அத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது
மதுராந்தக உத்தம சோழத்தேவரின் முடிசூட்டு விழா நடந்து ஒன்றரை மாதத்துக்கு மேலாயிற்று. பின் பனிக்காலம் வழக்கத்தைவிட விரைவாக விடைபெற்றுக்கொண்டு சென்றது. தென்றல் என்னும் தெய்வ ரதத்தில் ஏறிக்கொண்டு வஸந்த காலம் வந்தது. பைங்கிளிகள் மாமரங்களின் குங்கும நிறத்தளிர்களுக்கு அருகில் தங்கள் பவழ வர்ண மூக்குகளை வைத்து ஒத்திட்டுப் பார்த்தன. அரச மரங்களின் தங்க நிறத்தளிர்கள் இளங்காற்றில் அசைந்தாடி இசை பாடின. புன்னை மரங்களிலிருந்து முத்துப் போன்ற மொட்டுக்களை உதிர்த்துக்கொண்டு குயில்கள் கோலாகலமாகக் கூவின. இயற்கைத் தேவி உடல் சிலிர்த்தாள். பூமாதேவி குதூகலத்தினால் பொங்கிப் பூரித்தாள். இலைகள் உதிர்ந்து மொட்டையாகத் தோன்றிய மரங்களில் திடீரென்று மொட்டுக்கள் அரும்பிப் பூத்து வெடித்தன. மாதவிப் பந்தல்களும், மல்லிகை முல்லைப் புதர்களும் பூங்கொத்துக்களின் பாரம் தாங்க முடியாமல் தவித்தன. நதிகளில் பிரவாகம் குறைந்துவிட்டது. கரையோரமாகப் பளிங்கு போன்ற தெளிந்த நீர் சலசலவென்று ஓடிக்கொண்டிருந்தது.
சோழ நாட்டு மக்கள் அகமும் முகமும் மலர்ந்து விளங்கினார்கள். வயல்களில் விளைந்திருந்த செந்நெல்லை அறுவடை செய்து களஞ்சியங்களிலே கொண்டுபோய்ச் சேர்த்தாகி விட்டது. அரசியல் சம்பந்தமான நிச்சயமற்ற நிலைமை நீங்கிக் கவலை தீர்ந்துவிட்டது. நகரங்களிலும், நாட்டுப்புறங்களிலும் காமன் பண்டிகை கொண்டாடுவதற்கு மக்கள் ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்கள். ஆலயங்களில் வஸந்த உற்சவம் நடத்துவதற்கும் ஏற்பாடுகள் நடைபெற்றன. வீதிகள் சேருமிடங்களிலெல்லாம் நாடக மேடைகள் அமைக்கப்பட்டு வந்தன.
இந்த இனிய காட்சிகளையெல்லாம் பார்த்துக்கொண்டு வல்லவரையன் பழையாறை நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். இந்தத் தடவை அவன் மறைந்தும் ஒளிந்தும் மாறுவேடம் பூண்டும் அந்த மாநகருக்குள் பிரவேசிக்கவில்லை. திறந்திருந்த பிரதான நகர் வாசல் வழியாகத் தங்கு தடையின்றிப் புகுந்து இளையபிராட்டி குந்தவை தேவியின் அரண்மனயை அடைந்தான். இளையபிராட்டி குந்தவை, வானதி முதலிய தன் தோழிகள் பலர் புடைசூழ அரண்மனை வாசலுக்கு வந்து அவனுக்கு முகமன் கூறி வரவேற்றாள். நெடுந்தூரம் பிரயாணம் செய்து வந்த களைப்புத் தீர்ந்த பிறகு தன்னை அரண்மனை உத்தியான வனத்தில் வந்து சந்தித்துப் பிரயாண விவரங்களைக் கூறும்படி சொல்லிவிட்டுச் சென்றாள்.
வந்தியத்தேவன் இளைப்பாறுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. ஸ்நான பானங்களையும் அதிவிரைவில் முடித்துக் கொண்டு உத்தியானவனத்துக்குச் சென்றான். அங்கே இளைய பிராட்டி அவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஒருவரையொருவர் சந்திப்பதில் யாருக்கு அதிக ஆர்வம் என்று சொல்ல முடியாமலிருந்தது. ஒருவரிடம் ஒருவர் பல செய்திகளைக் கேட்டு அறிவதில் இருவரும் ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுடைய பரபரப்புக்கு அது மட்டுந்தானா காரணம்? தங்கள் வருங்கால வாழ்க்கையைப்பற்றி நிச்சயித்துக்கொள்ள விரும்பியதும் காரணமாயிருக்கலாம் அல்லவா? அசேதனப் பொருள்களிடத்திலும் கிளர்ச்சியை உண்டாக்கிய இளவேனில், உணர்ச்சி நிறைந்த அவர்களுடைய உள்ளத்திலும் ஒரு பரபரப்பை உண்டாக்கியிருக்கலாம் அல்லவா?
“ஐயா! தாங்கள் சென்றிருந்த காரியத்தில் பூரண வெற்றி அடையவில்லையென்று அறிகிறேன் அது உண்மையா?” என்று கேட்டாள் இளையபிராட்டி.
“உண்மைதான், தேவி! இதுவரையில் நான் ஏற்றுக் கொண்ட எந்தக் காரியத்திலேதான் பூரண வெற்றி அடைந்திருக்கிறேன்?” என்று வல்லவரையன் கூறி பெருமூச்சு விட்டான்.
“அப்படிச் சொல்ல வேண்டாம்! என் தம்பியை ஈழ நாட்டிலிருந்து கொண்டு வந்து சேர்த்தீர்கள் அல்லவா? அச்சமயம் அருள்மொழிவர்மன் வந்ததினால்தானே இந்த வரைக்கும் சோழ நாடு தப்பிப் பிழைத்தது ?” என்றாள் குந்தவை.
