அத்தியாயம் 28 - இராஜபாட்டை
மதங் கொண்ட யானை ஆழ்வார்க்கடியானுடைய கைத்தடிக்கும் அவனுடைய அதட்டலுக்கும் பயந்து நின்று விடுமா, என்ன? தும்பிக்கையை எடுப்பாகத் தூக்கிக்கொண்டு, வழியிலிருந்த செடி கொடிகளைச் சிதைத்துக் கொண்டு, மேலே மேலே வந்து கொண்டிருந்தது. அடுத்த விநாடி ஆழ்வார்க்கடியானுடைய கதி அதோ கதிதான் என்பதில் இனிச் சந்தேகமில்லை! துணைக்கு வந்த வீரர்கள் இருவரும் நின்ற இடத்தில் நின்றபடியே ‘ஹாய்’ என்று கூச்சலிட்டார்கள். வந்தியத்தேவன் தன் கையிலிருந்து நழுவித் தரையில் விழுந்த வேலைத் திரும்ப எடுத்துக்கொண்டு கடைசியாக ஒரு முயற்சி செய்து பார்க்க எண்ணினான். அதே சமயத்தில் ஆழ்வார்க்கடியான் தன் கையிலிருந்து தடியை வீசி மத யானை மீது எறிந்தான்.
மறு கணம் ஆழ்வார்க்கடியானைக் காணவில்லை. அவனுடைய தலைப்பாகை காற்றில் பறந்து சென்று ஒரு மரக்கிளையில் விழுந்தது. ஆழ்வார்க்கடியான் என்ன ஆகியிருப்பான் என்று சிந்திப்பதற்குள்ளே அதைக்காட்டிலும் முக்கியமான சம்பவம் ஒன்று நிகழ்ந்து விட்டது. அவன் மறைந்த இடத்துக்கருகில் சென்ற யானை திடீரென்று மண்டியிட்டது போல் முன் கால்களை மடக்கிக் கொண்டு முன்புறமாகச் சாய்ந்தது. அந்த வனப்பிரதேசம் முழுதிலும் எதிரொலி செய்த ஒரு பயங்கரமான பிளிறல் சத்தம் கேட்டது. மறுகணத்தில் மலை போன்ற அந்த மத யானையின் உருவம் முழுவதும் மறைந்துவிட்டது. யானை அந்தப் படு பாதாளத்தில் உருண்டு உருண்டு விழுந்தபோது சரிந்து விழுந்த பாறைகளின் தூசிப் படலம் மேலே எழுந்து பரவியது. என்ன நடந்தது என்பதைச் சிந்தித்துத் தெரிந்து கொள்வதற்கு வந்தியத்தேவனுக்குச் சிறிது நேரம் ஆயிற்று.
ஆழ்வார்க்கடியானுக்குப் பின்னால் பெரும் பள்ளம் இருந்தபடியால் அவன் தடியை வீசி எறிந்த வேகத்தில் பின்புறம் சாய்ந்து விழுந்து விட்டான். அவனை நோக்கிச் சென்ற மதங்கொண்ட யானையும் முன்னங்கால் இரண்டையும் பள்ளத்தில் வைத்துவிட்டது. பிறகு சமாளிக்கப் பார்த்தும் முடியவில்லை. அதனுடைய குன்றொத்த உடலின் பெருங்கனமே அதற்குச் சத்துருவாகி அந்தப் பள்ளத்தில் கொண்டு தள்ளிவிட்டது! மத யானைக்கும், மதயானையை யொத்த ஆழ்வார்க்கடியானுக்கும் ஒரே நேரத்தில் ஒரே விதமான மரணம் சம்பவித்துவிட்டது!
