அத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்
மறுநாள் காலையில் உதய சூரியனுடைய செங்கிரணங்கள் வந்தியத்தேவனைத் தட்டி எழுப்பின. உறக்கம் நீங்கிய பிறகும் சுய உணர்வு வருவதற்குச் சிறிது நேரம் பிடித்தது. அவன் மேல் விழுந்தது சூரிய வெளிச்சமா அல்லது கலங்கரை விளக்கின் ஒளியா என்று தெளிவதற்குச் சிறிது நேரம் பிடித்தது. முதல் நாள் இரவு அனுபவங்களில் எது உண்மை, எது கனவு என்று எண்ணிப் பார்த்தபோது அவனுக்கு ஒரே குழப்பமாயிருந்தது. வீட்டிலே பெரியவரின் மனைவியும், அவருடைய மருமகளும் மட்டுமே இருந்தார்கள். பெரியவர் குழகர் கோயிலுக்குப் புஷ்ப கைங்கரியம் செய்வதற்காகப் போயிருப்பதாக அவர்கள் சொன்னார்கள். பூங்குழலியைப் பற்றி அவர்களிடம் விசாரிக்க அவனுக்குத் தைரியம் வரவில்லை. அவர்கள் அளித்த காலை உணவை அருந்திவிட்டுச் சுற்றுமுற்றும் கண்களைச் செலுத்தித் தேடிப் பார்த்தான். பூங்குழலி எங்கும் அகப்படவில்லை. ஆலயத்துக்குப் போய்ப் பார்க்கலாம் என்று போனான். அங்கே அவள் தந்தை இருந்தார். கோயிலைச் சுற்றியிருந்த மரங்களிலிருந்து பூஜைக்குரிய புஷ்பங்களைக் கொய்து கொண்டிருந்தார். மலர்களைத் தொடுத்து மாலையாக்குவதற்குச் சில நாள் பூங்குழலி வருவதுண்டு என்றும், ஆனால் இன்றைக்கு வரவில்லையென்றும் கூறினார்.
“எங்கேயாவது காட்டில் மான்களைக் துரத்திக் கொண்டிருப்பாள். அல்லது கடற்கரையோடு திரிந்து கொண்டிருப்பாள். அவளைத் தேடிப் பிடித்துக் கேட்டுப் பார்!” என்றார்.
“தம்பி! ஒரு விஷயத்தில் ஜாக்கிரதையாக இரு. அவள் பொல்லாதவள், தப்பர்த்தம் செய்து கொள்ளும்படியாக அவளிடம் எதாவது சொல்லிவிடாதே. காவியங்களில் படித்திருப்பதை நினைத்துக்கொண்டு சிருங்கார ரஸத்தில் இறங்கிவிடாதே! உடனே பத்திரகாளியாக மாறி விடுவாள். அப்புறம் உன் உயிர் உன்னுடையது அல்ல!” என்று எச்சரிக்கை செய்தார் பெரியவர்.
முதல்நாள் கனவை நினைத்துக் கொண்டு வந்தியத்தேவன் உடல் சிலிர்த்தான். பிறகு காட்டிற்குள் பூங்குழலியைத் தேடிக்கொண்டு போனான். காட்டிலே எங்கே என்று தேடுவது? சிறிது நேரத்துக்கெல்லாம் அவனுக்கு அலுத்துப் போய்விட்டது. காட்டிலிருந்து வெளியேறினால் போதும் என்று ஆகிவிட்டது. வெளியேறிய பின்னர் கடற்கரையை நோக்கிச் சென்றான். கடற்கரையோடு நீண்ட தூரம் அலைந்தும் பலன் ஒன்றும் இல்லை. பூங்குழலியைக் காணவில்லை. “எப்படியும் மத்தியானச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருவாள் அல்லவா? அங்குப் பார்த்துக் கொள்ளலாம்!” என்று திரும்பினாள். திடீரென்று ஓர் எண்ணம் தோன்றியது. அலையும் ஆட்டமும் அதிகமில்லாமல் அமைதியாக இருந்த அந்தக் கடலில் இறங்கிக் குளிக்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. இந்தப் பக்கத்தில் கடலில் ஆழம் அதிகம் இல்லையென்று முன்னமே கேள்விப்பட்டதுண்டு. முதல்நாள் மாலையில் பூங்குழலியும் சொல்லியிருக்கிறாள். பின்னே, இறங்கிக் குளிப்பதற்கு என்ன தடை? கடல் விஷயத்தில் அவனுக்கிருந்த பயத்தைப் போக்கிக் கொள்வதும் அவசியம். படகிலும், கப்பலிலும் ஏறிப் பிரயாணம் செய்ய வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. கடலைக் கண்டு பயப்பட்டால் முடியுமா? அந்தப் பயத்தைப் போக்கிக் கொண்டே ஆகவேண்டும்.