“அருள்மொழிவர்மருக்கு அனாவசியமான அபாயத்தை உண்டாக்கி, அவரைக் கடும் குளிர் சுரத்துடன் குற்றுயிராகக் கொண்டு வந்து சேர்த்தேன். அதுவும் பூங்குழலி மகாராணியின் உதவியினால்தான். சேந்தன் அமுதனிடமும் பூங்குழலியிடமும் என் நண்பரை ஒப்புவித்து நாகப்பட்டினத்துக்கு அழைத்துப் போகும்படி சொன்னபோது, அவர்கள் தஞ்சைபுரிக்கு வந்து இந்தச் சோழ சாம்ராஜ்யத்தில் சிங்காதனம் ஏறி மணி மகுடம் சூட்டிக்கொள்ளப் போகிறார்கள் என்று கனவிலும் நான் கருதவில்லை..”
“உத்தமச் சோழ சக்கரவர்த்தியின் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்தவர் தாங்கள்தான் என்பதை நான் மறந்து விடவில்லை, அவரும் மறந்துவிடவில்லை. பெரிய பழுவேட்டரையருக்குப் பதிலாகத் தங்களைச் சோழ நாட்டின் தனாதிகாரியாக்கிவிட வேண்டும் என்று உத்தமச் சோழர் விரும்பினார்…”
“நல்ல வேளை தப்பிப் பிழைத்தேன்!”
“அது என்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்? இச்சோழ சாம்ராஜ்யத்தின் தனாதிகாரி பதவி சாமான்யமானதா? முதன்மந்திரி பதவியைக் காட்டிலும் மாதண்ட நாயகர் பதவியைக் காட்டிலும் பெரியதாயிற்றே? தனாதிகாரியின் தயவு இல்லாமல் சக்கரவர்த்தி கூட எந்தக் காரியமும் செய்ய முடியாதே?”
“தேவி! பெரிய பழுவேட்டரையரின் பாதாளப் பொக்கிஷ நிலவரையில் ஒருமுறை நான் ஒளிந்திருக்க நேர்ந்தது. அப்போது அங்கே கும்பல் கும்பலாகக் கொட்டியிருந்த பொற்காசுகளின் ஒளியில் ஒரு சிலந்திப் பூச்சியின் வலையைப் பார்த்தேன். இறந்து போன மனிதனின் மண்டை எலும்பையும் பார்த்தேன். இனிமேல் அந்த பொக்கிஷ நிலவறைப் பக்கமே போகக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டேன்…”
இளைய பிராட்டி புன்னகை புரிந்து விட்டு, “தாங்கள் தனாதிகாரியானாலும் பொக்கிஷ நிலவறைக்குப் போக வேண்டிய அவசியம் நேராது. அந்த நிலவறையில் இருந்த பொருள்களையெல்லாம் செலவு செய்து பெரியதொரு கடற்படை உருவாக்க, கப்பல்கள் கட்ட அருள்மொழி தீர்மானித்து விட்டான். புதிய சக்கரவர்த்தியின் அனுமதியும் பெற்றுவிட்டான்!” என்றாள்.
“புதிய சக்கரவர்த்தியும் அவருடைய பட்ட மகிஷியும் அருள்மொழிவர்மருடன் கோடிக்கரைக்குச் சென்றிருப்பதாகத் தஞ்சையில் அறிந்தேன்.”
“ஆம், அவர்கள் போகும் போது தங்களையும் உடன் அழைத்துப் போக முடியவில்லையே என்று மிக்க வருத்தப்பட்டுக் கொண்டு போனார்கள்.”
“நான் அதைப் பற்றி வருத்தப்படவில்லை. இப்போது கூடக் கோடிக்கரை போய் அவர்களுடன் சேர்ந்து கொள்வேன். அருள்மொழிவர்மர் நான் இல்லாத சமயம் பார்த்துக் கொடும்பாளூர் இளவரசியைக் கலியாணம் செய்து கொண்டது பற்றித்தான் வருந்துகிறேன்.”
“ஏன், ஐயா! தங்கள் நண்பர் என் தோழியை மணந்து கொண்டது தங்களுக்குப் பிடிக்கவில்லையா?”
“தெய்வமே! அம்மாதிரி நான் சொல்லவில்லை. நான் அந்தத் திருமணத்துக்கு இல்லாமற்போனது பற்றித்தான் வருத்தப்படுகிறேன். வானதியை மணந்து கொள்ளக் கொடுத்து வைத்தது அருள்மொழிவர்மரின் பூர்வ ஜன்ம பாக்கியம். தங்கள் தோழி வானதியும் பாக்கியசாலிதான் ஆனால் எதற்காக அவ்வளவு அவசரப்பட்டார்கள்?”
“அவர்கள் அவசரப்படவில்லை நான்தான் அவசரப்பட்டேன். என் தந்தையும் தாயும் காஞ்சிக்குப் புறப்பட்டுப் போக விரும்பினார்கள். அவர்கள் புறப்படுவதற்குள் திருமணம் நடந்துவிட வேண்டுமென்று சொன்னேன். இதனால் கொடும்பாளூர் பெரிய வேளாரின் மனமும் நிம்மதி அடைந்தது. மகுடாபிஷேக தினத்தில் திடீரென்று தங்கள் நண்பர் உத்தமச் சோழரின் தலையில் சோழ நாட்டுக் கிரீடத்தை வைத்தது பெரிய வேளாருக்குப் பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியிருந்தது.”
“இன்னும் பலரும் அப்போது அதிர்ச்சி அடைந்திருப்பார்கள்.”
“எங்கள் எல்லாருக்குமே அது வியப்பாகத்தானிருந்தது. நண்பர்கள் இருவரும் அந்தச் செய்தியை மிக மிக இரகசியமாக வைத்திருந்தீர்கள்.”
“தேவி! தங்களிடம் மட்டுமாவது சொல்லியிருப்பார் என்று நினைத்தேன்.”
“சில மாதங்களுக்கு முன்னதாக இருந்தால் சொல்லித்தான் இருப்பான். என்னிடம் கேளாமல் அருள்மொழி எந்த காரியமும் செய்தது கிடையாது.”
