அத்தியாயம் 40 - மந்திராலோசனை
போகும்போது வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானை நெருங்கி, “இது என்ன, இளவரசர் இப்படிச் செய்கிறார்? அன்று திடீரென்று குத்துச் சண்டை போட்டார்; இன்று கத்திச் சண்டையில் இறங்கினார். சொல்லிவிட்டாவது சண்டையை ஆரம்பிக்கக் கூடாதா? இளவரசருடைய சிநேகம் மிகவும் ஆபத்தாயிருக்கும் போலிருக்கிறதே!” என்றான்.
இளவரசர் இதைக் கேட்டுக் கொண்டே அவர்கள் பக்கத்தில், வந்து விட்டார்.
“ஆம், ஐயா! என்னுடைய சிநேகம் மிகவும் ஆபத்தானதுதான். நேற்றிரவே அது உமக்குத் தெரிந்திருக்குமே? ஆபத்துக்கு உள்ளாகாமல் இருக்க வேண்டுமானால் நான் இருக்குமிடத்திலிருந்து குறைந்தது பத்துக் காத தூரத்தில் இருக்கவேண்டும்!” என்றார்.
“இளவரசே அதற்காக நான் சொல்லவில்லை. தங்கள் பக்கத்திலிருந்து எந்தவித ஆபத்துக்கும் உட்படுவதற்கு நான் சித்தம். ஆனால் இப்படி நீங்கள் திடீர் திடீர் என்று…”
இப்போது வீர வைஷ்ணவன் குறுக்கிட்டு, “இது தெரியவில்லையா தம்பி உனக்கு? எதிரே வருகிறவர்கள் யார் என்று தெரிந்து, அதற்குத் தக்கபடி காரியம் செய்வதற்காக இளவரசர் இந்த உபாயத்தைக் கையாண்டார்! வருகிறவர்கள் யாராயிருந்தாலும் கத்திச் சண்டையைக் கண்டால் கொஞ்சம் நின்று பார்ப்பார்கள் அல்லவா? என்றான்.
இளவரசர், “திருமலை சொல்வதும் சரிதான். என்னுடைய ஜாதக விசேஷமும் ஒன்று இருக்கிறது. என்னுடன் யாராவது சிநேகமாயிருந்தால் அவர்களுக்கு மற்றவர்களின் அசூயையும், பகைமையும் நிச்சயம் சித்திக்கும். அதற்காக, நான் யாருடைய சிநேகிதத்தையாவது விரும்பினால் அவர்களுடன் அடிக்கடி சண்டை பிடிப்பது வழக்கம். இதைப் பொருட்படுத்தாதவர்கள்தான் என்னுடைய சிநேகிதர்களாயிருக்க முடியும்!” என்றார்.
“அப்படியானால் சரி! இனிமேல் தாங்கள் சண்டையை ஆரம்பிப்பதற்குக் காத்திராமல் நானே ஆரம்பித்துவிடுகிறேன். இளவரசே! தங்களுக்குச் செய்தி கொண்டு வந்த நான் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்ல மறந்துவிட்டேன். அதை இப்போது சொல்லிவிட விரும்புகிறேன்! சொல்லியே ஆகவேண்டும். தாங்கள் கேட்க விரும்பாவிட்டால், மறுபடியும் கத்தியை எடுங்கள்!” என்றான் வந்தியத்தேவன்.
“வேண்டாம்! செய்தியைச் சொல்லுங்கள், கேட்கிறேன்.”
“நம்மைச் சுற்றி நின்ற கூட்டத்தில் ஒரு பெண் கையில் காம்புள்ள குமுத மலருடன் நின்று கொண்டிருந்தாளே, அவளுடைய கண்வீச்சுக்கு நான் தோற்றுவிட்டேன் என்று கூடத் தாங்கள் சொல்லவில்லையா? அந்தப் பெண் யார் தெரியுமா?”
“தெரியாது; அவளை நான் நன்றாய்ப் பார்க்கவில்லை. பார்க்கும் வழக்கமும் எனக்குக் கிடையாது.”