இடுப்பைச் சுற்றிக் கட்டியிருந்த சுருள் துணியையும் கத்தியையும் எடுத்துக் கடற்கரையில் வைத்துவிட்டுக் கடலில் இறங்கினான். மெள்ள மெள்ள ஜாக்கிரதையாகக் காலை வைத்து நடந்தான். போகப் போக முழங்கால் அளவு ஜலத்துக்கு மேல் இல்லை. சிறிய அலைகள் வந்து மோதிய போது ஜலம் இடுப்பளவுக்கு வந்தது. அதற்கு மேலே இல்லை. “அழகான சமுத்திரம் இது!அமிழ்ந்து குளிப்பதற்குக் கூடத் தண்ணீர் இல்லையே?” என்று சொல்லிக் கொண்டே இன்னும் மேலே சென்றான்.
‘அடேடே! ஆழம் இல்லை என்று எண்ணிக் கொண்டே கரையிலிருந்து வெகுதூரம் வந்து விட்டோமே? திடீரென்று கடல் பொங்கினால்? அலைகள் பெரிதாகி மோதினால்?’ இந்த எண்ணம் தோன்றிக் கரைப் பக்கம் திரும்பிப் பார்த்தான்.
‘அதிக தூரம் கரையிலிருந்து வந்து விட்டது என்னமோ உண்மைதான்! ஆனால் அப்படியொன்றும் கடல் திடீரென்று பொங்கி விடாது!… ஓகோ! அதோ பூங்குழலி வருகிறாளே! கரையேறி அவளைப் பிடித்துக் கொள்ளவேண்டும். பிடித்துக் கொண்டு நயமான வார்த்தைகளினால் மறுபடி கேட்க வேண்டும். அவளும் நம்மைப் பார்த்து விட்டுத்தான் வருகிறாள் போலிருக்கிறது! நாம் இருக்கும் திசையை நோக்கியே வருகிறாள்! ஏதோ நம்மைப் பார்த்து சமிக்ஞைகூடச் செய்கிறாளே!…’
‘ஓ! ஓ! இது என்ன? கரையில் குனிந்து அவள் என்ன பார்க்கிறாள், என்னத்தை எடுக்கிறாள்? நம்முடைய இடுப்பில் சுற்றும் சுருள் துணியையல்லவா எடுக்கிறாள்? பெண்ணே! அதை எடுக்காதே! அது என்னுடையது… நாம் சொல்வது அவள் காதில் விழவேயில்லை! இந்தக் கடல் அலைகளின் இரைச்சல்!
‘இதோ நம் குரல் அவளுக்குக் கேட்டுவிட்டது! நம்மைப் பார்த்து அவளும் ஏதோ சொல்கிறாள்! பூங்குழலி! அது என்னுடையது! எடுக்காதே!…’
‘இந்தா! சொன்னால் கேட்க மாட்டாயா? உன் உடைமை போல் கையில் எடுத்துக் கொண்டு நீ பாட்டுக்குப் போகிறாயே, நில் நில்!…’
வந்தியத்தேவன் கரையை நோக்கி ஓட ஆரம்பித்தான்! ஒரு தடவை பூங்குழலி அவனைத் திரும்பிப் பார்த்தாள். பிறகு அவளும் ஓடத் தொடங்கினாள். வீடும் கலங்கரை விளக்கமும் இருந்த பக்கத்துக்கு எதிர்பக்கமாகக் காட்டை நோக்கி ஓடினாள்!
