அத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்
கடம்பூர் அரண்மனையில் இரகசிய வழிகளின் வாசல்கள் எவ்வளவு சாமர்த்தியமாக அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை எண்ணி வந்தியத்தேவன் வியந்தான். அரை குறையாக அவற்றைக் குறித்து அறிந்தவன், அவசரமாக இறங்கவோ ஏறவோ முயற்சித்தால் அபாயம் நேரலாம். பாதிப் படிகளில் இறங்கும்போது முதலை நகர்ந்து விட்டால் சுவர் இடுக்கில் அகப்பட்டுக் கொண்டு திண்டாட வேண்டியதாகும்.
முதலை அசையாமல் நிற்கிறதா என்று நிதானித்துப் பார்த்துவிட்டு, வந்தியத்தேவன் துவாரத்தண்டை வந்து கீழே கால் வைக்கப் போனான். ஆ! அது என்ன? பில வழியில் காலடி சத்தம் கேட்கிறதே! வருகிறது யார்? ஒருவேளை ஆழ்வார்க்கடியானாயிருக்குமோ? தன்னைத் தேடி வருகிறானோ? அவன் இங்கு வந்து சேராமல் தடுத்து விடுவதே நல்லது. இல்லை இல்லை, வருகிறவன் ஒருவன் இல்லை. ஐந்தாறு பேர் வருவது போல காலடிச் சத்தம் கேட்கிறது. அப்படியானால் இடும்பன்காரியும் அவனுடைய கூட்டாளிகளுமாயிருக்கலாம். வந்தியத்தேவன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்று மறுபடியும் வாலில்லாக் குரங்கின் பின்னால் மறைந்து கொண்டான். ஆகா! இரகசிய வழியைத் திறந்து வைத்து விட்டு வந்து விட்டோ மே? அதனால் ஏதேனும் சந்தேகம் ஏற்படுமா? இல்லை, இல்லை! நாம் வரும்போது அந்த வழி திறந்துதானிருந்தது. நாம் மேற்படியில் ஏறிய பிறகு தான் வழி மூடிக் கொண்டது! ஆகையால் திறந்திருப்பதே நல்லதாய்ப் போயிற்று. அதோ துவாரத்தின் வழியாகத் தலை ஒன்று தெரிகிறது. இடும்பன்காரியின் தலைதான்! இதோ மேற்படியில் ஒரு காலை வைத்து நின்று சுற்று முற்றும் அவன் பார்க்கிறான். ஒரு கால் மட்டும் கீழே இருக்கிறது. துவாரம் தானாக மூடிக் கொள்ளாமல் இருக்கும் பொருட்டு அப்படி அவன் ஒரு காலைக் கீழ்ப் படியில் வைத்துக் கொண்டிருக்கிறான் போலும்!
அடேடே! இந்தப் பக்கத்தில் என்ன வெளிச்சம்! சுவரில் யானை முகம் இருந்த இடத்தை விட்டுப் பெயர்கிறதே! அந்தப்புர வழி புலப்படுகிறதே! அந்த வாசல் வழியாக வருகிறது யார்? அதோ மணிமேகலையல்லவா தானே கையில் விளக்கு ஏந்திக் கொண்டு வருகிறாள்!
இடும்பன்காரி ஒரே பாய்ச்சலில் மேலேறி வருகிறான்; அவன் வந்த வழி மூடிக்கொள்கிறது. இடும்பன்காரி தன் தலைப்பாகைத் துணியை எடுத்துக் கொண்டு அருகிலேயிருந்த புலியின் மேலுள்ள தூசை அவசரமாகத் தட்டத் தொடங்குகிறான்! இந்நாடகத்தின் முடிவுதான் என்ன?
மணிமேகலை கை விளக்கைத் தூக்கிப் பிடித்து நாலு புறமும் பார்த்தாள். இடும்பன்காரியின் மீது அவள் பார்வை விழுந்ததும் அவனை அதிசயத்துடன் நோக்கினாள். இடும்பன்காரி தூசி தட்டுவதை நிறுத்திவிட்டுப் பதிலுக்கு மணிமேகலையை வியப்புடன் பார்த்தான்.
“தாயே! இது என்ன? இந்த வேளையில் இங்கு எதற்காக வந்தது?” என்றான்.
“இடும்பா; நீதானா? என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று மணிமேகலை வினவினாள்.
“அம்மா! நாளை வருகிற விருந்தாளிகளை இந்த வேட்டை மண்டபத்துக்கு அழைத்து வந்து காட்ட வேண்டியிருக்குமல்லவா? அதற்காகச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன். சின்ன எஜமான் காஞ்சிக்குப் போகும்போது அவ்விதம் கட்டளை இட்டுச் சென்றார்கள்.”