“இப்போது ஏன் மாறிவிட்டார்?”
“சகவாச தோஷந்தான்! தங்களுடன் சேர்ந்த பிறகுதான் என் அருமைத் தம்பி இவ்வாறு மாறிவிட்டான். உள்ளும் புறமும் ஒன்றாக இருந்தவன் கபட நாடகத்திலும் தந்திர மந்திரத்திலும் தேர்ந்துவிட்டான்!”
“தேவி! என் பேரில் வீண் பழி சுமத்த வேண்டாம். உத்தமச் சோழருக்கு முடிசூட்டிய கபட நாடகத்துக்குத் தங்கள் தம்பிதான் முழுவதும் பொறுப்பாளி. இப்படி எல்லோரையும் ஏமாற்றலாமா என்று நான் விவாதித்துப் பார்த்தேன். இராமபிரான் அயோத்தி ஜனங்களை ஏமாற்றிவிட்டு இரவுக்கிரவே காட்டுக்குச் சென்றதை அருள்மொழி உதாரணமாக எடுத்துக்காட்டினார். தங்களிடமாவது சொல்ல வேண்டாமா என்று கேட்டேன். தம் வாழ்க்கையில் ஒரு முறையாவது தங்களிடம் யோசனை கேளாமல் ஒரு காரியத்தைச் செய்து தங்களிடம் பிற்பாடு பாராட்டு வாங்கப் போவதாகச் சொன்னார். தேவி! இளவரசர் செய்தது தங்கள் மனத்திற்கு உகந்த காரியந்தானே?”
“இதைக் காட்டிலும் உனக்கு உகந்த காரியத்தை இனி யாரும் செய்ய முடியாது. என் தம்பிக்குத் தாங்கள் இக்காரியத்தில் உதவி செய்ததற்கு மிக்க நன்றி!” என்றாள் இளைய பிராட்டி.
“தேவி! அருள்மொழிவர்மர் சிங்காதனம் ஏறி மணி மகுடம் சூடி உலகாளுவதைப் பார்க்கத் தாங்கள் ஆவல் கொண்டிருந்ததாக நினைத்தேன்.”
“முன்னம் அப்படி நான் ஆசை கொண்டிருந்தது உண்மைதான். என் தோழி வானதி அத்தகைய சபதம் செய்த பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். மேலும், தமையன் கொலை செய்யப்பட்டு மாண்ட உடனடியாகத் தம்பி சிங்காதனம் ஏறினால் உலகத்தார் என்ன நினைப்பார்கள்?”
“ஆம், தேவி! இலங்கை இராஜ வம்சத்தில் நடந்திருக்கும் பயங்கரமான செயல்கள் அருள்மொழிவர்மருக்கு இது விஷயத்தில் பெரிதும் கலக்கத்தை உண்டாக்கியிருந்தன. ஆனால் அதைப் பற்றிக் கூட அவர் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. என் பேரில் அந்தக் கொடிய கொலைக்குற்றத்தைச் சிலர் சுமத்த முயன்றபோது, என்னைக் காப்பாற்றுவதற்காகவே சோழ சிங்காதனத்தில் ஏற அவர் உறுதி கொண்டிருந்தார். நல்லவேளையாகப் பெரிய பழுவேட்டரையர் அந்தக் குற்றத்தைத் தம் பேரில் போட்டுக் கொண்டு என் மீது அந்த வீண் பழி விழாமல் காப்பாற்றினார்.”
“பாவம்! அந்தக் கிழவர் ஒருவர் இல்லாதபடியால் சோழ நாடே வெறிச்சோடிப் போனதாகத் தோன்றுகிறது.”
“தமையனைத் தொடர்ந்து தம்பியும் போய்விட்டதை நினைத்துப் பார்த்தால் மிக்க வருத்தமாயிருக்கிறது”
“ஐயோ! சின்னப் பழுவேட்டரையரும் இறந்தே போய்விட்டாரா? நிச்சயந்தானா?” என்று கேட்டாள் குந்தவை.
“நான் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்ட போது அவருக்கு உயிர் இருந்தது. ஆனால் செங்குத்தான மலையிலிருந்து கீழே விழுந்து விட்டவர் எப்படிப் பிழைக்க முடியும்? இறந்து போயிருக்கத்தான் வேண்டும். சின்னப் பழுவேட்டரையரின் மரணத்துக்கும் நானே ஒரு விதத்தில் காரணமாயிருந்தேன் என்று நினைக்கும் போது என் உள்ளம் துடிக்கிறது” என்றான் வந்தியத்தேவன்.
“ஐயா! அதைப்பற்றியெல்லாம் எனக்கு விவரமாகச் சொல்லுங்கள். மகுடாபிஷேக தினத்தன்று சின்னப் பழுவேட்டரையரைச் சபா மண்டபத்திலிருந்து வெளியேற்றுவதற்குத் தாங்களும் என் தம்பியும் சூழ்ச்சி செய்தீர்கள் அல்லவா? அதில் இருந்து விவரமாகச் சொல்லுங்கள். அதைப் பற்றி என் தம்பியிடம் நான் விவரம் கேட்க முடியாமற் போயிற்று. தங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென்றே இருந்தேன். ‘பெண்களிடத்தில் இரகசியம் எதையும் சொல்லக் கூடாது’ என்று எண்ணித்தான் முன்னாலேயே என்னிடம் சொல்லவில்லை, இப்பொழுதாவது சொல்லலாம் அல்லவா?”
“தேவி! அந்தக் காரணத்திற்காகத் தங்களிடம் சொல்லாமல் இல்லை. தங்களை ஒரு முறையாவது ஆச்சரியப்படச் செய்ய வேண்டுமென்று இளவரசர் விரும்பினார்.”