‘ஆகா! இவள் துஷ்டப் பெண்! துஷ்டப் பெண்ணா? அல்லது வெறும் பைத்தியமா? இந்தப் பைத்தியத்தினிடமிருந்து நமது அரைச்சுருளை எப்படியும் வாங்கியாக வேண்டுமே…?’
இரண்டு தடவை கடலில் இடறி விழுந்து ஒருவாய் உப்புத் தண்ணீரும் குடித்துவிட்டு வந்தியத்தேவன் மெதுவாக கரையேறினான். பிறகு அந்தப் பெண்ணைத் தொடர்ந்து ஓடினான். ஓட ஓட, அவளுடைய ஓட்டத்தின் வேகம் அதிகமாயிற்று. சற்றுத் தூரத்தில் ஐம்பது அறுபது மான்களின் கூட்டம் ஒன்று ஓடியது.
‘மான்கள் மிரண்டு, பாய்ந்து ஓடுவது – தாவித் தாவிக் குதித்து ஓடுவது என்ன அழகான காட்சி! ஏன்? இதோ இந்தப் பெண் குதித்துக் குதித்து ஓடுகிறாளே? இதுவும் அந்த மான்களின் ஓட்டத்தைவிட அழகில் குறைவாயில்லை! இம்மாதிரி இயற்கையாகவும் யதேச்சையாகவும் வாழும் பெண்களின் அழகே அழகுதான்!… ஆனால் இதையெல்லாம் அவளிடம் சொல்லக் கூடாது. சொன்னால் காரியம் கெட்டுப் போய்விடும்! பெரியவர்தான் எச்சரித்திருக்கிறாரே?… இருந்தாலும், இவள் எதற்காக இப்படி வீம்பு பிடித்துக் கொண்டு ஓடுகிறாள்! காட்டில் புகுந்துவிட்டால் அப்புறம் அவளைக் கண்டுபிடிப்பது எப்படி?… இதோ காட்டிற்குள் புகுந்தே விட்டாள். காரியம் கெட்டுக் குட்டிச்சுவராகி விட்டது. நம்மைப் போன்ற மௌடீகன் உலகிலேயே வேறு யாரும் இருக்க முடியாது!… குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை திரும்பி வருமா?’
வந்தியத்தேவனும் சிறிது நேரத்தில் காட்டிற்குள் புகுந்தான். அங்குமிங்கும் அலைந்தான். அவசரத்தினாலும் பரபரப்பினாலும் செடிகளைச் சரியாக விலக்கி விட்டுக் கொண்டு நடக்காமல் உடம்பெல்லாம் முட்களால் கீறிக் கொண்டான். “பூங்குழலி பூங்குழலி!” என்று கூச்சலிட்டான். பிறகு, “மரமே! பூங்குழலியைக் கண்டாயோ?” “காக்காய்! பூங்குழலியைக் கண்டாயோ?” என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தான்.
‘இது எது? நமக்கே பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறதே!’ – என்று அவன் நினைக்கத் தொடங்கிய சமயத்தில், திடீரென்று மரத்தின் மேலிருந்து ஏதோ விழுந்தது!
ஆ! அவனுடைய அரைத் துணிச் சுருள்தான்! மிக்க ஆவலுடன் அதை எடுத்துச் சுருளைப் பிரித்துப் பார்த்தான். ஓலை, பொற்காசுகள் எல்லாம் பத்திரமாயிருந்தன! “பணம் பத்திரமாயிருக்கிறதா?” என்று ஒரு குரல் மேலேயிருந்து வந்தது. வந்தியத்தேவன் அண்ணாந்து பார்த்தான். பூங்குழலி மரக்கிளையில் உட்கார்ந்திருந்தாள்.