“ஆம், இடும்பா! இந்த அரண்மனையிலேயே சின்ன எஜமானுக்கு உன்னிடமும், என்னிடமுந்தான் நம்பிக்கை. பழுவூர் ராணியம்மாள் தங்கப்போகிற அறையில் ஏற்பாடு சரியாயிருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது இங்கே என்னமோ சத்தம் கேட்டது. நீயாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன், வேறு யாருக்கு இந்த அரண்மனையின் இரகசிய வழிகள் தெரியும்? எத்தனை நேரமாக நீ இங்கே வேலை செய்து கொண்டிருக்கிறாய்?”
“ஒரு நாழிகைக்கு மேலே இருக்கும், தாயே! இன்னும் ஒரு நாழிகை வேலை இருக்கிறது. தாங்கள் தனியாகவா இங்கே வந்தீர்கள் அந்த வாயாடிப் பெண் சந்திரமதி எங்கே?”
“ஏதோ சத்தம் கேட்கிறது என்று நான் அவளைப் போய்த் தந்தையை அழைத்து வரச் சொன்னேன். நீதானே இங்கு இருக்கிறாய்? நான் போய் அவளைத் தடுத்து நிறுத்தி விடுகிறேன்.”
இவ்விதம் சொல்லிக் கொண்டே மணிமேகலை விளக்கைத் தூக்கிப் பிடித்து இடும்பன்காரியின் முக மாறுதலைக் கவனித்தாள். அடுத்தாற் போல், வாலில்லாக் குரங்கை நோக்கினாள். முன்னொரு தடவை அசைந்தது போல், அது அசைந்ததையும் பார்த்துக் கொண்டாள்.
“ஆம், தாயே! எஜமானுக்கு இன்று எவ்வளவோ அலுவல், தாங்கள் போய் அவரைக் கூப்பிட வேண்டாம் என்று சொல்லிவிட்டு நிம்மதியாகப் படுத்துக் கொள்ளுங்கள். எல்லா வேலைகளையும் நானே பார்த்துக் கொள்கிறேன்” என்றான் இடும்பன்காரி. மணிமேகலை மறுபடியும் வந்த வழியே உள்ளே போனாள் இரகசியக் கதவு மூடிக் கொண்டது.
இடும்பன்காரி யானை முகத்தினருகில் சென்று சற்று நேரம் சுவரண்டை காது கொடுத்து உற்றுக் கேட்டான். அடுத்த அறையில் சத்தம் ஒன்றும் இல்லை என்று நிச்சயம் அடைந்த பிறகு திரும்பி வந்தான். பிலத்துவாரத்தைத் திறந்து வைத்துக் கொண்டு இடுப்பு வரை கீழே படிகளில் இறங்கி நின்று கொண்டான். பிலத்துவாரத்தின் உட்புறமிருந்து ஆந்தையின் குரல் கேட்டது. பதிலுக்கு இடும்பன்காரி ஆந்தைக் குரல் ஒன்று கொடுத்தான். பில வழியில் ஆட்கள் நடந்து வரும் சத்தம் கேட்டது. பின்னர் காரியங்கள் வெகு துரிதமாக நடைபெற்றன.
வௌவால் ஒன்று சடசடவென்று சிறகை அடித்துக் கொண்டு பறந்தது. இடும்பன்காரி அதைப் பார்த்தான். பின்னாலிருந்து அவன் பேரில் வாலில்லாக் குரங்கு தடால் என்று விழுந்தது. அது திடீரென்று விழுந்த வேகத்தினால் இடும்பன்காரியின் முழங்கால்கள் மடிந்து அவன் தடுமாறினான். அதனால் இன்னும் இரண்டு படிகள் அவன் கீழே இறங்க வேண்டியதாயிற்று. தன் பேரில் விழுந்தது இன்னதென்று முதலில் இடும்பன்காரிக்குத் தெரியாமையால் அவன் உளறி அடித்துக் கொண்டு கைகளை வீசி உதறினான். பிறகு, உயிரற்ற வாலில்லாக் குரங்கு எப்படியோ தவறித் தன் பேரில் விழுந்திருக்கிறது என்று தெரிந்தது. மனத்தைத் தைரியப்படுத்திக் கொண்டு அதைத் தூக்கி நிறுத்தப் பார்த்தான்.
