அத்தியாயம் 21 - "நீயும் ஒரு தாயா?"
சிவபக்தியே உருவெடுத்தாற்போல் விளங்கிய மாதரசி செம்பியன் தேவி தொடர்ந்து கூறினார்:
“மகனே! உன் தந்தை கண்டராதித்த தேவர் சிம்மாசனம் ஏறியபொழுது, சோழ ராஜ்யத்தில் ஒரு சங்கடமான நிலைமை ஏற்பட்டிருந்தது. உன் பாட்டனார் பராந்தகச் சக்கரவர்த்தியின் பெருமையை நீ அறிந்திருக்கிறாய். அவருடைய ஆட்சிக்காலத்தில் சோழ ராஜ்யம் தெற்கே ஈழ நாடு வரையிலும், வடக்கே கிருஷ்ணை நதி வரையிலும் பரவியது. ஆனால், அவருடைய அந்திம காலத்தில் இராஜ்யத்துக்கும், இராஜ குலத்துக்கும் பல விபத்துக்கள் ஏற்பட்டன. இராவணேசுவரனுடைய மூல பல சைன்யத்தைப் போல் இரட்டை மண்டலத்துப் படைகள் படை எடுத்து வந்தன. பராந்தகச் சக்கரவர்த்தியின் மூத்த புதல்வரும், ஒப்புவமையில்லாத வீராதி வீரரும், உன் பெரிய தகப்பனாருமான இராஜாதித்த தேவர் இரட்டை மண்டலத்து மாபெரும் சைன்யத்தை எதிர்க்கப் புறப்பட்டார். வடக்கே தக்கோலம் என்னுமிடத்தில் குருஷேத்திர யுத்தத்தைப் போன்ற மாபெரும் போர் நடந்தது, லட்சக்கணக்கான வீரர்கள் மாண்டனர். இரத்த வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. இரட்டை மண்டலத்தாரின் சைன்யம் சிதறி ஓடியது ஆனால் அந்தப் போரில் இராஜாதித்த தேவர் பலியாகிவிட்டார். உன்னுடைய சித்தப்பா அரிஞ்சயத் தேவரும் அந்தப் போரில் ஈடுபட்டுப் படுகாயம் அடைந்தார். ஆனால் அவரைப் பற்றி யாதொரு விவரமும் அப்போது தெரியவில்லை. அரிஞ்சய தேவரின் மூத்த புதல்வர் சுந்தர சோழர், – சின்னஞ்சிறு பிராயத்துப் பிள்ளை – ஈழத்துப் போருக்குச் சென்றிருந்தார். அவரைப் பற்றியும் செய்தி கிட்டவில்லை. இராஜ குலத்தில் பிறந்து அச்சமயம் தஞ்சை அரண்மனையில் பராந்தகச் சக்கரவர்த்தியின் அருகில் இருந்தவர் உன் தந்தைதான்.
ஆனால் உன் தந்தையோ இளம் பிராயத்திலேயே இராஜ்ய விவகாரங்களை வெறுத்துச் சிவபெருமானிடம் மனத்தைச் செலுத்தி வந்தவர். அவருக்கு யுத்தம் என்றால் பிடிப்பதில்லை. மன்னர்களின் மண்ணாசை காரணமாக மக்கள் போரிட்டு மடிவானேன் என்று அவர் வருந்தினார். தந்தையிடமும் சகோதரர்களிடமும் அதைக் குறித்து வாதித்தார். சிவஞானச் செல்வர்களான பெரியோர்களின் சகவாசத்திலும், புண்ணிய ஸ்தல யாத்திரையிலும், ஆலய வழிபாட்டிலும் காலத்தைச் செலவிட்டார். வாள், வேல் முதலிய ஆயுதங்களைக் கையினால் தொடவும் அவர் விரும்பவில்லை. யுத்த தந்திரங்களிலும் போர் முறைகளிலும் அவர் பயிற்சி பெறவில்லை. பொய்யும் புனை சுருட்டும், வஞ்சகமும், வேஷமும் சூழ்ச்சிகளும் மறு சூழ்ச்சிகளும், கொலை முதலிய பாவங்களும் நிறைந்தது இராஜரீகம் என்று அவர் நம்பினார். ‘திருடன் பிறர் பொருளைத் திருடுவதற்கும், ஒரு நாட்டு அரசன் இன்னொரு நாட்டைக் கவர்வதற்கும் என்ன வித்தியாசம்?’ என்று அவர் கேட்டார்.