வியர்த்து விறுவிறுத்துப் போயிருந்த வந்தியத்தேவன் தன்னை மீறிய கோபத்தினால், “உன்னைப் போன்ற மந்தியை நான் பார்த்ததேயில்லை!” என்றான்.
“உன்னைப் போன்ற ஆந்தையை நான் பார்த்ததில்லை அம்மம்மா! என்ன முழிமுழித்தாய்?” என்றாள் பூங்குழலி.
“எதற்காக இப்படி என்னை அலைக்கழித்தாய்? உனக்குப் பணம் வேண்டுமென்றால்…”
“சீச்சீ! உன் பணம் இங்கே யாருக்கு வேண்டும்?”
“அப்படியானால், எதற்காக இதைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தாய்?”
“அவ்விதம் நான் செய்திராவிட்டால் நீ காட்டுக்குள் வந்திருக்க மாட்டாய். எங்கள் வீட்டுக்கு திரும்பிப் போயிருப்பாய்!”
“போயிருந்தால் என்ன?”
“இந்த மரத்தின் மேல் ஏறிப் பார் தெரியும்!”
“என்ன தெரியும்?”
“பத்துப் பதினைந்து குதிரைகள் தெரியும்! வாள்களும், வேல்களும் மின்னுவது தெரியும்!”
அவளுடைய முகத் தோற்றத்திலிருந்து அவள் கூறுவது உண்மையாயிருக்கலாம் என்று தோன்றியது. ஆயினும் நிச்சயமாகத் தெரிந்துகொள்ள விரும்பி வந்தியத்தேவன் மரத்தின் மேல் ஏறினான். ஏறுவதற்கு முன் அரைச்சுற்றுச் சுருளைக் கெட்டியாகக் கட்டிக் கொண்டான். ஒருவேளை இவள் மரத்தின் மேலிருந்து அதைத் தவறிப் போட்டிருக்கலாம். இப்போது மறுபடியும் அதை அபகரிப்பதற்குச் சூழ்ச்சி செய்கிறாளோ, என்னமோ யார் கண்டது?
மரத்தின் மேலேறிக் கலங்கரை விளக்கின் பக்கம் நோக்கினான். ‘ஆம் பூங்குழலி கூறியதும் உண்மைதான்’ அங்கே பத்துப் பதினைந்து குதிரைகள் நின்றன. குதிரைகள் மீது வாள்களும், வேல்களும் பிடித்த வீரர்கள் இருந்தார்கள்.
‘அவர்கள் யாராக இருக்கும்?… நம்மைப் பிடிப்பதற்கு வந்த பழுவேட்டரையரின் ஆட்கள்தான்! வேறு யாராயிருக்க முடியும்?’
பூங்குழலி தன்னைப் பெரும் அபாயத்திலிருந்து காப்பாற்றினாள். எதற்காக? என்ன நோக்கம் பற்றி? – இன்னும் சில விஷயங்களும் தெளிவாகவில்லை!
இருவரும் மரத்திலிருந்து கீழே இறங்கினார்கள். “பூங்குழலி என்னைப் பேராபத்திலிருந்து காப்பாற்றினாய். உனக்கு மிக மிக நன்றி!” என்றான் வந்தியத்தேவன்.
“வெறும் பொய்! ஆண் பிள்ளைகளுக்கு நன்றிகூட உண்டா?” என்றாள் பூங்குழலி.
“எல்லா ஆண்பிள்ளைகளையும் போல் என்னையும் எண்ணி விடாதே!”
“நீ எல்லோரையும் போல் இல்லை; ஒரு தனி மாதிரிதான்?”
“பெண்ணே! உன்னை ஒரு கேள்வி கேட்கலாமா?”
“தாராளமாகக் கேட்கலாம்; மறுமொழி கூறுவது என் இஷ்டம்.”
“என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று ஏன் எண்ணினாய்? என் பேரில் திடீரென்று தயவு பிறக்கக் காரணம் என்ன?”
பூங்குழலி சும்மா இருந்தாள். அவள் சிறிது திகைத்துப் போனாள் என்பது முகத்திலிருந்து தெரிந்தது.