“இளவரசே! அவள்தான் தங்களுக்கு ஒரு செய்தி சொல்லி அனுப்பினாள்; சொல்லத் தவறிவிட்டேன். எப்படிச் சொல்வது; தங்களைச் சந்தித்ததிலிருந்து தங்களுடன் துவந்த யுத்தம் செய்வதற்கும், தலையில் வீடு இடிந்து விழாமல் தப்புவதற்கும் சரியாயிருக்கிறதே! ஆகையால் சொல்லச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. திடீரென்று அந்தப் பெண்ணைப் பார்த்தபோது அவள் கூறிய செய்தியைச் சொல்லவில்லை என்ற நினைவு வந்தது. அப்போது சிறிது அசந்துவிட்டேன். அந்தச் சமயம் பார்த்து என் கத்தியைத் தட்டிவிட்டீர்கள்…”
“போகட்டும்; அந்தப் பெண் யார்? அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும்?”
“ஐயா! அவள்தான் பூங்குழலி.”
“அழகான பெயர். ஆனால் நான் கேள்விப்பட்டதில்லை.”
“ஐயா! ‘சமுத்திர குமாரி’ என்ற பெயர் நினைவிருக்கிறதா?”
“சமுத்திரகுமாரி – சமுத்திரகுமாரி – அப்படி ஒரு பெயரும் எனக்கு நினைவில் இல்லையே! அவளைப் பார்த்ததாகக்கூட ஞாபகம் இல்லையே!”
“தயவு செய்து கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். தங்களுக்கு நினைவில்லையென்றால் அந்தப் பெண்ணின் நெஞ்சு உடைந்துவிடும். கோடிக்கரையில் தாங்கள் மரக்கலம் சேருவதற்காகப் படகில் ஏறச் சித்தமாயிருந்தீர்கள். அச்சமயம் ஒரு பெண் தன்னந் தனியாகப் படகு விட்டுக் கொண்டு கடலிலிருந்து கரைக்கு வந்தாள். தாங்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அவளும் நீங்கள் எல்லாரும் யார் என்று தெரிந்து கொள்வதற்காக நீங்கள் நின்ற இடத்துக்குச் சமீபமாக வந்தாள். ‘இந்தப் பெண் யார்?’ என்று தாங்கள் கலங்கரை விளக்கத் தலைவரைக் கேட்டீர்கள். அவர் ‘இவள் என் குமாரி’ என்றார். தாங்கள் உடனே ‘ஓகோ! இவள் உமது குமாரியா? சமுத்திர குமாரி என்றல்லவா நினைத்தேன்!’ என்றீர்கள். அதை அந்தப் பெண் மறக்காமல் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறாள். அந்தப் பெண்ணின் உதவியினால்தான் நான் கடல் கடந்து இலங்கைக்கு வர முடிந்தது…”
“நீர் சொன்ன பிறகு எனக்கும் இலேசாகக் கொஞ்சம் நினைவுக்கு வருகிறது. ஆனால் கோடிக்கரை சமுத்திர குமாரிக்கு இங்கே அநுராதபுரத்துக்குச் சமீபத்தில் என்ன வேலை? இவர்களுடன் எதற்காக வந்திருக்கிறாள்? ஒருவேளை உம்மைத் தேடிக்கொண்டா?…”
“இல்லை; அப்படி ஒருநாளும் இராது. என்னைத் தேடிவர நியாயம் இல்லை. யாரையாவது தேடி வந்திருந்தால் அது தங்களைத் தேடித்தான் இருக்கவேண்டும். எதற்காக என்று எனக்குத் தெரியாது!”
இப்படிச் சொல்லிக்கொண்டே வந்தியத்தேவன் சற்றுத் தூரத்தில் சேநாதிபதியின் பக்கத்தில் வந்துகொண்டிருந்த பூங்குழலியைப் பார்த்தான். அவள் தலைகுனிந்த வண்ணம் நடந்தாள். ஆயினும் அவளுடைய கவனம், கருத்து எல்லாம் இளவரசரிடமே இருக்கின்றன என்பதை உணர்ந்துகொண்டான். சிறிது நேரத்துக்குக்கொரு தடவை அவளுடைய கடைக் கண் இளவரசரை நோக்குவதையும் அறிந்தான். அச்சமயம் அவளைப் பற்றித் தாங்கள் பேசுகிறோம் என்பதும் உள்ளுணர்வினால் அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிடில் அப்படி அவள் குனிந்த தலை நிமிராமல் நடப்பதற்கு யாதொரு அவசியம் இல்லையே! அம்மம்மா! ஒரு கணமும் பார்த்த திசையைப் பாராமல் ஓயாமல் சலித்துக்கொண்டிருக்கும் கண்கள் அல்லவா அவளுடைய கண்கள்!