மகனே! விதிவசத்தால் அப்படிப்பட்ட கொள்கையுடைய உன் தந்தை இந்தச் சோழ நாட்டின் பாரத்தை வகிக்கும்படியாக நேர்ந்துவிட்டது. பராந்தகச்சக்கரவர்த்தி, இராஜ்யத்துக்கு நேர்ந்த பல விபத்துக்களினாலும், இராஜாதித்தரின் மரணத்தினாலும் மனம் நொந்து மரணத்தை எதிர்பார்த்திருக்கும் வேளையில் உன் தந்தையை அழைத்து, ‘இராஜ்ய பாரத்தை நீ தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்றார். உன் தந்தை மரணத்தறுவாயிலிருந்த உன் பாட்டனாரின் மனத்தை மேலும் புண்படுத்த விரும்பாமல் ஒப்புக்கொண்டார். உன் தந்தையை எனக்கு முன்னால் மணந்திருந்த பாக்கியவதியான வீரநாராயணி தேவி அதற்கு முன்னரே சிவபதம் அடைந்து விட்டார். நானோ அப்போது உன் தந்தையைப் பார்த்ததே இல்லை. ஆகையால் உன் தந்தையின் காலத்துக்குப் பிற்பாடு சோழ மகாராஜ்யம் என்ன ஆவது என்ற கவலை உன் பாட்டனாருக்கு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அச்சமயத்தில் உன் சிறிய தந்தையின் குமாரரைத் தேடுவதற்காக ஈழத்திற்குப் போனவர்கள், அங்கே ஒரு தீவிலிருந்த சுந்தர சோழரைக் கண்டுபிடித்து, அவரை அழைத்துக் கொண்டு வந்தார்கள்.
பராந்தகச் சக்கரவர்த்தி சுந்தர சோழரிடம் அளவிலாத பிரியம் வைத்திருந்தார். குழந்தையாயிருந்த நாளிலிருந்து, மடியில் வைத்துத் தாலாட்டிப் பாராட்டி வளர்த்து வந்தார். பெரியோர்கள் பலர், சுந்தரசோழரின் மூலமாய்ச் சோழகுலம் மகோன்னதம் அடையப் போகிறது என்று சொல்லியிருந்தார்கள்.
இத்தகைய காரணங்களினால் உன் பாட்டனாருக்குச் சுந்தர சோழர் மீது அபாரமான பிரேமை. ஆகையால், உன் தந்தை சிம்மாசனம் ஏறும்போது, சுந்தர சோழருக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிடவேண்டும் என்றும், அவருடைய சந்ததியர்கள் தான் சோழ நாட்டை ஆண்டு வரவேண்டும் என்றும் சொல்லி விட்டுச் சிவபதம் அடைந்தார். இந்த விவரங்களையெல்லாம் உன் தந்தை என்னிடம் கூறினார். பராந்தகச் சக்கரவர்த்தி மரணத் தறுவாயில் வெளியிட்ட விருப்பத்தை நிறைவேற்ற அவர் உறுதிகொண்டிருந்தார். சுந்தர சோழரும் அவருடைய சந்ததியாரும் பட்டத்துக்கு வருவதில் எவ்வித இடையூறும் நேரிடக் கூடாதென்று எண்ணினார். உன் தந்தைக்கு இராஜ்யம் ஆளும் ஆசை இல்லை; இராஜரீக காரியங்களில் பற்றுதலும் இல்லை. அவர் புண்ணிய புருஷர். அவருடைய உள்ளம் சதாசர்வ காலமும் நடராஜப் பெருமானின் இணையடித் தாமரைகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. ஆகவே, தமது தம்பியாகிய அரிஞ்சயரிடமும், அவருடைய புதல்வர் சுந்தர சோழரிடமும் இராஜ்ய காரியங்கள் முழுவதையும் ஒப்படைத்திருந்தார். தாம் சிவபெருமானுடைய கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்தார். முன்னமே சொன்னேனே, அது