இதை வந்தியத் தேவனுடைய உள்ளம் உணர்ந்ததும் அவனுடைய உடம்பு சிலிர்த்தது. அவனுடைய இதயத்தில் பெரும் வேதனை உண்டாயிற்று. அந்த ஸ்ரீ வைஷ்ணவன் மீது வந்தியத் தேவனுக்கு முதலில் ஏற்பட்டிருந்த சந்தேகங்களெல்லாம் மறைந்து பிரயாணத்தின் போது அவன் பேரில் ஒருவித வாஞ்சையே ஏற்பட்டிருந்தது. அப்படிப்பட்டவனுக்கு இத்தகைய கதியா நேர வேணும்? அவனுடைய உதவியும் வழித் துணையும் இல்லாமல் இனித்தான் ஏற்றுக்கொண்டு வந்த காரியத்தைத் தானாகவே செய்துமுடிக்க வேணுமே என்ற கவலையும் தோன்றியது. வைஷ்ணவனும் யானையும் பள்ளத்தில் விழுந்து மறைந்த இடத்துக்கு அருகில் வந்தியத்தேவன் வந்து நின்று கீழே உற்றுப் பார்த்தான்.
முதலில் ஒரே புழுதிப் படலமாக இருந்தது, ஒன்றுமே புலப்படவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் புழுதி அடங்க, யானை சென்ற வழியில் செடி கொடிகளும் பாறைகளும் ஹதமாகி விழுந்திருப்பது தெரிந்தது.
“என்ன, தம்பி! சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறாய்! ஒரு கை கொடுக்கக் கூடாதா!” என்ற குரலைக் கேட்டதும் வந்தியத்தேவனுக்கு ஒரு தரம் தூக்கிவாரிப்போட்டது.
அதிசயத்தினால் தள்ளாடி விழாமல் குரல் வந்த இடத்தை நோக்கினான். யானை விழுந்த வழியை யொட்டினாற்போல் செங்குத்தான பாறை யோரத்தில் ஒரு மரத்தின் ஆணி வேரைப் பிடித்துக்கொண்டு ஆழ்வார்க்கடியான் தொங்கிக் கொண்டிருந்தான். வந்தியத்தேவனுடைய குதூகலத்துக்குக் கேட்க வேணுமா? உடனே வேடிக்கைப் பேச்சும் வந்துவிட்டது.
“ஓஹாஹோ! வைஷ்ணவரே! கஜேந்திரனுக்கு மட்டும் மோட்சத்தை அளித்துவிட்டு நீர் திரிசங்கு சொர்க்கத்தில் தங்கிவிட்டீரே?” என்று சொல்லிக் கொண்டே, வீரர்களைக் கைதட்டி அழைத்தான்.
தன் அரையில் சுற்றியிருந்த துணிச்சுருளை அவிழ்த்து எடுத்து ஒரு முனையை இரு வீரர்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளச் செய்தான். இன்னொரு முனையைக் கீழே விட்டதும் ஆழ்வார்க்கடியான் மரத்தின் வேரை விட்டுவிட்டுத் துணிச்சுருளைப் பிடித்துக் கொண்டான். மூன்று பேருமாகப் பிடித்து இழுத்து உன்பாடு என்பாடு என்று அந்த வைஷ்ணவனை மெதுவாக மேலே கொண்டுவந்து சேர்த்தார்கள்.
சிறிது நேரம் வரையில் ஆழ்வார்க்கடியான் நெடிய பெரு மூச்சுவிட்டுக் கொண்டு பிரக்ஞையற்றவன் போலப் படுத்துக் கிடந்தான். மற்றவர்கள் அவனைச் சூழ்ந்து நின்று ஆசுவாசப் படுத்தினார்கள்.
சட்டென்று எழுந்து உட்கார்ந்து, “கிளம்புங்கள்! நன்றாய் இருட்டுவதற்குள் இராஜ பாட்டைக்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். என் தலைக்குட்டை எங்கே? தடி எங்கே?” என்று கேட்டான்.
“ஒன்றும் அவசரமில்லை, நீர் இன்னும் சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும். பிறகு நாம் புறப்படலாம்” என்று சொன்னான் வந்தியத்தேவன்.