அப்புறம் யோசித்துப் பார்த்து, “அசடுகளைக் கண்டால் எனக்கு எப்போதும் கொஞ்சம் பரிதாபம் உண்டு” என்றாள்.
“சந்தோஷம்; இந்த வீரர்கள் என்னைத் தேடி வந்திருக்கிறார்கள் என்பதை எப்படி அறிந்தாய்?”
“உன்னைப் பார்த்தால் தெரியவில்லையா? – நீ தப்பி ஓடி ஒளிந்து கொள்ள வந்திருக்கிறவன் என்று நேற்றைக்கே ஊகித்தேன். இன்றைக்குக் காலையில் உன் சிநேகிதன், வைத்தியர் மகன் – மூலமாக அது ஊர்ஜிதமாயிற்று.”
“அவன் என்ன உளறினான்?”
“காலையில் எழுந்ததும் காட்டிலே மூலிகை தேட வேண்டும் என்றான். நான் அழைத்துப் போவதாகச் சொல்லி இங்கே அழைத்துக் கொண்டு வந்தேன். என்னிடத்தில் காதல் புரிய ஆரம்பித்தான். ‘உன்னுடைய சிநேகிதன் உன்னை முந்திக் கொண்டு விட்டானே?’ என்று சொன்னேன்…”
“என்ன சொன்னாய்?”
“கொஞ்சம் பொறு; கேட்டுக் கொண்டு வா! நீ என்னிடம் காதல் புரியத் தொடங்கி விட்டதாகச் சொன்னேன். அப்போது தான் உன் பேரில் அவனுடைய சந்தேகத்தை வெளியிட்டான். ஏதோ இராஜ தண்டனைக்குப் பயந்து நீ ஓடித் தப்பி வந்திருக்கிறாய் என்று அவனுக்கு வழியில் பல காரணங்களால் சந்தேகம் தோன்றியதாம்! ‘அப்படிப்பட்டவனை நம்பி அநியாயமாய்க் கெட்டுப் போகாதே! என்னைக் கலியாணம் செய்து கொள்!’ என்றான். ‘ரொம்ப அவசரப்படுகிறாயே? பெரியவர்களைக் கேட்க வேண்டாமா?’ என்றேன். ‘பழந்தமிழ் மரபையொட்டிக் களவு மணம் புரிந்து கொள்வோம்!’ என்று உன் அழகான சிநேகிதன் சொன்னான். எப்படியிருக்கிறது கதை?”
“அட சண்டாளப் பாவி!” என்று கத்தினான் வந்தியத்தேவன்.
“இதற்குள்ளே குதிரைகள் வரும் சத்தம் கேட்டது. நான் மரத்தின் மேல் ஏறிப் பார்க்கச் சொன்னேன். மரத்தின் மேலே நின்று பார்த்தபோது அவனுடைய கால்கள் வெட வெட வென்று நடுங்கியதை நினைத்தால் இப்போதும் எனக்குச் சிரிப்பு வருகிறது” என்று சொல்லி விட்டுப் பூங்குழலி சிரித்தாள்.
“விளையாட்டு இருக்கட்டும்; அப்புறம் என்ன நடந்தது?”
“அவன் மரத்தின் மேலேயிருந்து இறங்கி வந்தான். ‘பார்த்தாயா? நான் சொன்னது சரியாகப் போயிற்று. அவனைப் பிடிப்பதற்காக இராஜ சேவகர்கள் வந்திருக்கிறார்கள்!’என்றான். ‘அப்படியானால் அவனுடன் வந்த உன்னையும் பிடிப்பார்கள் அல்லவா? நீ ஓடி எங்கேயாவது ஒளிந்து கொள்!’ என்றேன். ‘அப்படித்தான் செய்ய வேண்டும்’ என்றான். என்னை விட்டுப் பிரிந்து சென்றான். நான் எதிர்பார்த்தபடியே நடந்தது…”
“என்ன? என்ன நடந்தது?”