போல் அவருக்கு மறுபடியும் மணம் செய்துகொள்ளும் எண்ணமே இருக்கவில்லை. ஆனால் அவருடைய மன உறுதியைக் கலைக்க நான் ஒருத்தி வந்து சேர்ந்தேன். நானும் சிவபக்தியில் ஈடுபட்ட ‘பிச்சி’ என்று அறிந்ததனாலேயே அவர் என்மீது பிரியங் கொண்டு என்னைத் திருமணம் புரிந்தார். அவரைப் பதியாக அடைந்த நான் பாக்கியசாலி. எத்தனையோ ஜன்மங்களில் அவரை அடைய நான் தவம் செய்திருக்க வேண்டும். அவரைத் தந்தையாகப் பெற்ற நீயும் பாக்கியசாலி. இந்த உலகில் இறைவனைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்த மகான்கள் வெகு சிலர்தான். சிவபெருமான் ரிஷபாரூடராய் வந்து, உன் தந்தைக்குக் காட்சி தந்து, அவரை இம்மண்ணுலகிலிருந்து அழைத்துப் போனார், நான் இப்போது உன்னை என் ஊனக்கண்களால் பார்ப்பதுபோல உன் தந்தை பரமசிவனைத் தரிசித்தார். அப்படிப்பட்ட புண்ணிய புருஷருடைய விருப்பத்தை நிறைவேற்ற நானும் நீயும் கடமைப்பட்டவர்கள்…!”
அன்னை இவ்விதம் கூறி நிறுத்தியபோது, கேட்டுக் கொண்டிருந்த மகனுடைய உடல் பதறிக்கொண்டிருந்தது. அவனுடைய உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது.
“அது எப்படி, தாயே! என் தந்தை என்னிடம் ஒன்றும் தெரிவிக்கவில்லையே? நான் என்ன கடமைப்பட்டிருக்கிறேன்? எந்த விதத்தில் கடமைப்பட்டிருக்கிறேன்?” என்றான் மதுராந்தகன்.
“மகனே! கேள்! உன் தந்தை சிவபெருமானுடைய பாத மலர்களை அடைந்தபோது நீ சின்னஞ்சிறு பிள்ளை. ஆகையால், உன்னிடம் அவர் ஒன்றும் தெரியப்படுத்த முடியவில்லை. ஆனால் என்னிடம் சொல்லிவிட்டுப் போனார்; நாங்கள் மணம் புரிந்த புதிதில் மக்கள் பேற்றை விரும்புவதில்லையென்று முடிவு செய்திருந்தோம். ஆனால் பேதையாகிய என்னால் அந்த மன உறுதியை நிறைவேற்ற முடியவில்லை. கன்னிப் பருவத்தில் சிவபெருமானிடம் நான் கொண்டிருந்த பக்தி உன் தந்தையிடம் கொண்டிருந்த பிரேமையாக மாறியது. நாளடைவில், என் கையில் ஏந்தி, மார்போடு அணைத்து, மடியில் வைத்துத் தாலாட்டிப் பாராட்டிக் கொஞ்சுவதற்குக் குழந்தை வேண்டும் என்று என் இருதயம் தாபம் கொண்டது. மற்றப் பெண்களின் கையிலும் மடியிலும் குழந்தையைக் கண்டால் என் உடம்பெல்லாம் துடித்து; உள்ளம் பற்றி எரிந்தது. குழந்தைப் பருவத்தில் என்னை ஆட்கொண்ட இறைவனிடம் வரம் கோரினேன். இறைவனும் இந்தப் பேதையின் கோரிக்கையை நிறைவேற்றினார். உன்னை எனக்கு அளித்தார். ஒரு பக்கத்தில் உன்னைப் பெற்றதினால் நான் உள்ளமும் உடலும் பூரித்தேன்; மற்றொரு பக்கத்தில் உன் தந்தையின் கோபத்துக்கு ஆளாகி விட்டேனோ என்று பயந்தேன். அந்த மகா புருஷர் என் மீது கோபிக்கவில்லை. ஆனால் அவருடைய வாக்கை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை மட்டும் என்மீது சுமத்திவிட்டுப் போனார்.”