“அப்படி ஒன்றும் நான் ஆச்சரியப்பட்டுவிடவில்லை. நீங்கள் இருவரும் சேர்ந்து இவ்விதம் ஏதோ சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று ஊகித்தேன். ஏதாவது தவறு நேர்ந்துவிடக் கூடாதே என்று சிறிய கவலைப்பட்டுக் கொண்டு இருந்தேன்.”
“உண்மையில், தவறு நேர்ந்துதான் விட்டது. மிக முக்கியமான காரியம் நிறைவேற்றி விட்டாலும், அதன்மூலம் நேர்ந்த வேறு விபரீதத்தைத் தடுக்க முடியாமல் போயிற்று. ஒருவேளை தங்களிடம் யோசனை கேட்டிருந்தால் இந்த மாதிரி நேர்ந்திராது!” என்றான் வந்தியத்தேவன்.
பின்னர், சேந்தன் அமுதனாகிய புதிய மதுராந்தகத்தேவர்க்குப் பட்டம் கட்டவேண்டுமென்று பொன்னியின் செல்வர் தீர்மானித்ததிலிருந்து அவர்கள் போட்ட திட்டங்கள், செய்த சூழ்ச்சிகள், நடத்திய காரியங்கள் எல்லாவற்றைப் பற்றியும் விவரமாகக் கூறினான்.
மதுராந்தகத் தேவருக்கு முடிசூட்டப்போவதாக முன்னாலேயே சொன்னால், அதற்குப் பல ஆட்சேபங்களும் இடையூறுகளும் ஏற்படும் என்று அருள்மொழிவர்மர் எண்ணினார். கொடும்பாளூர் வேளாரும், திருக்கோவலூர் மலையமானும் முன்போலவே அந்த யோசனையை எதிர்ப்பார்கள். பெரிய பழுவேட்டரையரோ மரணத்தறுவாயில் பொன்னியின் செல்வருக்கே முடிசூட்ட வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே அவரைச் சேர்ந்தவர்கள் விரும்புவார்கள். சின்னப் பழுவேட்டரையர் தமது மருமகன் உண்மையான மதுராந்தகன் அல்லவென்று தெரிந்து கொண்டு விட்டார். படகோட்டியின் மகளான பூங்குழலியைச் சிங்காதனத்தில் அமர்த்துவதில் அவருக்கு உற்சாகம் இருக்க முடியாது. செம்பியன் மாதேவி, சேந்தன் அமுதனாகிய மதுராந்தகத்தேவன், பூங்குழலி எல்லாருமே ஆட்சேபணை செய்வார்கள். அவர்களுடைய ஆட்சேபணைகளைப் புறக்கணிக்கச் சுந்தர சோழரும் விரும்பாதவராயிருக்கலாம். இந்தக் காரணங்களையெல்லாம் மனத்தில் வைத்துக்கொண்டுதான் பொன்னியின் செல்வர் தாம் செய்யத் தீர்மானித்த காரியத்தைக் கடைசி நிமிஷம் வரையில் இரகசியமாக வைத்திருக்க விரும்பினார். மகுடாபிஷேக சமயத்தில் தம்மிடம் கொண்ட அன்பினாலோ அல்லது மதுராந்தகரிடம் கொண்ட பொறாமையினாலோ ஆட்சேபணை கிளப்பித் தடை செய்யக் கூடிய பரபரப்புக்காரர்கள் எல்லாரையும் ஒவ்வொருவராக வெவ்வேறு காரணங்களைச் சொல்லி வெளியூர்களுக்கு அனுப்பி வைத்தார். தமக்கு உதவி செய்ய ஒருவர் வேண்டுமே என்பதற்காக வந்தியத்தேவனிடம் மட்டும் தமது அந்தரங்க நோக்கத்தைச் சொல்லியிருந்தார். இருவரும் யோசித்துத் திட்டங்கள் வகுத்துக் காரியங்களும் கவனமாகச் செய்து வந்தார்கள்.
இளஞ் சம்புவரையன் கந்தமாறன், பார்த்திபேந்திரப் பல்லவன், கொடும்பாளூர் வேளார் முதலியோர்களை ஊரை விட்டே அனுப்பியாகி விட்டது. ஆனால் சின்னப் பழுவேட்டரையரை ஊரைவிட்டு அனுப்புவது சாத்தியம் இல்லை. அவர் கையினால் பொன்னியின் செல்வரின் சிரசில் மணி மகுடத்தைச் சூட்டுவது என்ற பேச்சும் ஏற்பட்டு விட்டது. அந்தச் சமயத்தில் சேந்தன் அமுதனாகிய புதிய மதுராந்தகர் தலையில் முடிசூட்டச் சொன்னால் அவர் தடை சொல்லாமலிருப்பாரா? அவர் மறுதளித்தால் அது பெரிய அபசகுனமாகக் கருதப்படும். அதிலிருந்து வேறு பல குழப்பங்களும் ஏற்படலாம். ஆகையால் முடிசூட்டுகிற சமயத்தில் அவரை மண்டபத்திலிருந்து வெளியேற்றுவதற்கு ஏதேனும் யுக்தி செய்ய வேண்டும் என்று நண்பர்கள் இருவரும் யோசித்தார்கள். முழுதும் திருப்திகரமான யுக்தி எதுவும் தோன்றவில்லை. இச்சமயத்தில் ஆழ்வார்க்கடியான் வந்து ஒரு விசித்திரமான செய்தியைக் கூறினான்.
பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளான ரவிதாஸன் கூட்டத்தார் எங்கே போனார்கள், நந்தினி தேவி இன்னமும் அவர்களுடனே இருக்கிறாளா, திருப்புறம்பயம் காட்டில் நள்ளிரவில் முடிசூட்டப்பட்ட சிறுவன் எங்கே மறைந்து வைக்கப்பட்டிருக்கிறான் என்னும் செய்திகளை அறிந்து வருவதற்காக முதன்மந்திரியின் சம்மதத்துடன் ஆழ்வார்க்கடியானை அருள்மொழிவர்மர் அனுப்பியிருந்தார். பாதாளச் சிறையிலிருந்து தப்பிச்சென்ற கருத்திருமன் அவர்களுடன் சேர்ந்து கொண்டிருக்கிறானா, கந்தமாறன் வந்து சொன்னபடி பழைய மதுராந்தகன் இறந்தது உண்மையா, அல்லது அவனும் தப்பிப் பிழைத்துச் சதிக் கூட்டத்தாருடன் சேர்ந்திருக்கிறானா என்று தெரிந்து கொண்டு வருவதற்கும் திருமலை நம்பி சென்றிருந்தான். அவன் இச்செய்திகளை அறிந்து வருவதற்கு வெகு காலம் ஆகும் என்று எண்ணியிருந்தார்கள். ஆனால் ஆழ்வார்க்கடியான் சில தினங்களிலேயே திரும்பி வந்து விட்டான்.
ரவிதாஸன் கூட்டத்தைச் சேர்ந்தவர்களும், படகோட்டி முருகையன் மனைவியுமான ராக்கம்மாளைக் கொல்லிமலைக்கு அருகில் அவன் பார்த்தான். அவள் எங்கே போகிறாள் என்பதைக் கவனித்து அவளைத் தொடர்ந்து சென்றால் ரவிதாஸன் கூட்டம் இருக்குமிடத்தைச் சேரலாம் என்று ஆழ்வார்க்கடியான் எண்ணினான். ஆனால் ராக்கம்மாள் தஞ்சைபுரிக்குச் செல்லும் மார்க்கத்தில் சென்றது அவனுக்கு வியப்பு அளித்தது. ஆயினும், அவளைத் தொடர்வதே ஆபத்துதவிகளைப் பற்றி அறிவதற்கு உபாயம் என்று எண்ணி மாறுவேடம் பூண்டு அவள் அறியாதபடி பின் தொடர்ந்து சென்றான். உறையூருக்கு அருகில் வந்த பிறகு தஞ்சையில் பொன்னியின் செல்வருக்கு நடக்கப்போகும் முடிசூட்டு விழாவைப் பார்ப்பதற்காக மக்கள் திரள் திரளாகச் சென்று கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் ராக்கம்மாளும் கலந்து கொண்டாள். ஆயினும் ஆழ்வார்க்கடியான் அவளை விடாமல் பின் தொடர்ந்து தஞ்சை வரைக்கும் வந்தான். ராக்கம்மாள் கூட்டத்தோடு கூட்டமாகத் தஞ்சைக் கோட்டைக்குள்ளும் புகுந்து சின்னப் பழுவேட்டரையரின் அரண்மனையைச் சுற்றி வட்டமிட்டதைக் கண்டதும் அவனுக்கு மிக்க வியப்பு உண்டாயிற்று. உடனே அருள்மொழிவர்மரிடமும் வந்தியத்தேவனிடமும் போய் இச்செய்தியைத் தெரிவித்தான். ராக்கம்மாளைச் சிறைப்படுத்தி விடலாமா என்று முதலில் அவர்கள் யோசனை செய்தார்கள். அப்படிச் செய்யவேண்டாம் என்றும், அவள் எதற்காக வந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்வதே முக்கியமானதென்றும் தீர்மானித்தார்கள். சின்னப் பழுவேட்டரையரின் மகளுக்கு அவள் ஏதோ செய்தி கொண்டு வந்திருக்க வேண்டும் என்று ஊகித்தார்கள். சின்னப் பழுவேட்டரையரிடம் இப்போது அதைச் சொல்ல வேண்டாம் என்றும், முடிசூட்டு விழாவின் போது அவரைச் சபா மண்டபத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்கு அதை உபயோகித்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்தார்கள்.
ஆழ்வார்க்கடியான் மறுபடியும் சின்னப் பழுவேட்டரையரின் அரண்மனைக்கு அருகில் சென்றபோது ராக்கம்மாளைக் காணவில்லை. முடிசூட்டு விழாவுக்காக வந்த ஜனக்கூட்டம் மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஆழ்வார்க்கடியான் அந்தக் கூட்டத்தில் கலந்து நின்று அரண்மனை வாசலைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டு பெண்கள் அரண்மனையிலிருந்து வெளியில் வந்தார்கள். அவர்களில் ஒருத்தி இடுப்பில் குழந்தையையும் வைத்துக் கொண்டிருந்தாள். வந்தவர்களில் இன்னொருத்தி தலையில் முக்காடிட்டு முகத்தைப் பாதி மறைத்துக் கொண்டிருந்தாள் அவள் சின்னப் பழுவேட்டரையரின் மகளாயிருக்கலாம் என்று திருமலை நம்பி ஊகித்தான். அவர்களைத் தடுத்து நிறுத்துவதா, அல்லது எங்கே போகிறார்கள் என்று பார்ப்பதா என்பதை அவனால் நிச்சயிக்க முடியவில்லை. இதற்குள் அவர்கள் ஜனக்கூட்டத்தில் புகுந்து மறைந்து விட்டார்கள். கோட்டை வாசலை நோக்கித்தான் அவர்கள் போயிருக்கவேண்டும் என்று ஊகித்துக்கொண்டு ஆழ்வார்க்கடியான் அங்கே போனான். கோட்டை வாசலுக்கு அப்பால் சிறிது தூரத்தில் வைத்திருந்த பல்லக்கில் அவர்கள் ஏறுவதையும் குதிரை வீரர்கள் புடைசூழப் போவதையும் பார்த்து விட்டான். இனிச் சின்னப் பழுவேட்டரையரிடம் இந்தச் செய்தியைச் சொல்லாமல் தாமதிக்கக் கூடாது என்று சபா மண்டபத்துக்கு வந்தான்.