“ஓடி ஒளிந்து கொள்வதாக என்னிடம் சொல்லி விட்டு நேரே அந்தக் குதிரைக்காரர்கள் இருந்த திசையை நோக்கிப் போய் அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டான்…”
“ஐயோ! பாவம்!”
“அதிகமாகப் பரிதாபப்பட்டு விடாதே! கொஞ்சம் மிச்சம் வைத்துக்கொள்!”
“ஏன் அப்படிச் சொல்கிறாய்?”
“குறையும் கேள்! நீயே தெரிந்துகொள்வாய்! அவர்களிடம் நேரே போனான். அவர்கள் இவனை அதிசயத்துடன் பார்த்தார்கள். உற்று உற்றுப் பார்த்து ஒருவரோடொருவர் இரகசியமாகப் பேசிக் கொண்டார்கள். ‘நீங்கள் யார்?’ என்று இவன் கேட்டான். ‘நாங்கள் வேட்டைக்காரர்கள்! மான் வேட்டையாட வந்திருக்கிறோம்’ என்று அவர்களில் ஒருவன் சொன்னான். ‘இல்லை நீங்கள் என்ன வேட்டையாட வந்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்’ என்றான் இவன். அவர்கள் இன்னும் வியப்படைந்து இவனைத் தூண்டி விட்டார்கள். ‘வந்தியத்தேவனைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறீர்கள். அவன் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். என்னைச் சும்மா விட்டுவிடுவீர்களா?’ என்று கேட்டான். அவர்களும் அதற்குச் சம்மதித்தார்கள். இவன் அவர்களை அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டுப் பக்கம் போனான்…”
“துரோகி, சண்டாளன்!…”
“அவர்கள் போன பிறகு நான் உன்னைத் தேடிக் கொண்டு வந்தேன். நீ கடலில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தாய்…”
“என்னிடம் அங்கேயே இதையெல்லாம் ஏன் சொல்லவில்லை! இந்தத் துணிச்சுருளை எடுத்துக் கொண்டு ஏன் ஓடி வந்தாய்?”
“இல்லாவிட்டால், நீ அவ்வளவு வேகமாக ஓடி வந்திருப்பாயா? அந்த வேட்டைக்காரர்களை ஒருகை பார்க்கிறேன் என்று அவர்களைத் தேடிப் போயிருந்தாலும் போயிருப்பாய்! என் பேச்சையே ஒருவேளை நம்பியிருக்கமாட்டாய். இவ்வளவையும் சொல்லி உன்னை என்னுடன் வரும்படி செய்வதற்குள் அவர்கள் உன்னை ஒருவேளை பார்த்திருப்பார்கள்…”
‘ஆகா! இந்தப் பெண்ணையா நாம் பைத்தியக்காரி என்று எண்ணினோம்’ என்று வந்தியத்தேவன் நினைத்து வெட்கம் அடைந்தான்.
‘இவளிடம் பூரண நம்பிக்கை வைத்தேயாக வேண்டும். இவளுடைய உதவி இல்லாவிட்டால் நாம் கடலைக் கடந்து இலங்கை செல்ல முடியாது. இவ்வளவு தூரம் வந்ததும் வீணாகும். பழுவேட்டரையர்களிடம் திரும்ப அகப்பட்டுக் கொள்ளவும் நேரலாம்.’
“பெண்ணே! நீ எனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறாய் என்பதைச் சொல்லி முடியாது. மிச்ச உதவியையும் நீதான் செய்யவேண்டும்…”
“என்ன செய்யவேண்டும் என்கிறாய்?” என்று கேட்டாள்.
“என் சிநேகிதனுடைய இலட்சணத்தைப் பார்த்து விட்டாய் அல்லவா? அவனை நம்பிப் பயன் இல்லையென்று தெரிந்து கொண்டாய் அல்லவா? நீதான் படகு வலித்து வந்து என்னை இலங்கையில் சேர்ப்பிக்க வேண்டும்!”
பூங்குழலி மௌனமாயிருந்தாள்.