“மகனே! உன்னை இந்த மண்ணுலக வாழ்க்கையில் பற்றுதல் கொள்ளாமல், சிவபக்த சிகாமணியாகும்படி வளர்ப்பேன் என்று உன் தந்தைக்கு வாக்குக் கொடுத்தேன். அதை நிறைவேற்றி விட்டதாகவே சில காலத்துக்கு முன்பு வரையில் எண்ணி இறுமாந்திருந்தேன்.”
“ஆனால், என் உயிருக்குயிரான மகனே! என் கண்ணுக்குக் கண்ணான செல்வப் புதல்வனே! சில நாளாக நான் ஏதேதோ கேள்விப்படுகிறேன். அப்படிப்பட்ட பேச்சைக் கேட்கும் போதெல்லாம் என் நெஞ்சு புண்ணாகிறது. நான் கேள்விப்படுவதெல்லாம் பொய்யென்று நீ உறுதி சொல்லி, என் நெஞ்சில் உள்ள புண்ணை ஆற்றமாட்டாயா?” என்று அன்னை செம்பியன்மாதேவி கெஞ்சினாள்.
“தாயே! தங்களுடைய மர்மமான வார்த்தைகள் என்னுடைய நெஞ்சையும் புண்ணாக்குகின்றன. தாங்கள் என்ன கேள்விப்படுகிறீர்கள், என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்; என்னிடம் என்ன உறுதி கேட்கிறீர்கள்?” என்று மதுராந்தகன் சீறினான்.
“குழந்தாய்! என் மனத்திலுள்ளதை அறிந்துகொள்ளும் சக்தியை நீ இழந்துவிட்டாய் போலும்! வெளியிட்டுச் சொல்லத்தான் வேண்டும் என்கிறாய்; நல்லது, சொல்லுகிறேன். உன் மனம் சிவபக்தியாகிய கங்கை நதியிலிருந்து மண்ணாசையாகிய குட்டையில் விழுந்துவிட்டது என்று கேள்விப்படுகிறேன். சோழ குலத்துச் சிம்மாசனத்தில் ஏற, நீ ஆசை கொண்டிருக்கிறாய் என்று கேள்விப்படுகிறேன். உன் புனிதமான உள்ளத்தை நம் விரோதிகள் அவ்விதம் கெடுத்துவிட்டார்கள் என்று அறிகிறேன். நான் இவ்வாறு கேள்விப்பட்டது உண்மையல்ல என்று நீ கூறினால், என் மனம் நிம்மதி அடையும்!” என்றாள் மூதாட்டி.
மதுராந்தகன் இதுவரை உட்கார்ந்திருந்த பீடத்திலிருந்து எழுந்து நின்றான். அவனுடைய படபடப்பை பார்த்துத் தாயும் எழுந்தாள்.
“என்னுடைய மனத்தை விரோதிகள் யாரும் கெடுக்கவில்லை. என்னைச் சிம்மாசனம் ஏற்ற விரும்புகிறவர்கள் என் விரோதிகளா? எனக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்க முன் வந்திருப்பவர்கள் என் விரோதிகளா? ஒரு நாளும் இல்லை. உண்மையில் என் ஜன்ம விரோதி யார்? என்னைப் பெற்றவளாகிய நீதான்!…” என்று மதுராந்தகன் கூவினான்.
ஆத்திர மிகுதியால் அச்சமயம் அவன் மரியாதையை மறந்தான்; சின்னப் பழுவேட்டரையர் நல்ல வார்த்தைகளினால் அன்னையின் மனத்தை மாற்றும்படி சொல்லியிருந்ததை மறந்து வசைமாரி பொழிந்தான்.
