அத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை
வைத்தியர் மகன் பினாகபாணி அரசாங்கத்தில் பெரிய பதவிக்கு வருவதென்று தீர்மானம் செய்திருந்தான். வந்தியத்தேவனைச் சந்தித்த நாளிலிருந்து அவனுடைய உள்ளத்தில் இந்த ஆசை தோன்றிக் கொழுந்து விட்டு ஓங்கி வளர்ந்து கொண்டிருந்தது. இதற்கு முன் அவன் ஈடுபட்ட சில காரியங்களில் அவன் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. நந்தினி தேவி அவனிடத்தில் சிறிது கருணை காட்டியது போலத் தோன்றியது. பிற்பாடு பழுவூர் ராணி அவனை அடியோடு மறந்துவிட்டாள். குந்தவை தேவியைப் பார்க்கப் போன போது அவர் அவனுடன் சரியாக முகம் கொடுத்துப் பேசவும் இல்லை. பழையாறை அரண்மனை வாசலில் வந்தியத்தேவன் மீது ‘ஒற்றன்’ என்று குற்றம் சுமத்தியதில் அவனிடம் அடிபட்டது தான் மிச்சமாயிற்றே தவிர லாபம் ஒன்றும் கிட்டவில்லை.
ஆனால் முதன்மந்திரி அநிருத்தர் அவனைக் கூப்பிட்டு அனுப்பிக் கோடிக்கரைக்குச் சென்று ராணியைப் பிடித்துக் கொண்டு வரும்படி அனுப்பியபோது இனித் தான் பெரிய பதவிக்கு வருவது நிச்சயம் என்று முடிவு செய்து கொண்டான். அந்தக் காரியத்தை எப்படியாவது சரிவர நிறைவேற்றி விட்டால் போதும், முதன்மந்திரியின் தயவினால் அவன் அடையக் கூடாதது ஒன்றுமில்லை. பிறகு முதற்காரியமாக வந்தியத்தேவனை ஒரு கை பார்க்க வேண்டும். அப்புறம் பூங்குழலியின் கர்வத்தையும் அடக்கி ஒடுக்கிவிட வேண்டும்.
இந்த மாதிரி ஆகாசக் கோட்டைகள் கட்டிக் கொண்டு பினாகபாணி கோடிக்கரை சென்றான். அங்கே கோடிக்கரையில் ராக்கம்மாளை மெள்ள வசப்படுத்திக் கொண்டான். அவள் அவனிடம் ஏமாந்து போனாள். ஆபத்துதவிக் கூட்டத்தைச் சேர்ந்தவன் அவன் என்று எண்ணிக் கொண்டு அவர்களுடைய முயற்சிகளைப் பற்றி அவனிடம் பேசினாள். அவள் உதவியைக் கொண்டு ஊமை ராணியைக் கண்டுபிடித்துத் தஞ்சைக் கோட்டை வாசல் வரையில் கொண்டு வந்து சேர்த்தான்.
இப்பிரயாணத்தின் போதெல்லாம் பினாகபாணியின் உள்ளம் வேலை செய்து கொண்டே இருந்தது. ஊமை ராணி சம்பந்தமான இரகசியங்களை அறியப் பிரயத்தனம் செய்தது. பாதாளச் சிறையில் அவன் ஒரு நாள் அடைப்பட்டிருந்தபோது அங்கிருந்த பைத்தியக்காரன் ஒருவன் கூறிய விவரங்கள் நினைவுக்கு வந்தன. அப்போது அவை பைத்தியக்காரனின் உளறலாக அவனுக்குத் தோன்றியது. இப்போது அவன் கூறியவற்றில் உண்மை இருக்கும் என்று எண்ணினான்.