“நான் தப்புக் காரியம் எதுவும் செய்யக்கூடியவன் அல்ல என்று உனக்கு நம்பிக்கை ஏற்படுகிறதா? பெண்ணே! இலங்கைக்கு மிக முக்கியமான காரியமாக நான் உடனே போய்த்தீர வேண்டும். இந்த உதவி எனக்கு நீ அவசியம் செய்தேயாக வேண்டும்…”
“செய்தால் எனக்கு என்ன தருவாய்?” என்று பூங்குழலி கேட்டாள். அவளுடைய முகத்தில் முதன் முதலாக நாணத்தின் அறிகுறி தென்பட்டது. கன்னங்கள் குழிந்தன; அவளுடைய முகத்தின் அழகு பன்மடங்கு அதிகமாகிச் சுடர்விட்டு ஒளிர்ந்தது.
முதல் நாள் இரவு கண்ட கனவில் இதே மாதிரி அவள் கேட்டது வந்தியத்தேவனுக்கு நினைவு வந்தது. அதே வார்த்தைகள் மறுபடியும் அவன் நாவில் வருவதற்குத் துடித்தன. பல்லினால் நாவைக் கடித்துக் கொண்டு அந்த வார்த்தை வராமல் நிறுத்தினான்.
“பெண்ணே! இந்த உதவி நீ எனக்குச் செய்தால் உயிர் உள்ள அளவும் மறக்க மாட்டேன்; என்றென்றும் நன்றி செலுத்துவேன். உனக்கு நான் இதற்குப் பிரதியாகச் செய்யக்கூடியது எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நீ ஏதாவது செய்யும்படி சொன்னால், கட்டாயம் செய்வேன்!”
பூங்குழலி சிந்தனையில் ஆழ்ந்தாள். சொல்ல எண்ணியதைச் சொல்லலாமா, வேண்டாமா என்று தயங்கியதைப் போல் காணப்பட்டது.
“என்னால் உனக்கு ஆகக்கூடிய பிரதி உதவி ஏதேனும் இருந்தால் சொல்! நிச்சயம் செய்கிறேன்…”
“இது சத்தியமான வார்த்தைதானா?”
“சத்தியம்! சத்தியம்!”
“அப்படியானால், சமயம் வரும்போது சொல்லுகிறேன். அப்போது மறந்துவிட மாட்டாயே?”
“ஒரு நாளும் மறக்கமாட்டேன். நீ எப்போது பிரதி உதவி கேட்பாய் என்று காத்திருப்பேன்.”
பூங்குழலி மீண்டும் சிறிது நேரம் சிந்தனை வயப்பட்டிருந்தாள்.
“சரி, என்னுடன் வா! இந்தக் காட்டில் ஓரிடத்துக்கு உன்னை நான் அழைத்துப் போகிறேன். அங்கே இன்று பொழுது சாயும் வரையில் நீர் இருக்க வேண்டும். பட்டினியாகத்தான் இருக்க வேண்டும்…”
“அதைப் பற்றிக் கவலை இல்லை! காலையில் உன் அண்ணி பழைய சோறு போட்டாள். அவளுடைய வயிற்றெரிச்சலைக் கிளப்புவதற்காகவே அதிகமாகச் சாப்பிட்டேன். இனி இராத்திரி வரையில் சாப்பாடு தேவையில்லை…”
“இராத்திரி கூடச் சாப்பாடு கிடைக்கிறதோ, என்னமோ? கையில் கொஞ்சம் எடுத்துவரப் பார்க்கிறேன். நான் சொல்லும் இடத்தில் இருட்டும் வரை நீ இருக்க வேண்டும்! இருட்டிய பிறகு நான் திரும்ப வந்து ஒரு சத்தம் செய்வேன். குயில் ‘குக்கூ குக்கூ’ என்று கூவுவதைக் கேட்டிருக்கிறாயா?”
“நன்றாய்க் கேட்டிருக்கிறேன். அப்படிக் கேட்டிராவிட்டாலும் உன் குரலைத் தெரிந்து கொள்வேன்.”