அப்போது ஒரு நரி ஊளையிடும் சப்தம் கேட்டது. இன்னொரு பக்கத்தில் இன்னொரு நரி தன் இனிய கீதத்தை ஆரம்பித்தது. நூறு இருநூறு நரிகள் கோஷ்டி கானம் இசைத்தன. மேட்டுப் பிரதேசமாயிருந்த காட்டிலிருந்து கீழே பள்ளத்தை நோக்கிப் பல இடங்களில் சலசலப்புப் பிரயாணங்கள் ஏற்பட்டன. புதர்களில் மறைந்து செல்லும் சிறுத்தைகளே அச்சலசலப்புக்களுக்குக் காரணம் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமிருக்கவில்லை. பள்ளத்தில் மேலே கழுகுகளும் பருந்துகளும் வட்டமிடத் தொடங்கின.
“யானையின் மரணம் என்பது சாதாரண விஷயமல்ல. சுற்றுப் பக்கம் வெகுதூரத்திலிருந்தெல்லாம் ஊன் தின்னும் மிருகங்களும், பட்சிகளும் சற்று நேரத்துக்கெல்லாம் கஜேந்திரனுடைய உடலைப் பட்சிப்பதற்காக வந்துவிடும். நாமும் அவற்றுக்குப் பட்சணமாகி விடுவோம். புறப்படுங்கள் உடனே!” என்றான் ஆழ்வார்க்கடியான்.
அவன் கூறியதை வந்தியத்தேவன் இப்போது மறுத்துப் பேசவில்லை. நால்வரும் காட்டுவழியில் எவ்வளவு துரிதமாகப் போக முடியுமோ அவ்வளவு துரிதமாகச் சென்றார்கள். அஸ்தமிக்கும் சமயத்துக்கு இராஜபாட்டையை அடைந்தார்கள்.
இராஜபாட்டையில் வருவோரும் போவோரும், வண்டிகளும் வாகனங்களுமாக ஒரே கலகலப்பாக இருந்தது. யானைகளின் மீது சர்வசாதாரணமாக ஏறி வருகிறவர்களைப் பார்த்து வந்தியத்தேவன் வியப்புற்றான். ‘இம்மாதிரி மிருகம் ஒன்றுதானா காட்டுப் பாதையில் அவ்வளவு பீதியை உண்டு பண்ணிவிட்டது?’ என்று எண்ணி எண்ணி ஆச்சரியப்பட்டான்.
“இந்த இராஜபாட்டை எங்கிருந்து எங்கே போகிறது? நாம் எங்கே வந்திருக்கிறோம்? எங்கே போகிறோம்?” என்று கேட்டான்.
“அனுராதபுரத்திலிருந்து சிம்மகிரிக்குப் போகும் இராஜபாட்டையில் வந்து சேர்ந்திருக்கிறோம். தம்பள்ளை இன்னும் அரைக்காத தூரம் இருக்கிறது. இராத்திரி அங்கே போய்ச் சேர்ந்து விடலாம்” என்றான் ஆழ்வார்க்கடியான்.
“இராஜபாட்டை வழியாகச் சுகமாய் வந்திருக்கலாமே? எதற்காகக் காட்டு வழியாக வந்தோம்?”
“இராஜபாட்டையில் நாம் நெடுகிலும் வந்திருந்தால் நூறு இடத்தில் நம்மை நிறுத்திச் சோதனை செய்திருப்பார்கள். அநுராதபுரத்தில் அடியோடு நிறுத்திப் போட்டிருப்பார்கள். நாம் யாரைத் தேடி வந்திருக்கிறோமோ அவர் சிம்மகிரிக்குப் பக்கம் சென்றிருப்பதாக அறிந்தேன். அதனால்தான் குறுக்குவழியில் வந்தேன். இன்னமும் அவரை நாம் கண்டுபிடிக்கத்தான் போகிறோமோ, இல்லையோ? வேறு எங்கேயாவது போகாதிருக்க வேண்டும்!” என்றான் ஆழ்வார்க்கடியான்.
இராஜபாட்டையின் இரு பக்கத்திலும் ஏராளமான வீடுகளும், கிராமங்களும், கடைவீதிகளும், கொல்லர், தச்சர் பட்டறைகளும் இருந்தன. அவற்றில் வசித்தவர்களும் தொழில் செய்தவர்களும் பெரும்பாலும் சிங்களவர்களாகத் தோன்றினார்கள். இராஜபாட்டையில் தமிழ்நாட்டுப் போர் வீரர்கள் குறுக்கும் நெடுக்கும் போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் இரு புறமும் வசித்த சிங்களவர்கள் எவ்வித தடையுமின்றி நிர்ப்பயமாய்த் தங்கள் தொழில்களைச் செய்து கொண்டிருந்தார்கள்.
