அத்தியாயம் 23 - வானதி

கொடும்பாளூர் இளவரசியின் அழகை வர்ணிக்கும்படி கவிஞர்களைக் கேட்டால் அவர்கள் அந்த மங்கை நல்லாளின் அழகை அந்தி மாலையின் சௌந்தரியத்துக்கு ஒப்பிடுவார்கள். பகற்பொழுது சென்று மாலை மங்கிவரும் போது மனதில் ஒரு சோகமுமேற்படுகிறது; கூடவே ஓர் அமைதியான இன்பமும் தோன்றுகிறது. ஆதவனின் இறுதிக் கிரணங்கள் மெலிந்து மறைந்த பிறகு, இரவின் இருள் நாலாபுறமும் கவிந்து வருகிறது. இதனால் மனத்தில் தோன்றும் சோர்வைப் போக்கிக் கொள்வதற்கு வானத்தை நோக்கினால் போதும், கண்ணிமைக்கும் நேரத்தில் வானமாதேவி ஏற்றிவைக்கும் கோடானுகோடிச் சுடர் விளக்குகள் எவ்வளவு ஆனந்தத்தை அளிக்கின்றன! சூரியனுடைய தகிக்கும் ஜோதியைப்போல் அவை கண்களைக் கூசச் செய்வதில்லையே? கண்களால் அவற்றைப் பார்த்து இன்புறலாமே? சந்திரனும் உதயமாகி விட்டாலோ, கேட்கவேண்டியதில்லையே. முத்துச் சுடர்போன்ற முழுமதியின் நிலவில் உலகம் பூரிக்கிறது; உள்ளமும் உடலும் பூரிக்கின்றன. மாலை வந்ததும் தாமரைகள் கூம்புவது என்னவோ உண்மைதான். ஆனால் விண்மீன்களுடன் போட்டியிடுவதுபோல் மல்லிகை மொட்டுக்கள் வெடித்து மலர்ந்து அவற்றின் நறுமணத்தினால் வானமும் பூமியும் போதை கொள்கின்றன அல்லவா?

அஸ்தமித்ததும் பட்சிகளின் குதூகலத்வனிகள் ஓய்ந்து விடுகின்றன என்பது உண்மைதான். ஆனால், அதோ தேவாலயத்திலிருந்து வரும் சேமக்கலச் சத்தமும், நாதஸ்வர வாத்தியத்தின் இன்னிசையும், இப்போது எவ்வளவு மதுரமாயிருக்கின்றன! மணிமாடங்களின் மீதிருந்து மென்மையான விரல்கள் மீட்டும் வீணையும், யாழும் எத்தகைய இன்ப கீதத்தை எழுப்புகின்றன!

கொடும்பாளூர் இளவரசி வானதியின் அழகில் இப்படியே சோகத்தின் சாயலும், களிப்பின் மெருகும் இனம் தெரியாதபடி கலந்து போயிருந்தன. அழகுக்கு ஒத்தபடி அவளுடைய சுபாவமும் இரு வகைப்பட்டிருந்தது. ஒரு சமயம் அவளைப் பார்த்தால் துயரமே உருக்கொண்ட சந்திரமதியையும், சாவித்திரியையும் போல் இருக்கும். இன்னொரு சமயம் பார்த்தால் அரம்பையும், ஊர்வசியும் தேவருலகில் இப்படித்தான் ஆடிப்பாடிக்கொண்டு காதலில் களித்த மாதவியைப் போல் ஒரு சமயம் அவள் இன்ப உயிர்ச் சிலையாக விளங்குவாள். மற்றொரு சமயம் கணவனைப் பறிகொடுத்த கண்ணகியின் சோகவடிவம் இதுதானோ என்று கருதும்படி இருக்கும். ஒரு சமயம் மாலை வடிவேலரின் மையலுக்கு உள்ளாகி இதயம் கலந்து நின்ற வள்ளியைப்போல் தோன்றுவாள். இன்னொரு சமயம் தேவலோகமெல்லாம் களிக் கூத்தாடும்படி கார்த்திகேயருக்கு மாலையிட்டு மகிழ்ந்த தெய்வயானை இவளேதான் என்று எண்ணி மகிழும்படி ஆனந்த உருவாகி விளங்குவாள்.

