழியும் இல்லை. இதையெல்லாம் அருள்வர்மன் பார்த்த தட்சணமே அறிந்து கொண்டான். உடனே நந்தி மண்டபத்தின் படிக்கட்டிலிருந்து கால்வாயில் குதித்து மின்னலைப் போல் பாய்ந்து ஓடினான். வானதி கால்வாயின் கரையிலிருந்து விழுவதற்கும், அருள்வர்மன் கீழே ஓடிப் போய்ச் சேர்வதற்கும் சரியாக இருந்தது. கால்வாயின் தண்ணீரில் வானதி தலைகுப்புற விழுந்து விடாமல், இரு கரங்களாலும் அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

வானதிக்கு நேருவதற்கு இருந்த அபாயத்தை அறிந்து ஒரு கணம் குந்தவை உள்ளம் பதைத்துத் துடிதுடித்தாள். மறுகணம் அருள்மொழிவர்மன் அவளைத் தாங்கிக் கொண்டதைப் பார்த்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தாள். வேலும் வாளும் வீசி, வஜ்ராயுதம் போல் வலுப்பெற்றிருந்த கைகளில் துவண்ட கொடியைப் போல் கிடந்த வானதியைத் தூக்கிக் கொண்டு அருள்வர்மன் குந்தவையின் அருகில் வந்தான்.

“அக்கா! இதோ உன் தோழியை வாங்கிக்கொள்! கொடும்பாளூர் வீரவேளிர் குலத்தில் இந்தப் பெண் எப்படித் தான் பிறந்தாளோ, தெரியவில்லை!” என்றான்.

“தம்பி! இது என்ன காரியம் செய்தாய்? கல்யாணம் ஆகாத கன்னிப்பெண்ணை நீ இப்படிக் கையினால் தொடலாமா?” என்றாள் குந்தவை.

“கடவுளே! அது ஒரு குற்றமா? பின்னே, இவள் தண்ணீரில் தலைகீழாக விழுந்து முழுகியிருக்க வேண்டும் என்கிறாயா? நல்ல வேளை! இவளை நான் தாங்கிப் பிடித்தது இவளுக்குத் தெரியாது. விழும்போதே மூர்ச்சையாகி விட்டாள்! இந்தா, பிடித்துக்கொள்!” என்றான் அருள்வர்மன்.

வானதி கலகலவென்று சிரித்தாள். சிரித்துக்கொண்டே அவன் கரங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு கரையில் குதித்தாள்.

“அடி கள்ளி! நீ நல்ல நினைவோடுதான் இருந்தாயா?” என்றாள் குந்தவை.

“கண்ணை மூடிக்கொண்டு மூர்ச்சையடைந்ததுபோல் ஏன் பாசாங்கு செய்தாள் என்று கேள், அக்கா!” என்றான் பொன்னியின் செல்வன்.

“நான் ஒன்றும் பாசாங்கு செய்யவில்லை, அக்கா! இவர் என்னைத் தொட்டதும் எனக்குக் கூச்சமாய்ப் போய்விட்டது. வெட்கம் தாங்காமல் கண்களை மூடிக்கொண்டேன்!”

“அது எனக்கு எப்படித் தெரியும்? மூர்ச்சை போட்டு விழுவது உன் தோழிக்கு வழக்கமாயிற்றே என்று பார்த்தேன்.”

“இனிமேல் நான் மூர்ச்சை போட்டு விழமாட்டேன். அப்படி விழுந்தாலும் இவர் இருக்குமிடத்தில் விழமாட்டேன். அக்கா! இன்று இவருக்கு நான் செய்த உதவியை மட்டும் இவர் என்றைக்கும் மறவாமலிருக்கட்டும்!” என்றாள் வானதி.

“என்ன? என்ன? இவள் எனக்கு உதவி செய்தாளா? அழகாயிருக்கிறதே?” என்றான் அருள்வர்மன்.

குந்தவையும் சிறிது திகைப்புடன் வானதியை நோக்கி “என்னடி சொல்கிறாய்? என் தம்பி உனக்குச் செய்த உதவியை என்றும் மறக்கமாட்டேன் என்று சொல்கிறாயா?” என்றாள்.

“இல்லவே இல்லை. அக்கா! நான்தான் உங்கள் தம்பிக்குப் பெரிய உதவி செய்தேன். இவர் அதற்காக என்னிடம் என்றைக்கும் நன்றி செலுத்தியே தீரவேண்டும்!”

“நான் இவளைக் கால்வாயில் விழாமல் காப்பாற்றியதற்காக இவளுக்கு நான் நன்றி செலுத்த வேண்டுமா? உன் தோழிக்கு ஏதாவது சித்தக் கோளாறு உண்டா அக்கா?” என்றான் பொன்னியின் செல்வன்.

“என் சித்தம் சரியாகத்தான் இருக்கிறது! இவருக்குத்தான் மனம் குழம்பியிருக்கிறது. புரியும்படி சொல்லுகிறேன், இவர் சிறு வயதில் ஒரு சமயம் காவேரியில் விழுந்தார் என்றும், ஒரு பெண் இவரை எடுத்துக் காப்பாற்றினாள் என்றும் சொன்னீர்கள். மறுபடி இவர் கடலில் விழுந்து தத்தளித்தார்! அங்கேயும் ஒரு ஓடக்காரப் பெண் வந்து இவரைக் காப்பாற்றினாள். இப்படிப் பெண்களால் காப்பாற்றப்படுவதே இவருக்கு வழக்கமாகப் போய்விட்டது. அந்த அபகீர்த்தி மறைவதற்கு நான் இவருக்கு உதவி செய்தேன். கால்வாயில் விழப்போன ஒரு பெண்ணை இவர் தடுத்துக் காப்பாற்றினார் என்ற புகழை அளித்தேன் அல்லவா! அதற்காக இவர் என்னிடம் நன்றி செலுத்த வேண்டாமா?”

இவ்விதம் கூறிவிட்டு வானதி சிரித்தாள். அதைக் கேட்ட குந்தவையும் சிரித்தாள். பொன்னியின் செல்வனும் சிரிப்பை அடக்கப் பார்த்து முடியாமல் ‘குபீர்’ என்று வாய்விட்டுச் சிரித்தான். அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து சிரித்த சிரிப்பின் ஒலி நந்தி மண்டபத்தைக் கடந்து, வான முகடு வரையில் சென்று எதிரொலி செய்தது.

படகில் இருந்தவர்களின் காதிலும் அந்தச் சிரிப்பின் ஒலி கேட்டது. “அமுதா! அந்த மூன்று பைத்தியங்களும் சிரிப்பதைக் கேட்டாயா?” என்று சொல்லிவிட்டுப் பூங்குழலியும் சிரித்தாள். அமுதனும் அவளுடன் கூடச் சிரித்தான். தென்னந்தோப்பில் வாசம் செய்த பட்சிகள் ‘கிளுகிளு கிளுகிளு’ என்று ஒலி செய்து சிரித்தன.

இத்தனை நேரமும் கால்வாயின் கரைமீது கம்பீரமாய் நின்ற காளையும் ஒரு ஹுங்காரம் செய்து சிரித்து விட்டுச் சென்றது.

கடல் அலைகள் கம்பீரமாகச் சிரித்தன. கடலிலிருந்து வந்த குளிர்ந்த காற்றும் மிருதுவான குரலில் சிரித்து மகிழ்ந்தது.

results matching ""

    No results matching ""