“இந்தப் பகுதியெல்லாம் இப்போது யாருடைய வசத்தில் இருக்கிறது?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.
“சோழ சைன்யம் தம்பள்ளை வரையில் கைப்பற்றியிருக்கிறது. அப்பால் சிம்மகிரிக் குன்றும், கோட்டையும் மகிந்தன் வசம் இருக்கின்றன.”
“இந்தப் பக்கங்களில் வசிக்கும் ஜனங்கள்?”
“பெரும்பாலும் சிங்களத்தார்கள். ‘பொன்னியின் செல்வர்’ இங்கே வந்தபிறகு யுத்தத்தின் போக்கே மாறிவிட்டது. சோழ வீரர்களுக்கும் மகிந்தனுடைய வீரர்களுக்குத்தான் சண்டை. அதாவது போர்க்களத்தில் எதிர்ப்படும்போது. மற்றப்படி குடிகள் நிர்ப்பயமாய் வாழலாம். புத்த குருமார்களுக்கு ஒரே கொண்டாட்டாம். அநுராதபுரத்தில் இடிந்துபோன புத்த விஹாரங்களையெல்லாம் நம் இளவரசர் திரும்பப் புதுப்பித்துக் கட்டும்படி கட்டளையிட்டிருக்கிறாராம்! கேட்டாயா கதையை? பௌத்த குருக்கள் ஏன் குதூகலமடைய மாட்டார்கள்? இளவரசரை நான் சந்திக்கும்போது, ‘நீங்கள் செய்யும் காரியம் எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை!’ என்று சொல்லிவிடப் போகிறேன்!”
“கட்டாயம் சொல்லிவிடும் உமக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்வதற்கு இந்த இளவரசர் யார்? அவருக்கு என்ன கொம்பு முளைத்திருக்கிறதா?” என்றான் வல்லவரையன்.
“அவருக்குக் கொம்பு முளைத்திருக்கவில்லை. தம்பி! அது உண்மையே! ஆனாலும் அவரிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அவருக்குப் பின்னால் யார் என்ன குறை சொன்னாலும் எதிரில் அவரைப் பார்த்ததும் மயங்கிப்போய் நின்று விடுகிறார்கள். இளவரசரை எதிர்த்துப் பேசும் சக்தி யாருக்கும் இருப்பதில்லை. அத்தகைய சக்தி, – இளவரசரைத் தம் இஷ்டப்படி நடக்கச் செய்யும் சக்தி, – ஒரே ஒருவருக்குத்தான் உண்டு…”
“ஆம், ஆம்! வீர வைஷ்ணவ ஆழ்வார்க்கடியாரின் அற்புத சக்தியை அறியாதவர் யார்? அப்படிப்பட்ட பயங்கர மதயானையைக் கைத்தடியால் எதிர்த்து வென்றவருக்கு இளவரசர் எம்மாத்திரம்!”
“நான் கூறியதை நீ சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை தம்பி! பொன்னியின் செல்வர் எங்கே? இந்த ஏழை வைஷ்ணவன் எங்கே? மத யானையைக் கைத்தடிகொண்டு எதிர்ப்பேன்; புலியையும் கரடியையும் சிங்கத்தையும் வெறுங்கையோடு எதிர்ப்பேன். ஆனால் பொன்னியின் செல்வர் முன் நேருக்கு நேர் நிற்கும்போது என் தைரியமெல்லாம் எங்கேயோ போய்விடுகிறது. நெஞ்சு நெகிழ்ந்து விடுகிறது. தொண்டை அடைத்து விடுகிறது. வாயிலிருந்து ஒரு வார்த்தை வெளி வருவது பிரம்மப்பிரயத்தனமாகி விடுகிறது…”
“அவரை ஆளும் சக்தி படைத்தவர் என்று பின் யாரைச் சொன்னீர்!”