சேர்ந்தாற்போல் பல தினங்கள் வானதியின் முகத்தில் ஒரு சிறு புன்னகையைக்கூடக் காணமுடியாது. வேறு சில நாட்களில் அவள் ஓயாது சிரித்துக் கொண்டேயிருப்பாள். அந்தச் சிரிப்பின் ஒலி கோடானு கோடி நுண் துளிகளாகிக் காற்று வெளியில் கலந்து உலகத்தையே ஆனந்தப் பரவசப்படுத்தும்.

வானதியின் இத்தகைய இருவகைச் சுபாவத்துக்குக் காரணம் அவளுடைய பிறந்த வேளையும் வளர்ந்த காலமும் என்று ஊகிக்கலாம். அன்னையின் கர்ப்பத்தில் அவள் இருந்தபோது, கொடும்பாளூர் சிறிய வேளார், கொடிய போர்களில் ஈடுபட்டிருந்தார். வெற்றிச் செய்தியும், தோல்விச் செய்தியும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. இவை அவளுடைய அன்னையின் உள்ளத்தில் களிப்பையும், துயரத்தையும் மாற்றி மாற்றி உண்டாக்கின. வானதி பிறந்த சில காலத்துக்குப் பிறகு அவளுடைய அன்னை காலமானாள். பிறகு வானதியை அவளுடைய தந்தை கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து வந்தார். ஆனால் இதுவும் நீடித்திருக்கவில்லை. வீராதி வீரராகிய வானதியின் தந்தை அருமை மகளை முன்னிட்டுக்கூட அரண்மனையிலேயே உட்கார்ந்திருக்க விரும்பவில்லை. வீரபாண்டியன் ஓடி ஒளிந்த பிறகு, அவனுக்குத் துணைவந்த ஈழத்துப் படைகளைத் துரத்திக் கொண்டு இலங்கை சென்றார். அங்கே போர்க்களத்தில் உயிர் நீத்து, சரித்திரத்தில் ‘ஈழத்துப் பட்ட சிறிய வேளார்’ என்ற பட்டப்பெயர் பெற்றார்.

பின்னர், வானதியின் வாழ்க்கை சிலகாலம் ஒரே துயரமாயிருந்தது. தாயை இழந்து, தகப்பனாரால் வளர்க்கப்பட்ட பெண்கள்தான் அந்தச் சோக உணர்ச்சி எத்தகையது என்பதை அறிய முடியும். பெற்றோரில்லாப் பெண் கொடும்பாளூர் அரண்மனையில் சீராட்டி வளர்க்கப்பட்டாலும், அவளுடைய உள்ளத்தில் தந்தை பெற்றிருந்த இடத்தை யாரும் பெற முடியவில்லை. அதற்குப் பலரும் பலவிதமாக ஆறுதல் கூறினார்கள். “வருந்தாதே குழந்தை! உன் தந்தை உன் வயிற்றில் வந்து மீண்டும் வீரமகனாகப் பிறப்பார்; உலகம் வியக்கும்படியான அற்புத வீரச்செயல்களைப் புரிவார்” என்று ஒருவர் கூறினார்.

இவ்வார்த்தைகள் வானதியின் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்து வேரூன்றின. அருமைத் தந்தையைப் பிரிந்ததினால் ஏற்பட்ட துயரத்தையும், சோர்வையும் கற்பனை மகனைப் பற்றி எண்ணுவதிலே போக்கிக் கொள்ள முயன்றாள். அதில் ஓரளவு வெற்றியும் அடைந்தாள்.