ஊமை ராணி ஏறி இருந்த பல்லக்கு தஞ்சைக் கோட்டைக்கு அருகில் வந்த சமயம் புயலும் மழையும் அடித்து அவன் மீது மரம் முறிந்து விழுந்ததல்லவா? அதனால் ஏற்பட்ட காயங்கள் ஆறிய பின்னர் அவன் முதன்மந்திரி அநிருத்தரைப் பார்க்கப் போனான். அதற்குள்ளே மிக முக்கியமான சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன. ஊமை ராணி சக்கரவர்த்தியின் உயிரைக் காப்பதற்காக உயிரை விட்டுவிட்டாள். கரிகாலர் கொலையுண்டு இறந்து விட்டார். அடுத்த பட்டம் யாருக்கு என்பதைப் பற்றி நாடு நகரமெல்லாம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. தஞ்சைக் கோட்டை கொடும்பாளூர் வேளாரின் வசத்துக்கு வந்து விட்டது. பழுவேட்டரையர்களும் அவர்களைச் சேர்ந்த சிற்றரசர்களும் படை திரட்டிக் கொண்டிருப்பதாகச் செய்தி பரவிற்று. பெரிய உள்நாட்டுப் போர் மூளலாம் என்பதற்கு அறிகுறிகள் தென்பட்டன.
இத்தகைய கொந்தளிப்பான நிலையில் வைத்தியர் மகன் பினாகபாணி முதன்மந்திரி அநிருத்தரைப் போய்ப் பார்த்தான். பெரும் கவலைக் கடலில் ஆழ்ந்திருந்த அன்பில் பிரம்மராயர் பினாகபாணியோடு அதிகமாய்ப் பேசிக் காலம் போக்க விரும்பவில்லை. தாம் இட்ட காரியத்தை அவன் நிறைவேற்றி விட்டபடியால் அவனுக்குப் பரிசு கொடுத்துச் சீக்கிரமாக அனுப்பிவிட விரும்பினார்.
ஆனால் பினாகபாணி பாதாளச் சிறையில் தான் சந்தித்த பைத்தியக்காரனைப்பற்றிச் சொல்லத் தொடங்கியதும் அவருடைய உள்ளம் அவன் பக்கம் திரும்பியது. பாண்டிய ராஜ்யத்தின் புராதனமான மணி மகுடமும், தேவேந்திரன் அளித்ததாகக் கூறப்படும் இரத்தின ஹாரமும் இலங்கையில் எங்கே இருக்கின்றன என்பது அந்தப் பைத்தியக்காரனுக்குத் தெரியும் என்று கேட்டதும் அநிருத்தர் மிக்க ஆர்வம் கொண்டார். அந்த மணி மகுடத்தையும், இரத்தின ஹாரத்தையும் தேடிக் கண்டுபிடிப்பதற்குப் பராந்தகச் சக்கரவர்த்தியின் காலத்திலிருந்து முயன்றும் பலன் கிட்டவில்லை. அவற்றைக் கைப்பற்றும் வரையில் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவன் என்பதாக யாராவது ஒருவன் முளைத்துக் கொண்டுதானிருப்பான். திருப்புறம்புயத்தில் நள்ளிரவில் ஒரு சின்னஞ்சிறு பையனைப் பாண்டிய சிங்காதனத்தில் ஏற்றி மகுடம் சூட்டிய நாடகத்தைப் பற்றி அநிருத்தர், ஆழ்வார்க்கடியான் மூலம் அறிந்திருந்தார். இம்மாதிரி யாராவது சிலர் அவ்வப்போது கிளம்பிக் கொண்டுதானிருப்பார்கள். அவர்களுக்கு ஈழத்து அரசர்களும், சேர மன்னர்களும் உதவி செய்வார்கள். பாண்டிய நாடு ஒரு வழியாகச் சோழ சாம்ராஜ்யத்துடன் சேர்த்துவிட்டதாக ஏற்பட வேண்டுமானால், சோழ சக்கரவர்த்தியே மதுரையிலும் முடிசூட்டிக் கொள்ள வேண்டும். அந்த வைபவத்தின்போது பாண்டிய வம்சத்தின் புராதன கிரீடத்தையும், இரத்தின ஹாரத்தையும் சோழ சக்கரவர்த்தி அணிய வேண்டும்.
இவையெல்லாம் முன்னமே அநிருத்தர் தீர்மானித்திருந்த காரியங்கள். ஆகையினாலேயே ஈழ நாட்டுக்குப் படையெடுத்துச் சென்ற ஒவ்வொரு சோழ தளபதியிடமும் அநிருத்தர் மேற்கூறிய மணிமகுடத்தையும், இரத்தின ஹாரத்தையும் கண்டுபிடித்துக் கொண்டு வரும்படி சொல்லி அனுப்பி வந்தார். அதுவரையில் ஒருவராவது அக்காரியத்தில் வெற்றி பெறவில்லை. இப்போது பாதாளச் சிறையில் உள்ள ஒருவனுக்கு அவை இருக்குமிடம் தெரியும் என்று கேள்விப்பட்டதும் அன்பில் அநிருத்தப் பிரம்மராயர் ஆர்வம் கொண்டது இயற்கையே அல்லவா?