“ஆம்; நீதான் என்ஜன்ம சத்துரு; வேறு யாரும் இல்லை. நீயும் ஒரு தாயா? நீயும் ஒரு ஸ்திரீயா? உலகத்தில் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளின் உரிமைக்காகப் படாதபாடு படுவார்கள். கதைகளிலும், காவியங்களிலும் கேட்டிருக்கிறேன், வாழ்க்கையிலும் பார்த்திருக்கிறேன். அன்னையின் இயல்புக்கே மாறான இயல்புடைய நீ மானிட ஸ்திரீதானா? அல்லது மனிதப்பெண் உருக்கொண்ட அரக்கியா? நான் உனக்கு என்ன துரோகம் செய்தேன்? நீ எதற்காக இந்தப் பெரும் துரோகத்தை எனக்குச் செய்கிறாய்? எல்லாவித நியாயங்களினாலும் எனக்குச் சேர வேண்டிய இராஜ்யத்தைப் பிடுங்கி இன்னொருவனுக்குக் கொடுப்பதில் உனக்கு என்ன சிரத்தை! என் தந்தையின் விருப்பம் என்று சொல்லுகிறாய். அவருக்கு நீ வாக்குக் கொடுத்ததாகச் சொல்லுகிறாய். அதற்கெல்லாம் அத்தாட்சி என்ன? நான் நம்பவில்லை. எனக்கு யாரோ துர்ப்போதனை செய்துவிட்டதாகச் சொல்கிறாய். இல்லவே இல்லை, உனக்குத்தான் யாரோ துர்ப்போதனை செய்து, உன் மனத்தைத்தான் கெடுத்து விட்டிருக்கிறார்கள். தாயை மகனுக்கு விரோதியாக்கியிருக்கிறார்கள். நியாயமாக எனக்கு உரிய சோழ சிங்காசனத்தை நான் ஒருநாளும் கை விடமாட்டேன். நீ சொன்னாலும் விடமாட்டேன். சிவபதம் அடைந்த என் தந்தையே திரும்பி வந்து சொன்னாலும் கேட்க மாட்டேன். இந்தச் சோழ சாம்ராஜ்யம் என்னுடையது; இந்தப் பழமையான சிங்காசனம் எனக்குரியது; கரிகால் பெருவளத்தான் அணிந்திருந்த மணிமகுடம் எனக்கு உரியது; அவற்றை நான் அடைந்தே தீருவேன். இதோ என் கழுத்தில் போட்டிருக்கும் ருத்திராட்சை மாலை நீ எனக்கு அளித்தது. தாய் என்ற மரியாதைக்காக இத்தனை நாளும் இதைத் தரித்திருந்தேன்; என்னைப் பேடியாக்கி, நாடு நகரமெல்லாம் நகைக்கும்படி செய்த இந்த ருத்திராட்ச மாலையை இதோ இந்தக் கணமே கழற்றி எறிகிறேன்; நீயே அதை வைத்துக்கொள்ளலாம்!”
இவ்விதம் பித்தம் பிடித்தவனைபோல் பிதற்றிவிட்டு மதுராந்தகன் தன் கழுத்திலிருந்த ருத்திராட்ச மாலையை அவசரமாகக் கழற்ற முயன்றான். கழற்ற முடியாமல் அதை அறுக்க முயன்றான்; ஆனால் கழுத்து நெறிந்ததே தவிர, மாலை அப்படியே இருந்தது.
மதுராந்தகன் அழகிய தோற்றமுடையவன். சுந்தரசோழரின் புதல்வர்களைக் காட்டிலும் அழகன் என்று சொல்லலாம். அவர்களிடம் இல்லாத பெண் தன்மையின், வசீகரமான சாயல் அவன் முகத்தில் பொலிந்தது. அத்தகைய களை பொருந்திய அவன் முகம் கோபத்தினாலும் ஆத்திரத்தினாலும் இப்போது விகாரமடைந்து காட்டியது. அதைக் காணச் சகியாமல் செம்பியன் மாதேவி கண்களை மூடிக்கொண்டாள்.
அவன் சத்தமிட்டு ஓய்ந்த பிறகு தன் கண்களைத் திறந்து பார்த்தாள். குரலின் சாந்தத்தில் சிறிதும் மாறுதல் இல்லாமல், “மகனே! சற்று அமைதியாயிரு. நான் வஞ்சக அரக்கியாகவே இருந்தாலும், என் வார்த்தைகளைச் சற்றுச் செவிசாய்த்துக் கேள்!” என்றாள்.