தனக்குப் பிறக்கும் குமரன் எப்படி எப்படி இருப்பான். எந்தெந்த மாதிரி நடப்பான், எத்தகைய வீரச்செயல்களைப் புரிவான் என்ற மனோராஜ்யத்தில் நாள் கணக்காக மூழ்கி விடுவாள். கற்பனைக் கண்ணின் மூலமாக, அந்த வீரமகன் தூர தூர தேசங்களுக்குச் சென்று மாபெரும் யுத்தங்களில் வெற்றி பெறுவதைப் பார்த்தாள். வேகமாகத் திரும்பி வந்து அவன் அடைந்த வெற்றியின் காணிக்கைகளை எல்லாம் தன்னுடைய காலடியில் சமர்ப்பிப்பதைப் பார்த்தாள். அவன் மணிமுடி தரித்து வீர சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். ராஜாதி ராஜாக்கள் வந்து அவனுக்குக் கப்பம் கட்டி அடிபணிவதைப் பார்த்தாள். அவனுடைய திருமுகத்தைக் கண்டதும் ஜனத்திரள்கள் பூரண சந்திரனைக் கண்ட மாகடலைப் போல் பொங்கி எழுந்து, அலைமோதி ஆரவாரிப்பதைப் பார்த்தாள். நூறு நூறு கப்பல்களின் வீரர்களை ஏற்றிக் கொண்டு அவன் கடல்களைக் கடந்து சென்று அப்பாலுள்ள நாடுகளிலே வெற்றிக்கொடி நாட்டுவதைப் பார்த்தாள். “அன்னையே! நான் அடைந்துள்ள இத்தனை பெருமைக்கும் காரணம் நீயே அல்லவோ!” என்று தன்னிடம் அடிக்கடி அவ்வீரமகன் வந்து கூறுவதையும் கேட்டாள்.

அந்த அறியாத பேதைப் பெண் சில சமயம் தன் ஆலிலை வயிற்றைத் தொட்டுத் தடவிப் பார்த்துக் கொள்வாள். தன் கற்பனை மகன் ஒரு வேளை வயிற்றில் வந்துவிட்டானோ என்றுதான். பழந்தமிழ் நாட்டில் ஆண்கள், பெண்கள் அனைவரும் பாரதக் கதையைக் கேட்டு அறிந்திருக்கிறார்கள். குந்திதேவி குழந்தை பெற்ற விதத்தைப் பற்றியும் கேட்டிருந்தார்கள். அதுபோல் எந்தத் தெய்வம் வந்து தனக்குக் குழந்தை வரம் கொடுக்கப் போகிறது என்று எண்ணி எண்ணி அவள் வியப்பதுண்டு. அப்போதெல்லாம் யாரையும் மணந்து கொள்வதைப் பற்றியே அவள் எண்ணவில்லை. வயது வந்த பிறகு, உலகம் ஓரளவு தெரிந்த பிறகு, கணவன் ஒருவனை மணந்தேயாக வேண்டும் என்றும், அவன் மூலமாகவே குழந்தைப் பேற்றை அடைய வேண்டும் என்றும் அறிந்தாள். அப்போதும் கணவனைப்பற்றி அதிகமாக மனோராஜ்யம் செய்யவில்லை.

பழையாறை அரண்மனைக்குப் போனபிறகு அவளுடைய வாழ்க்கையிலும், மனப்போக்கிலும் மாறுதல் ஏற்பட்டது. குந்தவைதேவியின் பெருமிதம் கலந்த அன்பு அவளுக்கு ஆறுதலும், குதூகலமும் அளித்தன. குந்தவையின் நாகரிக நடை உடை பாவனைகளும் சாதுர்யப் பேச்சுக்களும் வானதியை அவள் இதுவரை அறியாத வேறொரு உலகத்துக்குக் கொண்டு போயின. அவளைப் போலவே பழையாறை அரண்மனைக்கு வந்திருந்த மற்ற அரச குலப்பெண்களின் அசூயை அவளுக்கு வாழ்க்கையில் ஒரு புதிய ஆர்வத்தை உண்டாக்கியது. அவர்கள் அசூயைப்படும் படியாகத் தன்னிடம் ஏதோ மகிமை இருக்கவேண்டும் என்று அவளுடைய உள்மனம் உணர்த்தியது. அதே சமயத்தில் அவளுடைய இயற்கையாகப் பிறந்த இனிய சுபாவமும் பெருந்தன்மையும் எல்லோருடனும் நல்லபடியாக நடந்துகொள்ள அவளைத் தூண்டின. இத்தனைக்கும் நடுவில், வானதி தனக்குப் பிறக்கப்போகும் வீர மகனைப் பற்றி இன்பக் கனவு காண்பதை மட்டும் விட்டுவிடவில்லை.