வைத்தியர் மகன் இன்னொரு செய்தியும் கூறினான். அது முதன்மந்திரியின் ஆர்வத்தை அதிகமாக்கியதோடு கவலையையும் உண்டாக்கியது. அந்தப் பைத்தியக்காரன் சோழ வம்சத்தைப் பற்றி ஒரு மகத்தான இரகசியம் தனக்குத் தெரியும் என்றும், சோழ சிங்காதனத்துக்கு உரிமை கொண்டாடும் இளவரசன் ஒருவன் உண்மையில் சோழ வம்சத்தைச் சேர்ந்தவனே அல்லவென்றும் கூறியதாகப் பினாகபாணி சொன்னான்.
இதையெல்லாம் கேட்டதும் அநிருத்தர் முதலில் தாமே பாதாளச் சிறைக்குப் போய் அந்தப் பைத்தியக்காரனைப் பார்க்க எண்ணினார். பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டார். தாம் அங்கே போனால், எதற்கு, என்னத்திற்கு என்ற கேள்விகள் கிளம்பும். மலையமானும், வேளாரும் அநிருத்தரிடம் பூரண நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அவர் சக்கரவர்த்தியின் விருப்பத்தின்படி மதுராந்தகன் கட்சியை ஆதரிப்பதாகவே அவர்கள் கருதியிருந்தார்கள். தாம் பாதாளச் சிறைக்குப் போனால் அதிலிருந்து ஏதேனும் புதிய சந்தேகங்கள் அவர்களுக்கு ஏற்படும். சம்புவரையரைப் பார்க்கப் போவதாகவும் எண்ணிக் கொள்வார்கள். இந்த அம்சத்தைப் பற்றி நன்கு யோசித்த பிறகு, அநிருத்தர் வைத்தியர் மகனையே உபயோகித்துக் கொள்ள விரும்பினார். தம் முத்திரை மோதிரத்தைக் கொடுத்துப் பாதாளச் சிறைக்குச் சென்று அந்தப் பைத்தியக்காரனைப் பார்த்து வரும்படி கூறினார்.
பினாகபாணி அவ்விதமே அப்பைத்தியக்காரனைப் பார்க்கப் போனான். பக்கத்து அறையில் வந்தியத்தேவன் அடைக்கப்பட்டுக் கிடந்ததைப் பார்த்ததும் அவனுக்குக் குதூகலமே உண்டாகி விட்டது. அந்த அறையின் வாசலில் சிறிது நின்று வந்தியத்தேவனுடன் பேச்சுக் கொடுத்தான். வந்தியத்தேவன் அவனுடன் பேசவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்து அவனை நன்றாகத் திட்டிவிட்டு அடுத்த அறைக்குப் போனான். உண்மையில் அவன் பைத்தியக்காரன் அல்லவென்பதைப் பினாகபாணி கண்டுகொண்டான். பிறகு, பாண்டிய நாட்டு மணிமகுடம் – இரத்தின ஹாரம் ஆகியவற்றைக் குறித்துக் கேட்டான். பைத்தியக்காரன் உடனே மௌனமானான். சோழ வம்சத்து இரகசியத்தைப் பற்றியும் சொல்ல மறுத்துவிட்டான். “எனக்கு முதலில் விடுதலை உத்தரவு வாங்கி வா! பிறகுதான் சொல்வேன்!” என்று கூறிவிட்டான்.
