அத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின!
பழுவூர்ச் சகோதரர்கள் மீது தஞ்சைபுரிவாசிகள் தனிப்பட்ட அபிமானம் வைத்திருந்தார்கள். அந்தப் பழைய நகருக்குப் புதிய பெருமையும் செல்வாக்கும் அளித்தவர்கள் பழுவேட்டரையர்கள் அல்லவா?
யானை, குதிரை, ஒட்டகைகளுடன் பவனி என்றால், எந்த நாளிலும் ஜனங்களுக்கு வேடிக்கை பார்ப்பதில் குதூகலந்தான். அதிலும் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையர் தஞ்சையை விட்டு வெளியே போனாலும் சரி, வெளியே போயிருந்து கோட்டைக்குள் பிரவேசித்தாலும் சரி, வீதியின் இருபுறங்களிலும் ஜனங்கள் திரண்டு நின்று வேடிக்கை பார்ப்பார்கள்; ஜயகோஷம் செய்வார்கள்; வாழ்த்துக் கூறுவார்கள்; பூமாரியும், பொரி மழையும் பொழிவார்கள்.
சாதாரணமாகப் பெரிய சகோதரர் வெளியில் போய்விட்டு வந்தால் இளையவர் கோட்டை வாசலில் வந்து நின்று வரவேற்று அழைத்துச் செல்வார்.
அண்ணனும் தம்பியும் ஒருவரையொருவர் கண்டதும் தழுவிக் கொள்ளும் காட்சி நீலகிரியும் பொதிகை மலையும் ஆலிங்கனம் செய்து கொள்வது போலிருக்கும்.
இருவரும் இரண்டு யானைகள் மீதோ அல்லது குதிரைகளின் மீதோ ஏறிக் கொண்டு அருகருகே சென்றார்களானால், அந்தக் காட்சியைப் பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும்.
பழுவூர்ச் சகோதரர்களைச் சிலர் இரணியனுக்கும் இரண்யாட்சனுக்கும் ஒப்பிட்டு பேசுவார்கள். இன்னும் சிலர் ‘சுந்தோப சுந்தர்கள்’ என்பார்கள். இராமரையும் பரதரையும் ஒத்த அருமைச் சகோதரர்கள் என்றும், வீமனையும் அருச்சுனனையும் ஒத்த வீரச் சகோதரர்கள் என்று கூறுவோரும் உண்டு.
ஆனால் இன்றைக்குப் பெரிய பழுவேட்டரையர் தஞ்சைக் கோட்டைக்குள் பிரவேசித்தபோது அவருடன் வந்த பரிவாரங்கள் வழக்கமான முழக்கங்களைச் செய்தபோதிலும் வீதிகளில் குதூகல ஆரவாரம் இல்லை; ஜனக் கூட்டமும் அதிகமில்லை. சின்னப் பழுவேட்டரையர் கோட்டை வாசலுக்கு அண்ணனை வரவேற்பதற்காக வந்து காத்திருக்கவும் இல்லை.
ஆனால் தனாதிகாரி இதைப் பொருட்படுத்தாமல் நேரே தம்பியின் மாளிகையை நோக்கிச் சென்றார். ஏதோ ஒரு முக்கியமான காரியத்தில் இளையவன் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று அவர் எண்ணினார். ஒருவேளை சக்கரவர்த்தியின் உடல்நிலை ரொம்பக் கேவலமாகி விட்டதோ, அல்லது… அல்லது, ‘பெரிய காரியம்’ தான் நடந்து விட்டதோ என்ற ஐயம் உண்டாயிற்று. ஆகையால், வழக்கத்தை விடத் துரிதமாகவே அவருடைய பரிவார ஊர்வலம் சென்று கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையரின் மாளிகையை அடைந்தது.
மாளிகை வாசலுக்குத் தமையனை வரவேற்க வந்த தளபதியின் முகத்தில் பரபரப்பும் கவலையும் காணப்பட்டன. தமையனுக்கு வணக்கம் செலுத்திப் பிறகு மார்புறத் தழுவிக் கொண்டார். இருவரும் மாளிகைக்குள் சென்றார்கள். நேரே அந்தரங்க மந்திராலோசனை மண்டபத்துக்குள் பிரவேசித்தார்கள்.
இருவரும் தனிப்பட்டதும், ” தம்பி! காலாந்தகா! என்ன ஒரு மாதிரி இருக்கிறாய்? ஏதாவது விசேஷம் உண்டா? சக்கரவர்த்தி சுகமா?” என்று தமையனார் கேட்டார்.
சின்னப் பழுவேட்டரையராகிய காலாந்தக கண்டர், “சக்கரவர்த்தி எப்போதும் போல் இருக்கிறார். அவரது சுகத்தில் அபிவிருத்தியும் இல்லை; சீர்கேடும் இல்லை!” என்றார்.