“உலகம் தெரிந்த விஷயமாயிற்றே; உனக்குத் தெரியாதா? இளைய பிராட்டியைப் பற்றித்தான் சொல்கிறேன். குந்தவை தேவியின் வாக்குத்தான் அவருக்கு வேத வாக்கு!”
“ஓஹோ! பழையாறை இளைய பிராட்டியைப் பற்றியா சொல்கிறீர்? உமது சகோதரி பழுவூர் இளைய ராணியைப் பற்றித்தான் சொல்கிறீரோ என்று பார்த்தேன்!”
“நந்தினியும் அபூர்வ சக்தி உடையவள்தான். ஆனால் அவளுடைய சக்தி வேறு விதமானது.”
“எப்படி? என்ன வித்தியாசம்?”
“ஒருவன் நரகத்தில் விழப் போகிறவனாயிருந்தால், அவனைத் தடுத்து நிறுத்திக் குந்தவை தேவி சொர்க்கத்துக்கு அவனைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுவார்; அது ஒருவித சக்தி. நந்தினி என்ன செய்வாள் தெரியுமா? அவளுடைய சக்தி இன்னும் ஒருபடி மேலானது என்றே சொல்ல வேண்டும். நரகத்தையே சொர்க்கம் என்று சொல்லிச் சாதித்து, அதை நம்பும் படியும் செய்து, நரகத்தில் சந்தோஷமாகக் குதிக்கும்படி செய்துவிடுவாள்!”
வந்தியத்தேவனுக்கு உடம்பு சிலிர்த்தது. நந்தினியின் குணாதிசயத்தையும் அவளுடைய பயங்கர மோகன சக்தியையும் இந்த வீர வைஷ்ணவன் எவ்வளவு சரியாக அளந்து மதிப்பிட்டு வைத்திருக்கிறான்! நந்தினி இவனுடைய சகோதரி என்று சொல்வது மெய்யாயிருக்க முடியுமா? இந்த யோசனையில் வந்தியத்தேவன் ஆழ்ந்துவிட்டபடியால் மேலே ஒன்றும் கேட்கவில்லை. சிறிது தூரம் மௌனமாக நடந்தார்கள்.
அந்த மோனத்தைக் கலைத்துச் சில குதிரைகளின் குளம்புச் சத்தம் கேட்டது. அவர்களுக்கு எதிர்ப்பக்கத்திலிருந்து அச்சப்தம் வந்தது. சில நிமிஷத்துக்கெல்லாம் நாலு குதிரைகள் வெகுவேகமாக நாலுகால் பாய்ச்சலில் வந்தன. சூறாவளிக் காற்றைப் போல் புழுதியைக் கிளப்பிவிட்டுக் கொண்டு வந்த அக்குதிரைகள் மின்னல் மின்னும் நேரத்தில் நம் கால் நடைப் பிரயாணிகளைத் தாண்டிச் சென்றன. ஆயினும் அந்தச் சிறிய நேரத்திலேயே அக்குதிரைகளின் மேலிருந்தவர்களில் ஒருவருடைய முகத்தை வந்தியத்தேவன் பார்த்துத் தெரிந்து கொள்ள முடிந்தது! ஆகா! பார்த்திபேந்திர வர்மன் அல்லவா இவன்? காஞ்சியிலுள்ள இளவரசர் ஆதித்தரின் அந்தரங்க நண்பன் அல்லவா? நம்மை அவ்வளவாகப் பிடிக்காதவன் அல்லவா? இவன் எங்கே வந்துவிட்டு, எங்கே போகிறான்? எதற்காக இவன் இலங்கைக்கு வந்தான்? எப்போது வந்தான்?…
பிரயாணிகளைத் தாண்டிச் சென்ற குதிரைகள் சற்றுத் தூரம் போனதும் கம்பீரமான ஒரு குரலில் “நில்லுங்கள்!” என்று கட்டளை பிறந்தது. குதிரைகள் நின்றன; பிறகு, இந்தப் பக்கமாகத் திரும்பின. அவர்களில் தலைவனாகக் காணப்பட்டவன் குதிரையைச் செலுத்திக்கொண்டு முன்னால் வந்தான். மற்றவர்கள் பின் தொடர்ந்து வந்தார்கள். முன்னால் வந்தவன், வல்லவரையன் எண்ணியது போலவே, நாம் முன்னம் மாமல்லபுரத்தில் பார்த்திருக்கும் பார்த்திரபேந்திர பல்லவன்தான்.