மேற்கூரையில்லாமல் வேலைப்பாடான கருங்கல் தூண்கள் மட்டும் நின்ற மண்டபத்தை அவர்கள் அடைந்தார்கள். சுற்றிலும் ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள் அந்த மண்டபத்துக்கு ஓரளவு நிழலை அளித்தன. மண்டபத்தின் மத்தியில் ஒரு மேடான பீடமும் இருந்தது. அங்கே சென்று இளவரசரும் சேநாதிபதியும், பார்த்திபேந்திரனும் அமர்ந்தார்கள். வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் சற்றுத் தள்ளி நின்றார்கள்.
இன்னொரு பக்கத்தில் ஒரு தூணின் மறைவில் பூங்குழலி நின்று கொண்டிருந்தாள். அங்கிருந்தபடி அவள் இளவரசரையும் வந்தியத்தேவனையும், பார்க்கக் கூடியதாயிருந்தது.
அந்தக் கூரையில்லாத மண்டபத்தைச் சுற்றிலும் வீரர்கள் வியூகம் வகுத்ததுபோல் இரண்டு வரிசையாக நின்றார்கள். இன்னும் சற்றுத் தூரத்தில் குதிரைகளும், யானையும் நிறுத்தப்பட்டிருந்தன.
இளவரசர் பார்த்திபேந்திரனைப் பார்த்து, “என் தமையனாரும், பாட்டனாரும் என்ன செய்தி சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்? கேட்க ஆவலாயிருக்கிறேன்!” என்றார்.
“இளவரசே! சோழ ராஜ்யம் பெரிய அபாயத்துக்குள்ளாகியிருக்கிறது. இது தங்களுக்குத் தெரிந்திருக்கும்…”
“ஆம், ஐயா! சக்கரவர்த்தி நெடுநாளாக நோய்ப்பட்டிருக்கிறார்…”
“அபாயம் அது மட்டுமல்ல; சாம்ராஜ்யத்துக்கே பேரபாயம் நேர்ந்திருக்கிறது. பெரிய அதிகாரங்களில் உள்ளவர்கள் துரோகிகளாகி விட்டார்கள். சக்கரவர்த்திக்கும், பட்டத்து இளவரசருக்கும், தங்களுக்கும் விரோதமாகச் சதி செய்யத் தொடங்கி விட்டார்கள். தங்கள் தமையனாருக்குப் பட்டம் இல்லை என்று சொல்லிவிட்டுச் சிவபக்தி வேஷதாரியான உருத்திராட்சப் பூனை மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டுவது என்றும் தீர்மானித்திருக்கிறார்கள். பழுவேட்டரையர்களும், சம்புவரையர்களும், இரட்டைக் குடை இராஜாளியாரும்; மழபாடி மழவரையரும்; மற்றும் இவர்களைப் போன்ற வேறு பல துரோகிகளும் இந்தக் கூட்டுச் சதியில் சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் முயற்சி பற்றி நாம் சிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை. வடதிசைச் சைன்யமும், தென்திசைச் சைன்யமும் நம் வசத்தில் இருக்கின்றன. திருக்கோவலூர் மிலாடுடையாரும், கொடும்பாளூர்ப் பெரிய வேளாரும் நம் பக்கம் இருக்கிறார்கள். இவர்களுடைய உதவிகளைக் கொண்டும் சைன்யத்தின் துணைகொண்டும் துரோகிகளின் சதியை ஒரு நொடியில் சின்னாபின்னப்படுத்தி விடலாம். ஆனால் எதிரிகளுக்கு அதிக காலம் இடங்கொடுத்து