இதற்குள் உயிருள்ள மனிதனுடைய கரங்கள் போன்ற இரண்டு கண்கள் மேலேயிருந்தது துவாரத்துக்குள் வந்து அவனை இன்னும் கீழே தள்ளி அமுக்கின. இடும்பன்காரியினால் அதை நம்பவே முடியவில்லை. ஒரு கணம் அவனைப் பெரும் பீதி பிடித்துக் கொண்டது. மறுபடியும் மேலும் கீழும் பார்த்தான். வாலில்லாக் குரங்கு தலை கீழாகத் துவார வழியில் இறங்கியிருப்பதையும், அதன் பாதி உடம்பு வரையில் கீழே வந்த பிறகு துவாரக் கதவு நெருங்கி வந்திருப்பதையும் கவனித்தான். இரண்டு மனிதக் கரங்களாகத் தோன்றியவை தன்னுடைய மனப் பிராந்தியாகத்தான் இருக்கவேண்டும் என்று நிச்சயம் செய்து கொண்டான்.
இதற்குள் பிலத்துவாரத்தில் வந்தவர்கள் நெருங்கி வந்து விட்டார்கள். முன்னால் வந்த ரவிதாஸன், “அப்பனே! என்ன இது, எதற்காக இப்படி உளறி அடித்துக் கொண்டு அலறினாய்? அபாயம் ஏதேனும் உண்டா? நாங்கள் திரும்பிப் போகவா?” என்று கேட்டான்.
“வேண்டாம், வேண்டாம்! அபாயம் ஒன்றுமில்லை. பிலத்துவாரக் கதவை திறக்கும்போது, இந்த ராட்சதக் குரங்கு எப்படியோ இடம் பெயர்ந்து என் தலையில் விழுந்து விட்டது! ஒரு கணம் நானும் பீதி அடைந்து விட்டேன். இப்போது இந்தக் குரங்கு மேலேயும் போகாமல் கீழேயும் வராமல் வழியை அடைத்துக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் பொறுங்கள்; இந்தக் குரங்கை அகற்றி வழியைச் சரிப்படுத்திவிடுகிறேன்” என்றான் இடும்பன்காரி.
தடுமாறி விழுந்த இடும்பன்காரியை மேலேயிருந்து அமுக்கித் தள்ளிய கரங்கள் யாருடைய கரங்கள் என்பதை நேயர்கள் ஊகித்திருப்பார்கள். வந்தியத்தேவனுடைய அதிர்ஷ்டம் இச்சந்தர்ப்பத்திலும் அவன் பக்கம் இருந்தது. சரியான சமயத்தில் அவனுக்குச் சரியான யுக்தி தோன்றியது. இடும்பன்காரி பிலத்துவராத்தின் படிகளில் நின்றபடி வௌவாலைப் பார்த்த தருணத்தில் அவன் தலை மீது வாலில்லாக் குரங்கைத் தள்ளினான். பிறகு அவன் தன்னுடைய முகத்தைப் பார்க்க முடியாதபடி நின்று கொண்டு கைகளினால் அவனைப் பிடித்துக் கீழே அமுக்கினான். அதன் பின்னர் வாலில்லாக் குரங்கையும் தலைகீழாகத் துவாரத்தினுள் தள்ளினான். கடைசியாக, முதலையையும் நகர்த்தி விட்டான்.
இவ்வளவையும் சில கண நேரத்தில் செய்து முடித்துவிட்டு வந்தியத்தேவன் யானை முகத்தண்டை ஓடினான். யானைத் தந்தங்களைப் பிடித்துத் தன் பலம் கொண்ட மட்டும் அழுத்தித் திருப்பினான். சுவரில் வழி உண்டாயிற்று ஆனால் மணிமேகலை உள்ளிருந்து வந்தது போன்ற விசாலமான வழி அல்ல. வட்ட வடிவமான குறுகலான வழி; அது கதவுக்குள் கதவாயிருக்கலாம். முழுக் கதவையும் திறப்பது எப்படி என்று யோசிக்க அது சமயம் அல்ல. அதற்குள் சதிகாரக் கூட்டம் வேட்டை மண்டபத்துக்குள் புகுந்து விடலாம் பிறகு தான் தப்புவது துர்லபமாகிவிடும்.
ஆகவே, திறந்த வழி குறுகலான வழியாக இருந்தாலும் அதற்குள் புகுந்து விடவேண்டியதுதான். தீர்மானித்தபடியே காரியத்தில் நிறைவேற்றத் துணிந்து, அந்த வட்ட வடிவமான துவாரத்தில் வந்தியத்தேவன் புகுந்தான். அவனுடைய தலையும் கைகளும் பாதி உடம்பும் உள்ளே வந்து விட்டன. மிச்சம் பாதி உடம்பு உள்ளே புகுந்து பிரயாசையாயிருந்தது. கைகளினால் தாவிப் பிடித்துக் கொள்ள ஒன்றும் அகப்படவில்லை. இச்சமயத்தில் உள்ளேயிருந்த தீபம் அணைந்து இருள் சூழ்ந்தது.