திரும்பி வந்து பினாகபாணி முதன்மந்திரியிடம் தன்னுடைய தோல்வியைப்பற்றிக் கூறினான். அவனை விடுவித்துக் கொண்டு வந்தால் நிச்சயம் பலன் கிட்டும் என்றும் தெரிவித்தான். முதன்மந்திரிக்கும் அது உசிதமாகத் தோன்றியது. இம்மாதிரி இராஜ்ய உரிமை பற்றிக் குழப்பம் ஏற்பட்டிருக்கும் நிலைமையில் அபாயகரமான இரகசியங்களைப் பற்றிப் பேசும் பைத்தியக்காரனைச் சிறையில் வைத்திருக்கக்கூடாது என்று கருதினார். அவனைத் தமது அரண்மனைக்கே அழைத்து வந்து உண்மையை அறிய வேண்டும் என்று எண்ணினார். அதன் பேரில் கொடும்பாளூர் வேளாரைப் பார்த்து அவரிடம் ஒருவாறு இந்தச் செய்தியைக் கூறினார். சின்னப் பழுவேட்டரையரால் பல வருஷங்களுக்கு முன்னால் சிறையில் அடைக்கப்பட்ட கைதியை முதன்மந்திரியின் விருப்பத்தின் பிரகாரம் விடுதலை செய்வதில் பெரிய வேளாருக்கு ஆட்சேபம் ஒன்றும் தோன்றவில்லை. எனவே அப்பைத்தியக்காரக் கைதியை விடுதலை செய்யக் கட்டளை எழுதிக் கொடுத்தார்.
அதை வாங்கிக் கொண்டு பினாகபாணி கர்வத்துடன் பாதாளச் சிறைக்குச் சென்றான். முதலில் வந்தியத்தேவன் அறையின் வாசலில் நின்று அவனை விடுதலை செய்ய உத்தரவு கொண்டு வந்திருப்பதாகச் சொன்னான். வந்தியத்தேவன் அதை உண்மை என்று நம்பி நன்றி கூறத் தொடங்கினான். உடனே பினாகபாணி தன் உண்மை சொரூபத்தைக் காட்டலானான். வந்தியத்தேவனை நன்றாகத் திட்டிவிட்டு, “உனக்கு நாற்சந்தி மூலையில் கழுமரத்தின் மேலே தான் விடுதலை” என்று எகத்தாளம் செய்தான். பின்னர் அடுத்த அறைக்குச் சென்று பைத்தியக்காரனுடன் சுமுகமாகப் பேசினான். அவனைச் சுவரோடு சேர்த்துப் பிணைத்திருந்த சங்கிலிகளை அவிழ்த்து விட்டான். “இதோ உனக்கு விடுதலை உத்தரவு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன். இப்போதாவது உனக்குத் தெரிந்த இரகசியங்களை சொல்லுவாயா?” என்று கேட்டான்.
முதன்மந்திரி அநிருத்தரிடம் அழைத்துப் போவதற்கு முன்னால் தானே அந்த இரகசியங்களை அறிந்துகொள்ள வைத்தியர் மகன் விரும்பினான். பைத்தியக்காரன் தன்னுடைய விடுதலையில் அவ்வளவு உற்சாகம் கொண்டவனாகக் காணப்படவில்லை. வெளியேறுவதற்கும் அவசரப்பட்டவனாகத் தோன்றவில்லை. பினாகபாணியின் வார்த்தையில் அவ்வளவு நம்பிக்கை கொண்டவனாகவும், தெரியவில்லை. “என்ன? ஏது? உத்தரவு யார் கொடுத்தது? சிறையிலிருந்து வெளியேறுவது நிச்சயமா? கோட்டையிலிருந்து வெளியே போக விடுவார்களா?” என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
திடீரென்று பக்கத்துச் சுவரிலிருந்து சில கற்கள் பெயர்ந்து விழுந்தன. பினாகபாணி என்னவென்று திரும்பிப் பார்த்தபோது வந்தியத்தேவன் அவன் பின்னால் நிற்பதைக் கண்டான். பினாகபாணி இடுப்பில் செருகியிருந்த கத்தியை அவசரமாக எடுத்துக் கொண்டான். வந்தியத்தேவன் அவன் மீது பாய்ந்து கழுத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். கையிலிருந்த கத்தியையும் தட்டிவிட்டான். இருவரும் சிறிது நேரம் உருண்டு புரண்டு துவந்த யுத்தம் செய்தார்கள். அச்சமயம் பைத்தியக்காரன் சுவரில் மாட்டியிருந்த சங்கிலி ஒன்றைத் தூக்கிப் பினாகபாணியின் கழுத்தில் போட்டு இறுக்கினான்…