“பின் ஏன் வாட்டம் அடைந்திருக்கிறது உன் முகம்? ஏன் கோட்டை வாசலுக்கு வரவில்லை? ஊரும் ஒரு மாதிரி சலசலப்புக் குறைந்திருக்கிறதே!” என்று பெரியவர் கேட்டார்.
“அண்ணா! ஒரு சிறு சம்பவம் நடந்திருக்கிறது. பிரமாதம் ஒன்றும் இல்லை. அதைப் பற்றிப் பிற்பாடு சொல்கிறேன். தாங்கள் போன காரியங்களெல்லாம் எப்படி?” என்று காலாந்தககண்டர் கேட்டார்.
“நான் சென்றிருந்த காரியம் பூரண வெற்றிதான். அழைத்திருந்தவர்கள் அவ்வளவு பேரும் கடம்பூருக்கு வந்திருந்தார்கள். எல்லோரும் ஒருமுகமாக உன் மருமகன் மதுராந்தகனே அடுத்த பட்டத்துக்கு உரியவன் என்று ஒப்புக் கொண்டார்கள். ஜயகோஷத்துடன் ஆமோதித்தார்கள். நியாயத்துக்குக் கட்டுப்படவில்லையென்றால் கத்தி எடுத்துப் போர் செய்து உரிமையை நிலைநாட்டவும் அவ்வளவு பேரும் சித்தமாயிருக்கிறார்கள். கொல்லி மழவனும், வணங்காமுடி முனையரையனும் கூட ஒப்புக் கொண்டார்கள் என்றால், நம்முடைய நோக்கம் நிறைவேறுவதற்குத் தடை என்ன? சம்புவரையர் தம் கோட்டை, கொத்தளம், படை, செல்வம் எல்லாவற்றையும் ஈடுபடுத்தச் சித்தமாயிருக்கிறார். அவருடைய மகன் கந்தமாறன் மிகத் தீவிரமாயிருக்கிறான். நடுநாட்டையும் திருமுனைப்பாடி நாட்டையும் பற்றிக் கவலையேயில்லை. சோழ தேசந்தான் எப்போதும் நம் கையில் இருக்கிறது. வேறு என்ன யோசனை? திருக்கோவலூர் மலையமான், பல்லவன் பார்த்திபேந்திரன், கொடும்பாளூர் வேளான் இந்த மூன்று பேருந்தான் ஒருவேளை எதிர்க்கக்கூடும். அவர்களில் கொடும்பாளூரான் இங்கில்லை; இலங்கையில் இருக்கிறான். மற்ற இருவராலும் என்ன புரட்டிவிட முடியும்? கூடிய சீக்கிரத்தில் சக்கரவர்த்தியிடம் சொல்லி உடனே முடிவு செய்துவிட வேண்டியதுதான்!” என்றார் பெரிய பழுவேட்டரையர்.
“தலைவர்களைப் பற்றித் தாங்கள் சொல்வதெல்லாம் சரி; ஜனங்கள்? ஜனங்கள் ஆட்சேபித்தால்?” என்று கேட்டார் காலாந்தககண்டர்.
“ஆகா! ஜனங்களை யார் கேட்கப் போகிறார்கள்? ஜனங்களைக் கேட்டுக் கொண்டா இராஜ்ய காரியங்கள் நடக்கின்றன? ஜனங்கள் ஆட்சேபிக்கத் துணிந்தால், மறுபடியும் அவர்கள் இம்மாதிரி காரியங்களில் பிரவேசிக்காதபடி செய்துவிட வேண்டும். அப்படி ஒன்று நேரும் என நான் நினைக்கவில்லை. சக்கரவர்த்தியின் விருப்பம் என்றால் பேசாமல் அடங்கி விடுவார்கள். மேலும், அருள்மொழிவர்மன் நல்லவேளையாக இலங்கையில் இருக்கிறான். அவன் இருந்தாலும் ஒருவேளை ஜனங்கள் தங்கள் குருட்டு அபிமானத்தைக் காட்ட முயல்வார்கள். ஆதித்த கரிகாலன் மீது ஜனங்கள் அவ்வளவு பிரேமை கொண்டிருக்கவில்லை. மதுராந்தகன் மீது அவர்களுடைய அபிமானத்தைத் திருப்புவது சுலபம். ‘சிவபக்தன்’, ‘உத்தம குணம் படைத்தவன்’ என்று ஏற்கெனவே பெயர் வாங்கியிருக்கிறான். சுந்தர சோழரின் புதல்வர்கள் இருவரைக் காட்டிலும் உன் மருமகனுடைய முகத்தில் களை அதிகம் என்பதுதான் உனக்குத் தெரியுமே? ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்று கருதும் முட்டாள் ஜனங்கள் ‘மதுராந்தக சக்கரவர்த்தி வாழ்க’ என்று கோஷிக்காவிட்டால்தான் ஆச்சரியமாயிருக்கும். எப்படியிருந்தாலும் நான் ஒருவன் இருக்கும்போது உனக்கு என்ன கவலை….?”