இதற்கிடையிலேதான் அவள் பொன்னியின் செல்வரைப் பார்க்கும்படி நேர்ந்தது. அதன் பலனாக அவளுடைய மனக்கோட்டைகள் எல்லாம் பொலபொல என்று தகர்ந்து விழுந்தன. கணவனை அடைந்த பின்னர்தான் மகனைப் பெற முடியும் என்று அவள் அறிந்திருந்தாள். கணவன் யாராயிருந்தாலும், எப்படிப்பட்டவனாயிருந்தாலும் சரிதான் என்ற அலட்சியப்பான்மை அதற்கு முன்பு அவள் அடி உள்ளத்தில் இருந்தது. ஆனால், இந்தப் பொல்லாத மனத்தை என்ன செய்வது? இது சோழநாட்டு மக்களின் கண்ணுக்குக் கண்ணான இளவரசரிடமல்லவா போய்விட்டது! ஐம்பத்தாறு தேசத்து மன்னர்களும் ‘என் பெண்ணை மணந்து கொள்!’ என்று கெஞ்சிக் கூத்தாடக்கூடிய பெருமை வாய்ந்தவர் அல்லவா அவர்! அத்தகையவர் தன்னைத் திரும்பியும் பார்ப்பாரா? அவரை மணந்துகொள்ளும் பாக்கியத்தைப் பற்றி அவளால் கனவுகூடக் காணமுடியாதே? இளவரசரிடம் இந்தப் பேதை மனம் சென்றபிறகு, இன்னொருவரை மணந்து கொள்வதுதான் எப்படிச் சாத்தியம்! ஆகையால், தன் வயிற்றில் பிறக்கபோகிற வீரகுமாரனைப் பற்றி இத்தனைக் காலமும் அவள் கட்டி வந்த மனக்கோட்டைகள் எல்லாம் சிதறிப் போகத்தானே வேண்டும்? இதையெல்லாம் நினைக்க நினைக்க, அவளுடைய உள்ளம் வெடித்துவிடும் போலிருந்தது. மறுபடியும் பழையபடி சோக வடிவானாள். அவளுடைய மனத்தை அறிந்து கொண்ட இளைய பிராட்டி அவளிடம் விசேஷ அன்பும் ஆதரவும் காட்டினாள். தன்னாலியன்றவரையில் வானதியை உற்சாகப்படுத்த முயன்றாள். பொன்னியின் செல்வரிடம் அவளுடைய உள்ளம் சென்றது அப்படியொன்றும் பிசகான விஷயமில்லையென்றும், நடக்கமுடியாத காரியமும் அல்லவென்றும் குறிப்பாக உணர்த்தி வந்தாள். குடந்தை ஜோதிடர் வானதிக்குப் பிறக்கப்போகும் மகனைப் பற்றிக் கூறியது, அவளுடைய உள்ளக் கனலுக்குத் தூபம் போட்டு வளர்த்தது; அவளுடைய மனோராஜ்யம் மேலும் விரிவடைந்து கொண்டே வந்தது. மனச்சோர்வும் குதூகலமும் மேலும் துரிதமாக மாறி மாறி ஏற்பட்டன. ஏக்கத்தினால் ஏற்பட்ட மனவேதனை பொறுக்க முடியாமலிருந்தது போல், மகிழ்ச்சியினால் ஏற்பட்ட கிளர்ச்சியையும் அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இரண்டும் மிதமிஞ்சிப் போன போது மயக்கம் போட்டு விழுந்தாள்; இயற்கையருளிய இந்த மயக்கமருந்து சாதனத்தினால் அவள் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வந்தாள்.