அந்தச் சமயம் பொன்னியின் செல்வர் தமிழ்ப் புலவரைப் பார்த்துப் பேசும் சமயமாயிருந்தது. சின்னப் பழுவேட்டரையரிடம் ஆழ்வார்க்கடியான் செய்தியைச் சொன்னதும் அவர் உடனே அவனுடன் கிளம்பினார். தமது அரண்மனைக்குச் சென்று மகளைத் தேடினார். மகள் இல்லை என்று அறிந்து திடுக்கிட்டார். ஆழ்வார்க்கடியான் கூறிய செய்தி உண்மையாகவே இருக்க வேண்டுமென்று தீர்மானித்தார். திரும்பி அவர் சபா மண்டபம் வருவதற்குள்ளே “மதுராந்தக உத்தமச் சோழ சக்கரவர்த்தி வாழ்க!” என்று கோஷங்கள் கிளம்பின. சபா மண்டபத்தில் நடந்ததை அறிந்த பிறகு இனி அங்கே தமக்கு வேலை இல்லை என்பதை உணர்ந்து கொண்டார். சில அந்தரங்கமான ஆட்களைத் தம்முடன் அழைத்துக்கொண்டு ஓடிப்போன மகளைத் தேடிக் கொண்டு புறப்பட்டார். தம்முடைய புதல்வி சோழ குலத்தின் பரம்பரைப் பகைவர்களான பாண்டிய குலத்து ஆபத்துதவிகளுடன் சேர்வதா என்று எண்ணியபோது அவருடைய நெஞ்சம் கொதித்தது. அதைக் காட்டிலும் அத்தகைய மகளைத் தம் கையினாலேயே கொன்று விடுவது மேல் என்று எண்ணி விரைந்து சென்றார்.
அன்றிரவு உத்தமச் சோழ சக்கரவர்த்தியின் பட்டாபிஷேக ஊர்வல வைபவங்கள் கோலாகலமாக நடந்து முடிந்த பிறகு ஆழ்வார்க்கடியான் நம்பி அருள்மொழிவர்மரிடம் அன்று மத்தியானம் நடந்த விவரங்களைக் கூறினான். அருள்மொழிவர்மர் வந்தியத்தேவனோடு கலந்து யோசித்தார். ரவிதாஸன் கூட்டத்தார் தந்திர மந்திரங்களிலே எவ்வளவோ கைதேர்ந்தவர்கள் என்பது அவர்கள் மூவருக்கும் தெரிந்திருந்தது. முன்கோபக்காரரான சின்னப் பழுவேட்டரையரால் அவர்களுடைய தந்திரத்தை வெல்ல முடியாதென்றும், அவர்களிடம் சிக்கிக்கொண்டு ஆபத்துக்குள்ளாவார் என்றும் எண்ணினார்கள். தமது அருமை மகளையே கொல்லுவது போன்ற விபரீதமான காரியத்தைச் செய்யக்கூடியவர் என்றும் நினைத்தார்கள். ஆகையால், சின்னப் பழுவேட்டரையரைக் காப்பாற்றி அழைத்து வருவதற்கும், பாண்டிய நாட்டு ரவிதாஸன் கூட்டத்தார் எங்கே இருக்கிறார்கள், என்ன திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து வருவதற்கும் வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் புறப்பட்டுப் போவது நலம் என்ற முடிவுக்கு வந்தார்கள்.
இவ்வாறு சின்னப் பழுவேட்டரையர் தமது மகளையும் அவளைத் தம்மையறியாமல் அழைத்துச் சென்ற சதிகாரர்களையும் பின்தொடர்ந்து போக, அவர் சென்ற வழியை ஆங்காங்கு விசாரித்துக் கொண்டு வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் சென்றார்கள். சின்னப் பழுவேட்டரையர் குறுக்கும் நெடுக்குமாக அங்குமிங்கும் அலைந்து விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்று பின்னால் சென்ற இருவரும் கண்டார்கள். இதிலிருந்து அவருடைய மகளைக் கொண்டு போனவர்கள் வேண்டுமென்று அவரை ஏமாற்றி வேறு வழியில் போகச் செய்ய முயன்றிருக்க வேண்டும் என்று முடிவு கட்டினார்கள். காவேரிக் கரையோரமாக மேற்கு நோக்கி நெடுந்தூரம் பிரயாணம் செய்த பிறகு, அமராவதி நதி காவேரியுடன் கலக்குமிடத்தில் திசை மாறி, அந்தக் கிளைநதிக்கரை வழியாகத் தென்மேற்குத் திசையில் பிரயாணம் செய்தார்கள். சேர நாட்டுக்கும் கொங்கு நாட்டுக்கும் எல்லையாக அமைந்திருந்த ஆனைமலைப் பிரதேசத்தை அடைந்தார்கள். ஆனைமலையின் அடிவாரத்தை அடைந்த பிறகு பிரயாணம் மிகக் கடினமாகிவிட்டது. அந்த வனப் பிரதேசத்தில் மரங்கள் மிக அடர்த்தியாகவும் செழிப்பாகவும் வளர்ந்திருந்தன. வன விலங்குகளின் பயங்கர உறுமல் நாலா திசைகளிலும் கேட்டது. குதிரைகளைச் செலுத்திக் கொண்டு போவது மிகவும் சிரமமாக இருந்தது. குதிரைகளை விட்டு விட்டுக் கால் நடையாகப் போனால் காட்டு மிருகங்களுக்கு அவை இரையாகி விடலாம் என்ற பயமும் இருந்தது.
கடைசியில் நண்பர்கள் இருவரும் மேலே குதிரையைச் செலுத்திப் போக இயலாத மிக அடர்ந்த காட்டுப் பிரதேசத்தை அடைந்தார்கள். சமீபத்தில் எங்கேயோ வேறு ஒரு குதிரை கனைக்கும் சத்தம் கேட்டது. அந்த இடத்தைத் தேடிப்பிடித்து அடைந்தபோது சின்னப் பழுவேட்டரையர் ஏறி வந்த குதிரை அங்கிருப்பதையும், அதைக் காவல் புரிய ஆள் ஒருவன் இருப்பதையும் கண்டார்கள். சின்னப் பழுவேட்டரையரும் அவருடன் வந்த மற்ற மூவரும் அங்கிருந்து கால் நடையாகச் சென்றிருப்பதாக அந்த ஆள் தெரிவித்தான். தங்கள் குதிரைகளையும் அந்த ஆளைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு நண்பர்கள் மேலே போனார்கள். சூரிய வெளிச்சமே உள் நுழையாத கனாந்தகாரம் நிறைந்த காடுகளின் வழியாக அவர்கள் வெகு தூரம் சென்றார்கள். பின்னர், மரமடர்ந்த மலைப்பாதைகளில் ஏறிப் போனார்கள். பத்து அடி தூரத்துக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியாத பாதைகளில் அவர்கள் போக வேண்டியிருந்தது.