“ஆனால் வேளக்காரப் படை இருக்கிறதே! அவர்களை எப்படிச் சமாளிப்பது?”
“வேளக்காரப் படையார் சுந்தர சோழருக்குத்தான் உயிர்ப் பலி விரதம் எடுத்தவர்களே தவிர, அவருடைய பிள்ளைகளுக்கு அல்லவே? அப்படி அவர்கள் குறுக்கிட்டாலும் உன்னுடைய கோட்டைக் காவல் படை எங்கே போயிற்று? ஒரு நாழிகைப் பொழுதில் அவ்வளவு பேரையும் பிடித்துப் பாதாளச் சிறையில் தள்ள வேண்டியதுதானே?”
“அண்ணா! முக்கியமான எதிர்ப்பு பழையாறையிலிருந்துதான் வரும். அந்தக் கிழவியும் குமரியும் சேர்ந்து என்ன சூழ்ச்சி செய்வார்களோ, தெரியாது. அதைத்தான் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்…”
“தம்பி! காலாந்தகா! போயும் போயும் இரண்டு பெண் பிள்ளைகளுக்கா என்னைப் பயப்படச் சொல்கிறாய்? அவர்களுடைய தந்திர மந்திரங்களுக்கெல்லாம் மாற்று என்னிடம் இருக்கிறது. கவலைப்படாதே!”
“இரண்டு பிள்ளைகளையும் தஞ்சைக்கு வரும்படி அழைப்பு அனுப்ப வேண்டும் என்று சக்கரவர்த்தி கட்டளையிட்டிருக்கிறார்…”
“ஆதித்த கரிகாலன் வரமாட்டான். ஒருவேளை அருள்மொழி தந்தை கட்டளைப்படி புறப்பட்டு வருவான். வந்தால், அவனைத் தடுக்க வேண்டியதுதான்! மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிச் சிம்மாசனத்தில் சகல அதிகாரங்களுடன் ஏற்றிய பிறகுதான் அவர்கள் இருவரும் வந்தால் வரலாம். அதற்கு முன் வரக் கூடாது. இதை என்னிடம் விட்டு விடு! மற்றபடி நீ என்னவோ சிறிய விசேஷம் இங்கே நடந்ததாகச் சொன்னாயே, அது என்ன?”
“காஞ்சியிலிருந்து வாலிபன் ஒருவன் வந்தான். சக்கரவர்த்திக்கு ஒரு ஓலையும் குந்தவைக்கு ஒரு ஓலையும் கொண்டு வந்தான்…”
“அவனை என்ன செய்தாய்? ஓலைகளைப் பிடுங்கிக் கொண்டு அவனைச் சிறைப்படுத்தியிருக்கிறாய் அல்லவா?”
“இல்லை, அண்ணா! கடம்பூரில் தங்களைப் பார்த்ததாகவும், சக்கரவர்த்தியிடம் நேரில் கொடுக்கச் சொன்னதாகவும் கூறினான். அது உண்மையா?”
“ஆகா! வெறும் பொய்! கடம்பூரில் அழையாத வாலிபன் ஒருவன் – கந்தமாறனின் சிநேகிதன் என்று சொல்லிக் கொண்டு வந்திருந்தான். ஆனால் ஓலை கொண்டு வந்திருப்பதாக என்னிடம் சொல்லவே இல்லையே! அவன் முகத்தைப் பார்த்ததுமே சந்தேகித்தேன். அவனிடம் நீ ஏமாந்து போய் விட்டாயா என்ன?”
“ஆம், அண்ணா! ஏமாந்துதான் போய்விட்டேன். தங்கள் பெயரைச் சொன்னதால் ஏமாந்தேன்!”
“அட மூடா! ஏமாந்து என்ன செய்தாய்? ஓலையைச் சக்கரவர்த்தியிடம் கொடுத்து விட்டாயா? அதைப் பார்க்கக் கூட இல்லையா?”
“பார்த்தேன். அதில் ஒன்றுமில்லை. காஞ்சி பொன் மாளிகைக்கு வரும்படி தான் எழுதியிருந்தது. ஓலையைக் கொடுத்து விட்டு அந்த வாலிபன் ஏதோ ‘அபாயம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தான்…”
“பிறகாவது, சந்தேகித்துச் சிறைப்படுத்தவில்லையா?”
“சந்தேகித்தேன்; ஆனால் சிறைப்படுத்தவில்லை!”
“பின்னே, என்ன செய்தாய்?”