விடக் கூடாது. துரோகிகளின் சூழ்ச்சியை முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும். இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருப்பதை முன்னிட்டுத் தங்களை உடனே காஞ்சிக்கு அழைத்து வரும்படியாகத் தங்கள் தமையனாரும், பாட்டனாரும் என்னை அனுப்பி வைத்திருக்கிறார்கள். இச்சமயத்தில் நீங்கள் சகோதரர்கள் இருவரும் பிரிந்திருக்கலாகாது என்றும், ஒரே இடத்தில் இருப்பது மிக அவசியம் என்றும் தங்கள் பாட்டனார் கருதுகிறார். இன்னும், தங்கள் தமையனாரின் உள்ளத்தில் இருப்பதையும் சொல்லிவிட விரும்புகிறேன். அவருக்கு ஒரே இடத்தில் இருந்து இராஜ்யம் ஆளுவதில் விருப்பம் இல்லை. கடல் கடந்த நாடுகளுக்கெல்லாம் கப்பலேறிச் செல்லவேண்டுமென்றும் அந்த நாடுகளையெல்லாம் வென்று சோழர் புலிக்கொடியைப் பறக்கவிட வேண்டுமென்றும் அவர் துடிதுடித்துக் கொண்டிருக்கிறார். வடநாட்டுப் படையெடுப்புக்குப் பழுவேட்டரையர்கள் முட்டுக்கட்டை போட்டதிலிருந்து அவருடைய போர் வெறி ஒன்றுக்குப் பத்து மடங்கு ஆகியிருக்கிறது. ஆகையால் தாங்கள் காஞ்சி வந்து சேர்ந்ததும் தஞ்சைக்குப் படையெடுத்துச் சென்று சதிகாரர்களையெல்லாம் அதம் செய்து ஒழித்துவிட்டுச் சோழ சிம்மாசனத்தில் தங்களை அமர்த்தி முடிசூட்டி விட்டு…”
இத்தனை நேரம் கவனத்துடனும் மரியாதையுடன் கேட்டு வந்த இளவரசர் இப்போது தம் செவிகளைக் கையினால் மூடிக் கொண்டு, “வேண்டாம்! அத்தகைய விபரீத வார்த்தைகளைச் சொல்லாதீர்கள். சோழ சிம்மாசனத்துக்கும் எனக்கும் வெகுதூரம்!” என்றார்.
“தங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் நான் சொல்லவில்லை; அது தங்களுடைய தமையனார் இஷ்டம்; தங்கள் இஷ்டம். நீங்கள் சகோதரர்கள் விவாதித்துத் தீர்த்துக் கொள்ள வேண்டியது. ஆனால் சதிகாரர்களை ஒழிப்பதில் இரண்டு பேரும் ஒன்றுபட வேண்டியது அவசியம். உடனே தாங்கள் காஞ்சிக்குப் புறப்பட்டு வாருங்கள். பழுவேட்டரையர்களையும், சம்புவரையர்களையும் பூண்டோ டு அழிப்போம். சிவபக்தி வேஷதாரியான மதுராந்தகனைச் சிவலோகத்துக்கே அனுப்பி வைப்போம். பிறகு தாங்களும் தங்கள் தமையனாரும் யோசித்து உசிதம்போல் முடிவு செய்யுங்கள்!” என்றான் பார்த்திபேந்திரன்.
“ஐயா! எல்லாம் நாமே முடிவு செய்ய வேண்டியதுதானா? என் தந்தை – சக்கரவர்த்தி – அவருடைய விருப்பம் இன்னதென்று நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? ஒரு வேளை தாங்கள் தெரிந்துகொண்டிருக்கிறீர்களா? என் தமையனாருக்குத் தந்தையிடமிருந்து ஏதேனும் அந்தரங்கச் செய்தி வந்ததா…?”