தஞ்சைக்குச் சென்றிருந்த போது வானதி பார்த்த பராந்தகச் சக்கரவர்த்தி நாடகமும், அன்றிரவு அவள் கேட்ட அபயக் குரலும், கண்ட பயங்கரக் காட்சியும் அவளுடைய மனக்குழப்பத்தை அதிகமாக்கின. கொடும்பாளூர் வம்சத்துக்கும், பழுவூர் சிற்றரசர் குலத்துக்கும் ஏற்பட்டிருந்த தீராத பகையின் அளவை அவள் அன்று நன்கு அறிந்து கொண்டாள். பழுவூர்க்காரர்கள் சோழ நாட்டில் அப்போது அடைந்திருந்த செல்வாக்கின் அளவையும் தெரிந்து கொண்டாள். இளவரசர் அருள் மொழிவர்மர் விஷயத்தில் தன் மனோரதம் ஈடேறப் பழுவேட்டரையர்கள் அநுமதிப்பார்களா? அவர்கள் அநுமதித்தாலும் அவர்கள் வீட்டுப் பெண்கள் சும்மாயிருப்பார்களா? பழுவூர் இளையராணி சம்மதிப்பாளா? அவளுடைய செல்வாக்கும் சக்தியும் உலகம் அறிந்தவை. நந்தினியை நினைக்கும் போதெல்லாம் அழகிய நாகபாம்பின் நினைவு வானதிக்கு வந்தது. இளையபிராட்டியின் பேரில் அவளுடைய பகைமையைப்பற்றி அறிந்து கொண்டிருந்தாள். அது தன் பேரிலும் பாயும் அல்லவா? ஏன், பொன்னியின் செல்வரையே அந்த விஷநாகம் தீண்டினாலும் தீண்டக்கூடும்! நள்ளிரவில் நோயாகப் படுத்திருக்கும் சக்கரவர்த்தியின் முன்னால் நந்தினியையொத்த வடிவம் ஒன்று நின்றதே! அது உண்மையில் நந்தினிதானா? சக்கரவர்த்தி அப்படியெல்லாம் பீதி நிறைந்த குரலில் ஓலமிட்ட காரணம் என்ன? இளையபிராட்டி இதைப்பற்றி யெல்லாம் ஏன் தன்னிடம் எதுவும் பேசுவதற்கு மறுக்கிறாள்! ஆமாம்! இளையபிராட்டியின் மனமும் மாறிப்போயிருக்கிறது. தன்னிடம் முன்பெல்லாம் போல் அவ்வளவு கலகலப்பாகப் பேசுவதில்லை. அடிக்கடி தன்னை விட்டு விட்டுத் தனிமையை நாடிப் போய்விடுகிறார். அவரை ஏதோ பெருங்கவலை பீடித்திருக்கிறது. ஒரு வேளை பொன்னியின் செல்வரைப் பற்றிய கவலைதானோ என்னவோ? அதனாலேதான் தன்னிடம் அதைப்பற்றிச் சொல்வதற்கு மறுக்கிறார் போலும்!