“நான் குரல் கொடுத்ததும் நீ அவ்விடத்திலிருந்து வெளி வர வேண்டும். இருட்டி ஒரு ஜாமத்திற்குள் படகில் ஏறி நாம் புறப்பட்டுவிட வேண்டும்.”
“குயிலின் குரல் எப்போது வரும் என்று காத்திருப்பேன்.”
காட்டின் மத்தியில் மணல் மேடு இட்டிருந்த ஓரிடத்துக்குப் பூங்குழலி வந்தியத்தேவனை அழைத்துப் போனாள். மேட்டின் மறு பக்கத்தில் மரஞ் செடி கொடிகள் மற்ற இடத்தைவிட அதிக நெருக்கமாயிருந்தன. அவற்றை லாவகமாகக் கையினால் விலக்கிக்கொண்டு ஒரு மரத்தின் வழியாகப் பள்ளத்தில் இறங்கினாள். வந்தியத்தேவனும் அவளைப் பின்பற்றி இறங்கினான். அங்கே ஒரு பழைய மண்டபத்தின் மேல் விளிம்பு காணப்பட்டது. இன்னும் உற்றுப் பார்த்ததில் இருளடைந்த மண்டபத்தின் இரு தூண்கள் தெரிந்தன. இவை எல்லாவற்றையும் மரங்களும் செடி கொடிகளும் மறைந்திருந்தன. எந்தப் பக்கமிருந்து பார்த்தாலும் அந்த மண்டபம் அங்கே இருப்பது தெரியவே தெரியாது.
“இந்த மண்டபத்தில் ஒரு சிறுத்தை குடியிருந்தது. அது போனபிறகு நான் இதில் இருக்கிறேன். என்னுடைய சொந்தத் தனி வீடாக வைத்துக் கொண்டிருக்கிறேன். மனிதர்களைக் காணப்பிடிக்காத போது இவ்விடத்துக்கு நான் வந்துவிடுவது வழக்கம். சட்டியில் தண்ணீர் இருக்கிறது. இன்று பகலெல்லாம் இங்கேயே இரு! நாலா புறமும் மனிதர்கள் குரல் கேட்டாலும் குதிரைகள் ஓடும் சப்தம் கேட்டாலும் வேறு என்ன தடபுடல் நடந்தாலும் நீ வெளியில் தலை காட்ட வேண்டாம். மேட்டில் மேல் ஏறிப் பார்க்க வேண்டாம்!” என்று பூங்குழலி கூறினாள்.
“இருட்டிய பிறகும் இங்கேயே இருக்கச் சொல்கிறாயா? காட்டுமிருகம், புலி, சிறுத்தை ஏதாவது வந்தால்?…” என்று வந்தியத்தேவன் கேட்டான்.
“புலி சிறுத்தை இங்கே ஒன்றும் இப்போது இல்லை. வந்தால் நரியும், காட்டுப் பன்றியும் வரும். நரிக்கும் பன்றிக்கும் பயப்படமாட்டாயே!”
“பயம் ஒன்றுமில்லை. இருட்டில் வந்து மேலே விழுந்தால் என்ன செய்வது? கையில் வேல்கூட இல்லை. வீட்டில் வைத்து விட்டேன்.”
“இந்தா! இந்த ஆயுதத்தை வைத்துக்கொள்!” என்று பூங்குழலி மண்டபத்தில் கிடந்த ஓர் ஆயுதத்தை எடுத்துக் கொடுத்தாள். அது ஒரு விசித்திரமான ஆயுதம். இருபுறமும் வாள் போல் கூர் கூரான முட்கள் இருந்தன. முட்கள் இரும்பைவிடக் கெட்டியாயிருந்தன. இந்திரனுடைய வஜ்ராயுதம் இப்படித்தான் இருக்கும் போலும்!
“இது என்ன ஆயுதம்? எதனால் செய்தது?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.
“இது ஒரு மீனின் வால்! இந்த மண்டபத்தில் குடியிருந்த சிறுத்தை என் மீது பாய வந்தபோது இதனால் அடித்துத்தான் அதைக் கொன்றேன்!” என்றாள் பூங்குழலி.