வந்தியத்தேவனை அவன் உற்றுப் பார்த்துவிட்டு, “இது என்ன அப்பா இது? நீ எப்படி இங்கே வந்து சேர்ந்தாய்? தஞ்சாவூரில் நீ திடீரென்று மாயமாய் மறைந்துவிட்டாய் என்று சொன்னார்களே? உன்னைப் பழுவேட்டரையர்கள் தீர்த்திருப்பார்கள் என்றல்லவா நினைத்தேன்!” என்றான்.
“பழுவேட்டரையர்களால் என்னை அவ்வளவு எளிதில் தீர்த்துக்கட்ட முடியுமா? நான் பழைய வாணர் குலத்தைச் சேர்ந்தவன் அல்லவா?”
“ஆம், ஆம்! எப்படியாவது உயிரைக் காப்பாற்றிக் கொண்டு தப்பிப் பிழைப்பதில் உனக்கு இணை வேறு யாரும் இல்லை…”
“ஐயா! உயிரைக் காப்பாற்றிக் கொள்வது அவசியமாயிருக்கும்போது காப்பாற்றிக்கொள்வேன். உயிரைக் கொடுக்க வேண்டிய சமயத்தில் கொடுக்கவும் அறிவேன். அப்படி நான் சாவதாயிருந்தால் தங்களைப் போன்ற பழைய பல்லவ குலத் தோன்றலுடன் சண்டை போட்டுச் சாவேனே தவிர, கேவலம் பழுவேட்டரையர்களின் கையினால் சாவேனா?” என்று சொல்லிக் கொண்டே வந்தியத்தேவன் உறையிலிருந்து வாளை உருவினான்.
“சேச்சே! உன்னோடு என்னைச் சண்டைபோடச் சொல்கிறாயா? அதுவும் இந்தத் தூரதேசத்திலே வந்து! வேண்டாம், தம்பி, வேண்டாம்! எனக்கு அவசர வேலை இருக்கிறது! உன்னிடம் இளவரசர் ஒப்புவித்த காரியம் என்ன ஆயிற்று?”
“செய்து முடித்துவிட்டேன், ஐயா! சக்கரவர்த்தியிடம் கொடுக்கும்படி பணித்த ஓலையைச் சக்கரவர்த்தியிடம் கொடுத்தேன். இளைய பிராட்டியிடம் கொடுக்கச் சொன்ன ஓலையை அவரிடம் கொடுத்தேன்!”
“இங்கே எதற்காக வந்தாய்?”
“இலங்கையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்கு வெகு நாளாக இருந்தது. அதற்காக இந்த வைஷ்ணவரோடு புறப்பட்டு வந்தேன்…”
“ஆகா! இந்த ஆளைக்கூட நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன் போலிருக்கிறதே!”
“ஆம் மகாராஜா பார்த்திருக்கிறீர்கள். என் சகோதரியைப் பற்றி ஏதாவது தெரியுமா என்று விசாரிப்பதற்காக இளவரசர் ஆதித்தரிடம் வந்தேன். அப்போது தாங்களும் அவர் பக்கத்தில் இருந்தீர்கள்!…”
“அது யார் உன் சகோதரி?”
“இப்போது பழுவூர் இளைய ராணியாக விளங்கும் நந்தினி தேவி!”
“ஆகா! அந்த விஷப் பாம்பினால் நாட்டுக்கு நேர்ந்திருக்கும் தீங்குகளையெல்லாம் நினைத்தால்… அவளுடைய அண்ணனாயிருப்பதற்காக உன்னைக் கழுவில் ஏற்ற வேண்டும்!”