இன்றைக்குக்கூடத் திடீரென்று இளையபிராட்டி காணாமல் போய்விட்டார். அவர் இல்லாத சமயங்களில் இந்தப் பெண்கள் என்ன பாடுபடுத்துகிறார்கள்? என்ன கொட்டம் அடிக்கிறார்கள்? கவலையென்பதை அறியாதவர்கள். எது எப்படிப் போனாலும் அவர்களுடைய கும்மாளத்துக்குக் குறைவு ஒன்றும் கிடையாது. அவர்களுடைய கேலிப் பேசுக்களை வானதியினால் எப்போதுமே சகித்துகொள்ள முடிவதில்லை. அதுவும் இந்த இரண்டு மூன்று தினங்களாக ஒரே சோகக் கடலில் வானதி ஆழ்ந்திருந்தபடியால் அவர்களுடைய வீண் பேச்சுக்கள் அவளுடைய காதில் நாராசமாக விழுந்தன. இளையபிராட்டி எங்கேதான் போயிருப்பார் என்று தேடிக் கொண்டு புறப்பட்டாள். மூத்த மகாராணியின் அரண்மனையில் ஏதோ சபை கூடியிருக்கிறதென்றும், அங்கே போயிருக்கிறார் என்றும் தெரிந்துகொண்டாள். ஆகையால் அந்த அரண்மனைக்குச் சென்றாள். வானதி போவதற்குள், அங்கே சபை கலைந்துவிட்டது. பெரிய மகாராணியும் அவருடைய செல்வப் புதல்வர் மதுராந்தகரும் அந்தரங்கமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்தாள். எதனாலோ இந்தச் செய்தி வானதிக்கு மேலும் கவலை உண்டாக்கியது. அங்கிருந்து மறுபடியும் புறப்பட்டாள். அரண்மனை வாசலில் ஜனத்திரளின் பெரும் இரைச்சல் கேட்டது. விஷயம் இன்னதென்று தெரியவில்லை. இளையபிராட்டியை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தது. அரண்மனையில் சேடிப் பெண்களை ஒவ்வொருத்தியாக விசாரித்தாள். சற்று முன்னால் ஆழ்வார்க்கடியான் என்னும் வீர வைஷ்ணவனுடன் இளைய பிராட்டி அந்தரங்கமாகப் பேசிக்கொண்டிருந்ததாகவும், பிறகு அரண்மனைத் தோட்டத்து ஓடையை நோக்கிச் சென்றதாகவும், ஒரு சேடி கூறினாள். இளைய பிராட்டி தனிமையை நாடிச் செல்லும் சமயங்களில் யாரும் வந்து தொந்தரவு செய்வதை இப்போதெல்லாம் அவர் விரும்புவதில்லை. ஆகையால் ஓடைப் பக்கம் இளையபிராட்டியைத் தேடிக்கொண்டு, போகலாமா வேண்டாமா என்று வானதி தயங்கினாள். அச்சமயம் வாரிணி என்னும் மங்கை ஓட்டமாக ஓடிவந்தாள்.

“பொன்னியின் செல்வர் கடலில் மூழ்கிவிட்டாராம்!” என்ற பயங்கரச் செய்தியைச் சொல்லிவிட்டு அலறி அழுதாள். மற்றப் பெண்களும் இதைக் கேட்டு ‘ஓ’ வென்று கதற தொடங்கினார்கள். வானதிக்கோ முதலில் எவ்வித உணர்ச்சியும் உண்டாகவில்லை. சும்மா நின்றவளை மற்றப் பெண்கள் உற்று நோக்கினார்கள்.

“அடிப்பாவி! உன்னுடைய துரதிஷ்டத்தினால் தான் இளவரசர் கடலில் மூழ்கினார்!” என்று அவ்வளவு கண்களும் அவளை நோக்கி இடித்துச் சொல்வதுபோல் காணப்பட்டன. வானதியினால் அதற்குமேல் பொறுக்க முடியவில்லை. அங்கு நிற்கவும் முடியவில்லை. அரண்மனைத் தோட்டத்து ஓடையை நோக்கி ஓடினாள்.

ஓடையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தபோது வானதியின் உள்ளமும் ஓடிக்கொண்டிருந்தது. “இளவரசர் கடலில் மூழ்கிவிட்டார்” என்ற வார்த்தைகளின் பொருள் அவளுக்கு விளங்கியது. அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை மீறிக்கொண்டு மற்றோர் எண்ணம் மேலேழுந்தது. சென்ற சில தினங்களாத் தண்ணீரைப் பார்க்கும் போதெல்லாம் அதில் இளவரசரின் முகம் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. கரையில் நின்று பார்க்கும் போதெல்லாம் அவருடையே முகம் தத்ரூபமாகத் தண்ணீரில் தோன்றும். தொடுவதற்குப் போனால் மறைந்து விடும். அதன் காரணம் என்னவென்பது வானதிக்குப் புலனாயிற்று.

இளவரசர் கடலில் மூழ்கியபோது என்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்; என்னை அழைத்துமிருக்கிறார். அதை அறியாமல் பாவி நான் கரையிலேயே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்! ஆஹா! என்ன தவறு செய்து விட்டேன்! போனதை நினைப்பதில் இனிப் பயனில்லை. இனிச் செய்யவேண்டியது என்ன?