“ஊர் பார்க்க வேண்டும் என்றான். பார்த்துவிட்டு வரட்டும் என்று இரண்டு ஆளையும் பின்னோடு அனுப்பினேன். அவர்களை ஏமாற்றி விட்டு மறைந்து விட்டான். அவனைத் தேடுவதற்குத்தான் ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். அதனால்தான் கோட்டை வாசலுக்குக் கூட வரவில்லை! நகர மக்களுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறேன்…”
“அட சீ! நீயும் ஒரு மனிதனா? மீசை முளைக்காத ஒரு சிறு பிள்ளையிடமா ஏமாந்து போனாய்? உனக்குக் காலாந்தககண்டன் என்று பெயர் வைத்தேனே, என் முட்டாள்தனத்தை நொந்து கொள்ள வேண்டும். உன்னைக் கோட்டைத் தளபதியாக்கினேனே? எனக்கு இது வேண்டியதுதான்! என் பெயரைச் சொல்லி ஒரு தறுதலைப் பயல் உன்னை ஏமாற்றி விட்டான் என்று சொல்லிக் கொள்ள வெட்கமாயில்லையா?”
“வெறுமனே உங்கள் பெயரைச் சொன்னதோடு இல்லை. உங்கள் முத்திரை மோதிரத்தையும் காட்டினான். அதை அவனுக்கு நீங்கள் கொடுத்தீர்களா?”
“இல்லவே இல்லை! அப்படியெல்லாம் ஏமாந்து விட நான் உன்னைப் போல் ஏமாளியா?”
“அவனிடம் முத்திரை மோதிரம் இருந்தது உண்மை. என்னிடமும் காட்டினான். கோட்டை வாசல் காவலர்களிடமும் காட்டி விட்டுத்தான் உள்ளே புகுந்தான். நீங்கள் கொடுத்திராவிட்டால், இன்னும் ஒரே ஒரு இடத்திலிருந்துதான் அதை அவன் பெற்றிருக்க முடியும்.”
“யாரைச் சொல்கிறாய்?”
“தங்களால் ஊகிக்க முடியவில்லையா? இளையராணியைத்தான் சொல்கிறேன்…”
“சீச்சீ! ஜாக்கிரதை! நாக்கை அறுத்து விடுவேன்!”
“நாக்கை அறுத்தாலும் அறுங்கள்; தலையைக் கொய்தாலும் கொய்யுங்கள். வெகு நாளாய்ச் சொல்ல விரும்பியதை இப்போது சொல்லி விடுகிறேன். விஷ நாகத்தை அழகாயிருக்கிறது என்று எண்ணி வீட்டில் வைத்து வளர்க்கிறீர்கள். அது ஒருநாள் கடிக்கத்தான் போகிறது. நம் எல்லோரையும் நாசம் செய்யப் போகிறது! வேண்டாம்! அவளைத் துரத்தி விட்டு மறு காரியம் பாருங்கள்!”
“காலாந்தககண்டா! வெகு நாளாக உனக்குச் சொல்ல எண்ணியிருந்த ஒரு விஷயத்தை நானும் உனக்கு இன்று சொல்லுகிறேன். வேறு எந்தக் காரியத்தைப் பற்றி வேண்டுமானாலும் உன் அபிப்ராயத்தை நீ தாராளமாய்ச் சொல்லலாம். என் காரியம் பிடிக்காவிட்டால் தைரியமாகக் கண்டித்துப் பேசலாம். ஆனால் நான் கைப்பிடித்து மணந்து கொண்டவளைப் பற்றிக் குறைவாக இனி எப்போதேனும் ஒரு வார்த்தை சொன்னாலும் சரி; உன்னை வளர்த்த இதே கையினால் உன்னைக் கொன்று விடுவேன். உனக்குக் கத்தி பிடிக்கச் சொல்லிக் கொடுத்த நான், உன் கத்தியைப் பிடுங்கியே உன்னை வெட்டிக் கொல்லுவேன்! ஜாக்கிரதை!”
அந்த இரு சகோதரர்களும் அப்போது போட்டுக் கொண்ட ஆத்திரச் சொற்போர் சிங்கமும் சிங்கமும் மோதிப் பயங்கரமான சண்டை பிடிப்பது போலவே இருந்தது. அவர்களுடைய குரலும் சிம்ம கர்ஜனையைப் போலவே முழங்கிற்று. அவர்கள் பேசியது அந்தரங்க மந்திராலோசனை மண்டபத்தில்தான் என்றாலும், வெளியில் காத்திருந்தவர்களுக்கெல்லாம் அவர்களுடைய குரல், விவரம் இன்னதென்று தெரியாமல் இடிமுழக்கம் போல் கேட்டது. அனைவரும் ‘என்ன விபரீதமோ’ என்று நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.