“இளவரசே! இந்தச் சந்தர்ப்பத்தில் உண்மையைச் சொல்ல வேண்டியது அவசியம். மூடி மறைப்பதில் பயனில்லை. தங்கள் தந்தையின் விருப்பத்தை இச்சமயம் அறிந்துகொள்வது இயலாத காரியம். சக்கரவர்த்தி இப்போது சுதந்திர புருஷராயில்லை. பழுவேட்டரையர்களின் சிறையில் இருக்கிறார். அவர்களுடைய அனுமதியின்றி யாரும் சக்கரவர்த்தியைப் பார்க்க முடியாது; பேசவும் முடியாது. அவருடைய விருப்பத்தைத் தெரிந்து கொள்வது எங்ஙனம்? தந்தையைக் காஞ்சிக்கு வரச் சொல்வதற்காகத் தங்கள் தமையனார் பெரு முயற்சி செய்தார். காஞ்சியில் பொன் மாளிகை கட்டினார். சக்கரவர்த்தி விஜயம் செய்து கிரஹப்பிரவேசம் செய்யவேண்டும் என்று அழைப்பு அனுப்பினார். ஆனால் சக்கரவர்த்தியிடமிருந்து மறு ஓலை வரவில்லை…”
“என் தந்தை நோய்ப்பட்டிருப்பது நடக்க முடியாதவராயிருப்பதும் தெரிந்த விஷயந்தானே?”
“இளவரசே! தங்கள் தந்தை – மூன்று உலகங்களின் சக்கரவர்த்தி – காஞ்சிக்குக் காலால் நடந்து வரவேண்டுமா? யானைகள் குதிரைகள் இல்லையா? வண்டி வாகனங்கள் இல்லையா? தங்க ரதங்களும் முத்துச் சிவிகைகளும் இல்லையா? தலையால் சுமந்து கொண்டு வருவதற்கு முடிசூடிய சிற்றரசர்கள் ஆயிரம் பதினாயிரம் பேர் போட்டி போட்டுக்கொண்டு வர மாட்டார்களா? காரணம் அதுவன்று; பழுவேட்டரையர்களின் துரோகந்தான் காரணம். தஞ்சை அரண்மனை இப்போது சக்கரவர்த்தியின் சிறையாக மாறிவிட்டது… இளவரசே! தங்கள் தந்தையின் உயிரைக் காப்பாற்ற விரும்பினால் உடனே புறப்பட்டு வாருங்கள்!”
இந்த வார்த்தைகள் இளவரசரின் உள்ளத்தைக் கலக்கி விட்டன என்பது நன்றாகத் தெரிந்தது. அவருடைய களை பொருந்திய முகத்தில் முதன்முதலாகக் கவலைக் குறி தென்பட்டது.
இளவரசர் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்துவிட்டுச் சேநாதிபதியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.
“தளபதி! தங்களுடைய யோசனை என்ன? சில நாளைக்கு முன்பு முதன் மந்திரி அநிருத்தப் பிரமராயர் வந்திருந்தார். அவர் என் தந்தையின் மதிப்புக்கும் அந்தரங்க அபிமானத்துக்கும் உரியவர். அவர் என்னை இலங்கையிலேயே சில காலம் இருக்கும்படி யோசனை சொன்னார். தாங்களும் அதை ஆமோதித்தீர்கள். ‘இங்கே சண்டை ஒன்றும் நடக்கவில்லையே, நான் எதற்கு இருக்கவேண்டும்?’ என்று கேட்டதற்குச் சமாதானம் சொன்னீர்கள். முதன் மந்திரி இதோ நிற்கும் வைஷ்ணவரிடம் அதே யோசனையைத் திரும்பச் சொல்லி அனுப்பியிருக்கிறார். என் தமக்கை இளைய பிராட்டியிடம் எனக்கு எவ்வளவு மதிப்பு உண்டு என்பது தங்களுக்குத் தெரியும். அவர் இட்ட கோட்டை நான் தாண்ட மாட்டேன். இலங்கைக்கு அவர் வரச் சொல்லித்தான் வந்தேன். இளைய பிராட்டி இதோ இந்த வாணர்குலத்து வீரனிடம் ஓலை அனுப்பியிருக்கிறார். ஒரு விதத்தில் என் தமக்கையின் செய்தியும் பார்த்திபேந்திரர் கூறியதை ஒட்டியிருந்தது. ஆனால் உடனே புறப்பட்டுப் பழையாறைக்கு வரும்படி எழுதி அனுப்பியிருக்கிறார். என் தமையனாரோ காஞ்சிக்கு வரும்படி இவரிடம் கூறி அனுப்பியுள்ளார். சேநாதிபதி! தங்களுடைய கருத்து என்ன?” என்றார்.