கடைசியில் சற்று வெளிச்சம் தெரிந்த ஓர் இடத்தை அடைந்தார்கள். அங்கே மலை மீதிருந்து அருவி ஒன்று செங்குத்தாக விழுந்து கொண்டிருந்தபடியால் இந்த இடைவெளி ஏற்பட்டிருந்தது. அதற்கு அப்பால் தொடர்ந்து பிரயாணம் செய்வது இயலாத காரியமாகத் தோன்றியது. ஏனெனில் மலை சுவர் அங்கே அவ்வளவு செங்குத்தாக மேலெழுந்தது. எவ்வளவு தேடிப் பார்த்தும் மேலே ஏறப்பாதை எதுவும் தென்படவில்லை. அருவியில் குளித்துச் சிறிது இளைப்பாறி விட்டுத் திரும்பிப் போக வேண்டியதுதான் என்று நண்பர்கள் தீர்மானித்தார்கள். சின்னப் பழுவேட்டரையரும் அவருடன் வந்த ஆட்களும் வனவிலங்குகளுக்கு இரையாகியிருக்க வேண்டுமென்று எண்ணினார்கள்.
இந்தச் சமயத்தில் அவர்கள் எதிர்பாராத அதிசயமான காட்சி ஒன்றைக் கண்டார்கள். மலை மேலே அருவியின் நெடுவீழ்ச்சி எங்கிருந்து ஆரம்பமாயிற்றோ, அங்கே இரண்டு மனித உருவங்கள் தெரிந்தன. போரிட்டுக் கொண்டே அவர்கள், அருவி விழும் இடத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களை உற்றுப் பார்த்ததில், இருவரும் தங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள்தான் என்று தெரிந்தது. ஒருவர் சின்னப் பழுவேட்டரையர், இன்னொருவர் அவருடைய மகளை மணந்தவரான பழைய மதுராந்தகர், ஆகா! சண்டை என்ற வார்த்தையைக் கேட்டாலே முகத்தைச் சுளுக்கிக் கொண்டிருந்த மதுராந்தகர் இதற்குள் இவ்வளவு லாகவமாக வாளைக் கையாளக் கற்றுக்கொண்டு விட்டது என்ன விந்தை! காலாந்தக கண்டருடன் சரிசமமாகக் கத்திச் சண்டை இடுகிறாரே? ஐயோ! காலாந்தககண்டர் பின்வாங்குகிறாரே? உண்மையிலேயே களைப்புற்றுப் பின்வாங்கி வருகிறாரா அல்லது எப்படியும் தமது மருமகப்பிள்ளையாயிற்றே என்று தயங்கிப் பின்வாங்கி வருகிறாரா? எப்படியிருந்தாலும் அபாயகரமான அருவி விழும் முனையை நெருங்கி வருகிறாரே! ஐயோ! அங்கே செங்குத்தான அருவிப் பள்ளம் என்பது அவருக்குத் தெரியாது போலிருக்கிறதே!
வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் பெரும் கூச்சல் போட்டு அவருக்கு எச்சரிக்கை செய்ய முயன்றார்கள். அவர்களுடைய முயற்சி பயன்படவில்லை! அருவி விழும்போது எழுந்த ‘சோ’ என்ற சத்தம் நூறு சிங்கங்களின் கர்ஜனையையும், இருநூறு யானைகளின் பிளிறல்களையும் விழுங்கிவிடக் கூடியது. இந்த இரண்டு மனிதர்களுடைய குரல் அந்தச் சத்தத்தை அடக்கிக்கொண்டு மேலே எழக்கூடுமா, என்ன?
ஆகவே, அவர்கள் கண் முன்னாலேயே அந்தக் கோரச் சம்பவம் நிகழ, அவர்கள் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டியதாயிற்று. எதிரியாகிய மருமகனைப் பார்த்துப் போரிட்டுக்கொண்டு, சிறிது சிறிதாகப் பின்வாங்கி வந்த சின்னப் பழுவேட்டரையர் அருவி முனைக்கு வந்து கால்கள் நழுவிச் செங்குத்தான அருவிப் பள்ளத்தில் விழுந்து விட்டார்! அவருடனே போரிட்டுக் கொண்டு வந்த பழைய மதுராந்தகன் பாறை முனையில் வந்து எட்டிப் பார்த்துவிட்டு மறுகணம் மறைந்து விட்டான். சின்னப் பழுவேட்டரையர் கால் நழுவிய இடத்திலிருந்து கீழேயிருந்த பள்ளம் சுமார் முக்கால் தென்னை மரம் உயரம் இருக்கும். இவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தவர் உயிர் பிழைப்பார் என்று எதிர் பார்க்க முடியாது. ஆயினும் அந்த மகா வீரருடைய உடலையாவது பார்க்கலாம் என்று எண்ணி நண்பர்கள் இருவரும் அருவிப் பள்ளத்தின் அருகில் ஓடினார்கள். சின்னப் பழுவேட்டரையரின் உடலைக் காணவில்லை. அருவி விழுந்து விழுந்து அங்கே பெரும் பள்ளமாகித் தண்ணீர் ததும்பிச் சுற்றிலும் இருந்த பாறைகளில் மோதிக் கொண்டிருந்தது. சின்னப் பழுவேட்டரையருடைய உடல் அந்த ஆழமான அருவிக் குளத்தில் முழுகியிருக்க வேண்டும் என்று ஊகித்தார்கள். ஒரு விதத்தில் இது நல்லதுதான். கரையில் பாறைகளின் மீது விழுந்திருந்தால் அந்த மகா வீரரின் உடல் சின்னாபின்னமாகப் போயிருக்கும். ஆழமான குளத்திலே விழுந்தபடியால் அந்தக் கதியிலிருந்து தப்பிவிட்டார். விரைவில் அவருடைய உடலை அருவி நீர்ச்சுழல் வெளியில் கொண்டு வந்து தள்ளும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் சின்னப் பழுவேட்டரையர் வெளியில் வந்தார். நண்பர்கள் இருவரும் விரைந்து குளத்தில் குதித்து அவரைக் கரையில் கொண்டு வந்து சேர்த்தார்கள். முதலில், உயிரற்ற உடல் என்றுதான் எண்ணினார்கள். ஆயினும் ஒருவேளை உயிர் இருக்கக் கூடாதா என்ற இலேசான நம்பிக்கையும் அவர்கள் உள்ளத்தில் இருந்தது. ஆகையால் தண்ணீரில் முழுகியவரை உயிர்ப்பிப்பதற்கு வேண்டிய சிகிச்சைகளைச் செய்தார்கள். வெகு நேரத்துக்குப் பின்னர் சின்னப் பழுவேட்டரையர் மூச்சுவிட்டுக் கண் விழித்துப் பார்த்தார். அவரால் அதிகம் பேச முடியவில்லை. ஆயினும் சொல்ல வேண்டியதைச் சில வார்த்தைகளில் சொல்லி விட்டார்.