பேதைப் பெண்ணே! இனிச் செய்யவேண்டியதைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா! யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? அரண்மனைத் தோட்டத்தை யடுத்துள்ள ஓடை அரசலாற்றில் கலக்கிறது. அரசலாறு கடலில் போய்ச் சங்கமமாகிறது. கடலின் அடியில் காத்திருக்கிறார் இளவரசர். எனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார். கடலின் அடியில் முத்துக்களாலும், பவளங்காலும் ஆன அற்புத மாளிகையில் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். அவரைச் சந்திக்கப் போகாமல் இந்த உலகத்தில் எனக்கு வேறென்ன வேலை?… யாருக்காக இங்கே நான் இருக்க வேண்டும்?… இவ்வாறு வானதி தீர்மானம் செய்ததும் வானதியின் உள்ளத்தில் ஒருவித அமைதியே உண்டாகிவிட்டது; அவளது பரப்பரப்பு அடங்கிவிட்டது; துயரம் நீங்கிவிட்டது; கவலை தீர்ந்துவிட்டது. நேரே ஓடைக் கரைக்குச் சென்றாள். பளிங்குக் கல்லினாலான படிக்கட்டுகளில் இறங்கி நின்றாள்; சுற்று முற்றும் பார்த்தாள். அதோ தூரத்தில் படகு ஒன்று வருவது தெரிந்தது. அதில் இருப்பவர் இளையபிராட்டிதான். அவருடன் இருக்கும் ஆடவன் யார்? குடந்தை சோதிடர் வீட்டில் முதலில் சந்தித்து, இலங்கைக்கு ஓலை எடுத்துச் சென்ற வாலிபன் போலத் தோன்றுகிறது. இளவரசரைப் பற்றிய செய்தியைக் கொண்டு வந்தவன் அவன்தான் போலும்! அதனாலேதான் அவனை இளையபிராட்டி தனியாக அழைத்துப் போகிறார்; விவரங்களைக் கேட்டு, அறிந்திருக்கிறார். எனக்குத் தெரிந்தால் கஷ்டப்படுவேன் என்று என்னை விட்டுவிட்டுப் போய் இருக்கிறார். அவர் வந்துவிட்டால் என் இஷ்டப்படி செய்ய முடியாது. ஏதாவது சமாதானம் சொல்லப்பார்ப்பார்; ஆறுதல் கூறப்பார்ப்பார், நான் இளவரசரைப் போய்ச் சேர்வதைக் கட்டாயம் தடுத்துவிடுவார். ஆனாலும், அவரிடம் சொல்லாமல், கடைசியாக ஒரு தடவை விடை பெற்றுக்கொள்ளாமல் போவது நியாயமா? தாய் தந்தையற்ற இந்த அனாதைப் பெண்ணிடம் இத்தனை அன்பாக இருந்தாரே! அவருக்கு ஒரு நன்றி வார்த்தையாவது சொல்ல வேண்டாமா?… முடியாது! இனி ஒரு கணமும் காத்திருக்க முடியாது! இதோ தண்ணீரில் அவர் முகம் தெரிகிறது. இதோ அவருடைய முழு உருவமும் பொலிகிறது. என்னை அவர் அழைக்கிறார்; புன்னகை செய்து கூப்பிடுகிறார். “உன்னை நான் மணம் புரிந்து கொள்வதற்கு எல்லாத் தடைகளும் நீங்கி விட்டன, வா!” என்று அழைக்கிறார். இன்னும் ஏன் தாமதம்?.. ஆகா! தலை ஏன் இப்படிச் சுற்றுகிறது? பாழும் மயக்கம் வருகிறதா, என்ன? மயக்கம் வந்தால் பாதகமில்லை. கரையில் விழாமல் இந்த ஓடைத் தண்ணீரில் விழுந்தால் போதும்!…

வானதியின் மனோரதம் நிறைவேறியது. அவள் தண்ணீரிலேதான் விழுந்தாள். கொதித்துக் கொண்டிருந்த உடம்பு இனிதாகக் குளிர்ந்தது, இதயம் குளிர்ந்தது. கீழே கீழே கீழே போய்க் கொண்டிருந்தாள். எத்தனை தூரம், எத்தனை காலம் போனாள் என்று சொல்லமுடியாது. சில வினாடி நேரமாகவும் இருக்கலாம்; நீண்ட பல யுகங்களாகவும் இருக்கலாம்.