மதுராந்தகன் அந்தக் குரலைக் கேட்டுச் சிறிது அடங்கினான். “நன்றாய்க் கேட்கிறேன், கேட்கமாட்டேன் என்று மறுக்கவில்லையே!” என்றான்.
“தாயின் இயல்பைக் குறித்து நீ குறிப்பிட்டாய், பொல்லாத அரக்கியாயிருந்தாலும் தன் குழந்தைக்குத் துரோகம் செய்யமாட்டாள். துஷ்ட மிருகங்களும், தங்கள் குட்டிகளை மற்ற துஷ்ட மிருகங்களிடமிருந்து காப்பாற்ற முயலுகின்றன. அது போலவேதான் நானும் உன்னைக் காப்பாற்ற முயல்கிறேன். நீ இராஜ்யத்துக்கு ஆசைப்படவேண்டாம் என்று நான் சொல்லுவதற்கு, முன்னே கூறியதைத் தவிர வேறு காரணமும் இருக்கிறது. இராஜ்ய ஆசையினால் உன் உயிருக்கே ஆபத்து வரும். பெற்று வளர்த்த தாய் தன் மகன் உயிரோடிருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில் குற்றம் உண்டா? நீ இராஜ்யத்துக்கு ஆசைப்பட்டால், சுந்தர சோழரின் புதல்வர்களுக்கு எதிரியாவாய். ஆதித்த கரிகாலனும், அருள்மொழிவர்மனும் வீராதி வீரர்கள். நீயோ ஆயுதம் எடுத்து அறியாதவன். சோழ நாட்டுச் சைன்யம் முழுதும் சுந்தர சோழருடைய புதல்வர்களின் கட்சியிலேயே இருக்கும். படைத்தலைவர்களும் அவர்களுக்குச் சார்பாக இருப்பார்கள். அக்கம் பக்கத்து நாடுகளிலும் அவர்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். உனக்குத் துணைவர்கள் யார்? யாரை நம்பி நீ அவர்களுடன் போர் தொடங்குவாய்? மகனே! சில நாளாக வானத்தில் தூமகேது தோன்றியிருப்பதை நீ அறிவாய். வால் நட்சத்திரம் வானில் தோன்றினால் அரச குலத்தினர் உயிருக்கு அபாயம் என்பது உலகம் கண்ட உண்மை. அப்படி நேரும் விபத்து உனக்கு நேராமலிருக்க வேண்டுமே என்றுதான் நான் கவலைப்படுகிறேன். குழந்தாய்! என் ஏக புதல்வன் உயிரோடிருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவது தவறா? அது உனக்கு நான் இழைக்கும் துரோகமா?”
இவ்வார்த்தைகளினால் மதுராந்தகனுடைய ஆத்திரம் சிறிது தணிந்தது. அவன் உள்ளம் கனிவடைந்தது.
“அன்னையே! மன்னியுங்கள்! தங்களுடைய கவலை இதுதான் என்று முன்னமே சொல்லியிருக்கலாமே? ஒரு நொடியில் தங்கள் கவலையைத் தீர்த்திருப்பேனே! நான் அப்படியொன்றும் துணைவர்கள் இல்லாத அநாதையல்ல. சோழ சாம்ராஜ்யத்தில் மிகச் செல்வாக்கு வாய்ந்த சிற்றரசர்களும், பெருந்தரத்து அதிகாரிகளும் என் பக்கம் இருக்கிறார்கள். பழுவேட்டரையர்கள் என் கட்சியில் இருக்கிறார்கள். கடம்பூர்ச் சம்புவரையர் என் பக்கம் இருக்கிறார். தங்கள் சகோதரரும் என் மாமனுமான மழவரையரும் என் கட்சியில் இருக்கிறார். மற்றும் நீல தங்கரையாரும், இரட்டைக்குடை இராஜாளியாரும், குன்றத்தூர்ப் பெருங்கிழாரும் பூரண பலத்துடன் என்னை ஆதரிக்கிறார்கள். என்னை ஆதரித்து நிற்பதாகச் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்கள்….”