“இளவரசே! இன்று காலை வரையில் தாங்கள் இந்த இலங்கைத் தீவிலேயே இருக்கவேண்டும் என்ற கருத்துடனேயே நான் இருந்தேன். நேற்றிரவு கூட இவருடன் நெடுநேரம் விவாதித்துக் கொண்டிருந்தேன். இவர் வெகுநேரம் வாதித்தும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், இன்று அதிகாலையில், அதோ நிற்கிறாளே, அந்தப் பெண் வந்து ஒரு செய்தி சொன்னாள். அதைக் கேட்டது என் கருத்தை மாற்றிக் கொண்டேன். தாங்கள் உடனே காஞ்சிக்குப் போகவேண்டியது அவசியம் என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது!” என்றார் இலங்கைச் சேநாதிபதி.
தூண் மறைவிலே நின்று தன்னைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த பூங்குழலியின் மீது இளவரசர் தம் பார்வையைச் செலுத்தினார்.
“அபிமன்யுவை நாலாபுறமும் பகைவர்கள் தாக்கிக் கொன்றதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னை நாலாபுறமிருந்து வரும் செய்திகளே தாக்கிக் கொன்றுவிடும் போலிருக்கிறது!” என்று இளவரசர் சொல்லிக் கொண்டார்.
“அந்தப் பெண் என்னதான் செய்தி கொண்டு வந்திருக்கிறாள்?” என்றார்.
“அவளே சொல்லட்டும்!” என்றார் பெரிய வேளார்.
பூங்குழலி தயங்கித் தயங்கி நடந்து வந்தாள். இளவரசர் முன்னால் வந்து நின்றாள். நாலு பக்கமும் திரும்பிப் பார்த்தாள். சேநாதிபதியைப் பார்த்தாள் பார்த்திபேந்திரனைப் பார்த்தாள்; சற்றுத் தூரத்தில் நின்ற வந்தியத்தேவனையும் ஆழ்வார்க்கடியானையும் பார்த்தாள். இளவரசர் முகத்தை மட்டும் அவளால் ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை.
“பெண்ணே சொல், சீக்கிரம்!” என்றார் சேநாதிபதி.
பூங்குழலி ஏதோ சொல்ல முயன்றாள். ஆனால் வார்த்தைகள் ஒன்றும் வரவில்லை.
“ஆகா! இந்த உலகமே ஊமை மயமாகி விட்டது போல் காண்கிறது” என்றார் அருள்மொழிவர்மர்.
அவ்வளவுதான் பூங்குழலி தன் கண்ணிமைகளை உயர்த்தி ஒரு தடவை, ஒரு கணத்திலும் சிறியநேரம் இளவரசரை நோக்கினாள். அதற்குள் அக்கண்களில் கண்ணீர் ததும்பி வழிய ஆரம்பித்து விட்டது. உடனே அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள். ஓடிப்போய்த் தூரத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்களுக்கிடையில் மறைந்தாள்.
எல்லாரும் வியப்புடன் அதைப்பார்த்துக் கொண்டு நின்றார்கள். வந்தியத்தேவன் முன்வந்து, “ஐயா! இவள் முன்னொரு தடவை இப்படித்தான் ஓடினாள். நான் தொடர்ந்து போய்ப் பிடித்துக்கொண்டு வருகிறேன்!” என்றான்.
“அப்படியே செய்! ஆனால் அதற்குள் அவள் கொண்டு வந்த செய்தி என்ன என்பதைச் சேநாதிபதி சொல்லட்டும்!” என்றார் இளவரசர்.
அதற்குச் சேநாதிபதி, “அதை இரண்டே வார்த்தைகளில் சொல்லி விடலாம். இளவரசே! தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டுவருவதற்காகப் பழுவேட்டரையர்கள் இரண்டு பெரிய மரக்கலங்களையும் அவை நிறையப் போர் வீரர்களையும் அனுப்பியிருக்கிறார்கள். மரக்கலங்கள் தொண்டைமான் ஆற்றுக் கால்வாயில் புகுந்து மறைவான இடத்திலே வந்து நிற்கின்றன!” என்றார்.