ஆம், கடலின் அடியிலுள்ள அற்புத லோகத்துக்கு அவள் வந்து விட்டாள். நாகலோகம் என்பது இதுதான் போலும்! ஆகா எத்தகைய அழகிய மாளிகைகள்! எத்தனை அடுக்கு மெத்தைகள் முடிவில்லாமல், சிகரம் எங்கே இருக்கிறதென்று தெரியாமல் அல்லவா, இம்மாளிகைகள் உயர்ந்து விளங்குகின்றன! இங்கு உள்ள வெளிச்சம் எதனால் இவ்வளவு குளிர்ந்து மனோரம்மியமாக இருக்கிறது? தண்ணீருக்குள் புகுந்து வருவதால் ஒளிக்கிரணங்களும் குளிர்ந்திருக்கின்றன போலும்! ஒளி எங்கிருந்து வருகிறது? மாளிகைச் சுவர்களிலிருந்தே வருகிறது போலிருக்கிறது! ஆம். அதில் வியப்பில்லைதான்! தங்கத்தினாலும், முத்துக்களாலும், வைர வைடூரியங்களாலும், நாக சர்ப்பங்களின் சிரோரத்தினங்களாலும் ஆன விசித்திர மாட மாளிகைகள் குளிர்ந்த வெளிச்சத்தைப் பரப்புவது இயல்புதானே?

அதோ கூட்டமாக வருகிறவர்கள் யார்? அவர்களுடைய தேகங்கள் எப்படிக் காந்தி மயமாயிருக்கின்றன? முகங்களிலே தான் என்ன தேஜஸ்? இவர்களெல்லாம் தேவலோகத்து ஸ்திரீ புருஷர்களைப் போல் அல்லவா தோற்றமளிக்கிறார்கள்? நாம் வந்திருப்பது ஒரு வேளை நாகலோகமில்லையோ? தேவலோகத்துக்கு வந்துவிட்டோ மோ!…

பிறகு, கனவுக்குள் ஒரு கனவைப்போல சில நிகழ்ச்சிகள் அதிவேகமாக நடந்தேறின. சிங்கார அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்த மணிமண்டபம் ஒன்றுக்கு வானதியை அவர்கள் அழைத்துச் சென்றார்கள். மண்டபத்தில் மத்தியில் பொன்னியின் செல்வர் தமது பொன் முகத்தில் புன்னகை பொலிய நின்று வானதியை வரவேற்றார். தேவ துந்துபிகள் முழங்க, மணிகளும் மலர்களும் பொழிய, மங்கள கோஷங்கள் ஒலிக்க, இளவரசரும் வானதியும் மாலை மாற்றித் திருமணம் புரிந்து கொண்டார்கள். அந்த ஆனந்தத்தின் மிகுதியைத் தாங்க முடியாமல் வானதி மூர்ச்சையாகி விழுந்தாள். வெகுநேரம் நினைவின்றிக் கிடந்த பிறகு இருகரங்கள் அவளைத் தூக்கி எடுத்தன. அக்கரங்கள் பொன்னியின் செல்வருடைய திருக்கரங்கள் என்று முதலில் வானதி கருதினாள். அவர்தான் தன்னைத் தூக்கியெடுத்து, வாரி அணைத்து மடியில் போட்டுக் கொண்டு மூர்ச்சைத் தெளிவிக்கிறார் என்று எண்ணினாள். ஆனால், கைகளிலே வளையல் தட்டுப் பட்டதும் சிறிது ஐயம் உதித்தது. “வானதி! வானதி! இப்படிச் செய்துவிட்டாயே!” என்ற குரலும் பெண்குரலாக ஒலித்தது. மிகமிகப் பிரயத்தனம் செய்து வானதி சிறிதளவு கண்ணிமைகளைத் திறந்து பார்த்தாள். குந்தவையின் முகம் அவள் கண்ணில் பட்டது.

“அக்கா! அக்கா! என் கலியாணத்துக்கு நீங்கள் வந்திருந்தீர்களா? தங்களைக் காணவில்லையே?” என்று வானதியின் வாய் முணுமுணுத்தது.

results matching ""

    No results matching ""