“மகனே! இவர்கள் செய்து கொடுக்கும் சத்தியத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. சுந்தர சோழச் சக்கரவர்த்திக்கும், அவருடைய சந்ததிகளுக்கும் உண்மையுடன் நடப்பதாக இவர்கள் ஒரு காலத்தில் சத்தியம் செய்து கொடுத்தார்கள். அவர்கள் உனக்கு உண்மையாக நடப்பார்கள் என்றே வைத்துக்கொள்ளலாம். இவர்களிடம் உள்ள சைன்யம் வெகு சொற்பம் என்பது உனக்குத் தெரியாதா? வடக்கேயுள்ள சைன்யம் ஆதித்த கரிகாலனுடைய தலைமையில் இருக்கிறது. தென்திசைச் சேனையோ கொடும்பாளூர் வேளாரின் தலைமையில் இருக்கிறது….”
“தாயே! என் கட்சியை ஆதரிக்கும் சிற்றரசர்கள் எந்த நேரத்திலும் தலைக்குப் பதினாயிரம் வீரர்களைச் சேர்த்துக் கொண்டு வரக்கூடியவர்கள்.”
“சைன்யம் ஒரு பக்கம் இருக்கட்டும். மக்களைப் பற்றி என்ன? சோழநாட்டு மக்கள் சுந்தர சோழரின் புதல்வர்களிடம் எவ்வளவு அபிமானம் கொண்டவர்கள் என்பது உனக்குத் தெரியாதா! இன்றைக்கு நீயே பார்த்தாய். இந்தப் பழையாறை நகருக்கு இன்று அருள்மொழிவர்மனோ, ஆதித்த கரிகாலனோ வந்திருந்தால் மக்கள் எப்படித் திரண்டு கூடி வரவேற்றிருப்பார்கள்? இந்த ஊர் மக்கள் ஒரு காலத்தில் உன்னிடமும் அன்புடனே தான் இருந்தார்கள். பழுவேட்டரையர்களுடன் நீ உறவு பூண்டதிலிருந்து உன்னை மக்கள் வெறுக்கவே தொடங்கி விட்டார்கள்….”
“தாயே! மக்களின் அபிமானத்தைப் பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. மக்களின் அபிமானம் என்னத்துக்கு ஆகும்? மக்கள் ஆளப்படவேண்டியவர்கள், சிம்மாசனத்தில் யார் வீற்றிருந்து அரசு செலுத்துகிறார்களோ, அவர்களிடம் மக்கள் பக்தி செலுத்த வேண்டியவர்கள்!”
“மகனே! உனக்குப் போதனை செய்திருப்பவர்கள் அரசியல் நீதியின் ஆரம்பத் தத்துவத்தைக்கூட உனக்கு உணர்த்தவில்லை. மக்களின் அபிமானம் இல்லாமல் எந்த அரசனும் நீடித்து அரசு செலுத்த முடியாது. அப்படி அரசு புரிவதில் புண்ணியமும் இல்லை!…”
இவ்வாறு அந்தப் பெருமூதாட்டி சொல்லிக் கொண்டிருந்தபோது, அரண்மனை வாசலில் ஒரு பெரும் ஆரவாரம் கேட்டது. ஓலக்குரலும், சாபக்குரலும், கோபக் குரலும், கேள்விக் குரலும் ஆயிரக்கணக்கான மனித கண்டங்களிலிருந்து எழுந்து, பெருங்காற்று அடிக்கும்போது சமுத்திரத்தில் உண்டாகும் பயங்கரப் பேரொலியாகக் கேட்டது.
“மகனே! சோழ சாம்ராஜ்யத்துக்கு ஏதோ பெரும் விபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதன் முதல் அறிகுறிதான் இது. நான் அரண்மனைக்கு வெளியே சென்று, என்ன விஷயம் என்றும் தெரிந்து வருகிறேன். அதுவரையில் நீ இங்கேயே இரு!” என்றாள் அன்னை.