“மகாராஜா! ஒரு நாள் நான் கழுவில் ஏறிச் சாவதாகவே சபதம் செய்து கொண்டிருக்கிறேன். அன்றைக்குத் தாங்களே வந்து தங்கள் கையினாலேயே அந்தத் திருக்கைங்கரியத்தைச் செய்துவிட்டால்…”
“உன்னைக் கழுவில் தூக்கிப்போட என்னால் முடியுமா? அதற்கு நூறு ஆள் வேண்டும். இருக்கட்டும்; நீங்கள் வருகிற வழியில் இளவரசரைப் பற்றி ஏதாவது செய்தி கேள்விப்பட்டீர்களா? அநுராதபுரத்துக்கு அவர் வந்து விட்டாரா, தெரியுமா?” என்று பார்த்திபேந்திரன் கேட்டான்.
“அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு என்ன தெரியும், மகாராஜா! நாங்கள் காட்டு வழியில் வந்தோம்! காட்டில் ஒரு மதயானை என்னைத் துரத்திக்கொண்டு வந்தது! அப்போது பாருங்கள்…”
“போதும் உன் கதை! யார் கண்டது? ஒரு நாளைக்கு உன்னை நானே கழுவில் தூக்கிப் போட்டு உன்னுடைய ஆசையை நிறைவேற்றினாலும் நிறைவேற்றுவேன்!” என்று சொல்லிக்கொண்டே பார்த்திபேந்திரன் குதிரையைத் திருப்பினான்.
ஆழ்வார்க்கடியான் பார்த்திபேந்திரனுடன் பேசியபடியே அவனுடனிருந்த ஆட்களையெல்லாம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
எல்லோரும் குதிரைகளைத் திருப்பிக்கொண்டு போனபிறகு ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனிடம், “தம்பி! அந்த மற்ற மூன்று ஆட்களையும் பார்த்தாயா? அவர்களில் யாரையாவது உனக்கு முன்னம் தெரியுமா?” என்று ஆவலோடு கேட்டான்.
“இல்லை, நான் பார்த்ததேயில்லை!” என்றான் வந்தியத்தேவன்.
“ஆம், நீ பார்த்திருக்க முடியாதுதான். அவர்களில் இரண்டு பேரை நான் பார்த்திருக்கிறேன். திருப்புறம்பயம் பள்ளிப்படையில் நள்ளிரவில் பார்த்தேன்! அப்பா! என்ன பயங்கரமான சபதம் எடுத்துக் கொண்டார்கள்!” என்று கூறிய போது ஆழ்வார்க்கடியானுடைய உடம்பு முழுவதும் நடுங்கிற்று.
“அப்படி என்ன பயங்கரமான சபதம் எடுத்துக் கொண்டார்கள்?”
“சோழர் குலப் பூண்டே இந்த உலகில் இல்லாமல் அழித்து விடுவதாகச் சபதம் எடுத்துக் கொண்டார்கள்!”
“ஐயையோ!”
“இவர்கள் எப்படி நமக்கு முன்னால் இங்கு வந்து சேர்ந்தார்களோ தெரியவில்லை! கெட்டிக்காரர்கள்! இந்த முரட்டுப் பல்லவனை எப்படியோ பிடித்துக் கொண்டார்கள், பார்!” என்று சொல்லிவிட்டு ஆழ்வார்க்கடியான் மௌனமானான்.
வந்தியத்தேவனுக்குக் கோடிக்கரையில் அவன் அறிந்த ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. அவன் கோடிக்கரை வந்ததற்கு முதல்நாள்தான் இரண்டு பேர் அவசரமாக இலங்கைக்குப் போனார்கள் என்றும், பூங்குழலியின் தமையன் அவர்களைப் படகில் ஏற்றிச் சென்றான் என்றும் கேள்விப்பட்டான் அல்லவா. இவர்களில் அந்த இரண்டு பேரும் இருப்பார்களோ? அப்படியானால் பார்த்திபேந்திரனுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்?
நால்வரும் தம்பள்ளை என்னும் புத்த புண்ணிய க்ஷேத்திரத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.