வந்தியத்தேவன் அபயம் கேட்கும் குரலில், “சந்திரமதி! சந்திரமதி! என்னைக் காப்பாற்று!” என்றான்.
கலகலவென்று சிரிக்கும் பெண்ணின் குரல் கேட்டது.
“சந்திரமதி! நீ இங்கே இருந்து கொண்டுதானா வேடிக்கை பார்க்கிறாய்? இது நன்றாயிருக்கிறதா?”
அதற்கு பதிலாக மறுபடியும் சிரிப்பு; அதைத் தொடர்ந்து “நீ இப்படி அந்தப்புரத்தில் திருட்டுத்தனமாக நுழைவது மட்டும் நன்றாயிருக்கிறதா?” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
அது மணிமேகலையின் குரல் என்று வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான். ஆயினும் வேண்டுமென்றே “சந்திரமதி! நீ வரச் சொன்னதினால்தானே வந்தேன்! பின்னால் ஆட்கள் வருகிறார்கள் சீக்கிரம் என்னை எடுத்து விடு இல்லாவிட்டால் விபரீதம் வரும்!” என்றான்.
“சந்திரமதி இவ்வளவு கொட்டிக்காரியா? இருக்கட்டும் உனக்கும் அவளுக்கு சேர்த்துப் புத்தி கற்பிக்கிறேன்!”
“ஓஹோ! தாங்கள் இளவரசி மணிமேகலையா? அம்மணி! இந்த ஒரு தடவை மட்டும் என்னை மன்னித்துக் காப்பாற்றி விடுங்கள்! இனி மேல் இம்மாதிரி தப்புக் காரியம் செய்ய மாட்டேன்! உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு!” என்று கெஞ்சினான் வந்தியத்தேவன்.
இருளில் இரு மெல்லிய கரங்கள் வந்தியத்தேவனுடைய தோள்களைப் பிடித்துத் தாங்கி மெள்ளக் கீழே தரையில் இறக்கிவிட்டன. சுவரில் தோன்றிய துவாரம் மூடிக் கொண்டது.
“இளவரசி! உங்களுக்கு அனந்த கோடி வந்தனம்!” என்றான்.
“கொஞ்சம் பொறு! நான் உன்னை என்ன செய்யப் போகிறேன் என்று தெரிந்து கொண்டு வந்தனம் செலுத்து!”
“தாங்கள் என்னை என்ன செய்தாலும் சரிதான்! கொலைக்காரர்களிடமிருந்து என்னைத் தப்புவித்தீர்களே! அதுவே போதும்! அந்த அரக்கர் கைகளினால் சாவதைக் காட்டிலும் தங்களுடைய மணிக்கரத்தினால் சாகும்படி நேர்ந்தால் அது என்னுடைய பாக்கியம்தான்!
“அடே அப்பா! பெரிய வீராதி வீரனாயிருக்கிறாயே? அப்படி உன்னைத் தேடி வரும் கொலைக்காரர்கள் யார்? கொஞ்சம் பொறு முதலில் விளக்கு ஏற்றி உன் முகம் எப்படியிருக்கிறது என்று பார்க்கிறேன்!”
“அம்மணி! என் முகத்தை மறுபடியும் பார்க்க வேண்டுமா? தாங்கள் கண்ணாடியில் பார்த்துக் கொண்டபோது பின்னால் நின்று பார்த்த குரங்கு முகந்தான் என் முகம்! சந்திரமதி வர்ணித்தாளே?” என்றான் வந்தியத்தேவன்.
இருட்டில் சிரிப்பின் ஒலியும், கை வளைகள் குலுங்கும் ஓசையும் கேட்டன. வந்தியத்தேவன் அந்த அறைக்குள் தலையை நீட்டியபோது அந்த அறையில் எரிந்து கொண்டிருந்த விளக்கை மணிமேகலை மூடிவிட்டாள். அதனால் இருட்டாயிற்று; இப்போது அதன் மூடியை அகற்றியதும் தீபம் சுடர்விட்டு ஒளிர்ந்தது. அதன் ஒளியில் வந்தியத்தேவனுடைய முகத்தைப் பார்த்த வண்ணம் மணிமேகலை மெய்மறந்து நின்றாள். பக்கத்து வேட்டை மண்டபத்திற்குள் தடதடவென்று பலர் பிரவேசிக்கும் சத்தம் அச்சமயம் கேட்டது.