மிகப் பிரயாசையின் பேரில் காலாந்தககண்டர் அந்த மலை உச்சியை அடைந்தார். அங்கே ஏறக்குறைய நூறு பேருக்கு நடுவில் அவருடைய மகள் இருந்தாள். ரவிதாஸன் காலாந்தககண்டரைத் தங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி அழைத்தான். அவருடைய மருமகனே பாண்டிய நாட்டுக்கு உரியவன் என்றும், அவனுக்குப் பட்டம் கட்டப் போவதாகவும், சேர மன்னனும் இலங்கை அரசன் மகிந்தனும் புதிய பாண்டியனுக்கு உதவி செய்ய முன் வந்திருப்பதாகவும் கூறினான். அவர்கள் உத்தேசங்களை அறிவதற்காக முதலில் சின்னப் பழுவேட்டரையர் ரவிதாஸன் கூறியதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர், அவர்கள் மீது சதிகாரர்கள் என்று குற்றம் சுமத்தித் தம் குமாரியைத் தம்முடன் அனுப்பி விடும்படி கேட்டார். “உம்முடைய மகள், உம்முடன் வந்தால் அழைத்துப் போகலாம்!” என்றான் ரவிதாஸன். சின்னப் பழுவேட்டரையர் மகளுடைய முகத்தைப் பார்த்தார். அவள் தன் கணவனுடைய கதி தனக்கும் ஆகட்டும் என்று கூறி அவருடன் வர மறுத்துவிட்டாள். “உன்னை இவர்களுடன் விட்டுப் போவதைக் காட்டிலும் என் கையினாலேயே கொன்று விடுகிறேன்!” என்று கூறிக் காலாந்தககண்டர் வாளை ஓங்கினார். அதுகாறும் மறைவாக இருந்த மதுராந்தகன் அச்சமயம் திடீரென்று தோன்றி “என் மனைவியைக் கொல்லுவதற்கு நீ யார்?” என்று கூறி வாட்போர் தொடங்கினான். இதனால் காலாந்தகண்டருக்குச் சிறிது திகைப்பு உண்டாயிற்று. தம் மருமகனைத் தம் கையினாலேயே கொன்று தம் குமாரியைக் கைம்பெண் ஆக்குவது நியாயமா என்ற ஐயம் அவர் மனத்தில் உதித்துவிட்டது. இவ்வாறு மனத்தில் ஏற்பட்ட குழப்பத்தினால் தீவிரமாகப் போர் செய்ய முடியவில்லை. யோசித்துக் கொண்டே பின் வாங்கினார். பின்னால் அருவிப் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் விழுந்து விட்டார்.
இதையெல்லாம் தட்டுத்தடுமாறிச் சொல்லி முடித்து விட்டு, “நான் இனி உயிர் பிழைக்கப் போவதில்லை என் முடிவு நெருங்கிவிட்டது. என்னை இங்கேயே விட்டுவிட்டு நீங்கள் விரைந்து செல்லுங்கள். சேர நாட்டின் மீதும், ஈழ நாட்டின் மீதும் உடனே சோழ சைன்யம் படை எடுத்துச் செல்லட்டும். பொன்னியின் செல்வரை மதுரைக்கு அழைத்துச் சென்று ‘சோழ பாண்டியன்’ என்ற அபிஷேகப் பெயரைச் சூட்டிப் பட்டம் கட்டச் செய்யுங்கள். இந்த மூன்று காரியங்களையும் உடனே செய்யாவிட்டால், சோழ சாம்ராஜ்யத்துக்குப் பேரபாயம் உண்டாவது நிச்சயம். மறுபடியும் பழையபடி பாண்டிய ராஜ்யம் தனியாகப் பிரிந்து போய் விடும்! உடனே விரைந்து செல்லுங்கள்!” என்று காலாந்தககண்டர் கூறினார். அவரை இந்த நிலையில் அனாதையாக விட்டுவிட்டுப் போக நண்பர்களுக்கு மனம் வரவில்லை. ஆகையால் இருவரில் ஒருவர் அவரைப் பார்த்துக் கொள்வது என்றும், இன்னொருவர் தஞ்சைக்குப் போவது என்றும் தீர்மானித்தார்கள். இருவரில் வேகமாகக் குதிரை விடக்கூடியவன் வந்தியத்தேவன் ஆதலால் அவனே, புறப்பட வேண்டியதாயிற்று.