அத்தியாயம் 40 - ஆனைமங்கலம்

நம் கதாநாயகிகளில் ஒருத்தியான வானதி அடிக்கடி நினைவு இழக்கும் வழக்கம் வைத்துக் கொண்டிருக்கிறாள் அல்லவா? இந்த ஒரு தடவை மட்டும் நேயர்கள் அதைப் பொறுக்கும்படி வேண்டுகிறோம். ஏனெனில், அவளுடைய நோய் நீங்கும் காலம் நெருங்கி விட்டது.

வானதிக்கு நினைவு சிறிது வந்தபோது முதலில் அவள் ஊசலாடுவது போலத் தோன்றியது. பின்னர் அவள் தான் வானவெளியில் பிரயாணம் செய்து கொண்டிருப்பதாக எண்ணினாள். “ரிம் ரிம்”, “ஜிம் ஜிம்” என்று மழைத்தூறலின் சத்தம் கேட்டது. குளிர்ந்த காற்று “குப் குப்” என்று உடம்பின்மீது வீசிற்று. அதனால் தேகம் சிலிர்த்தது. சரி சரி, மேக மண்டலங்களின் வழியாக வானுலகிற்குப் போய்க்கொண்டிருக்கிறோம் என்று எண்ணினாள். சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது, இடையிடையே மின்னல் வெளிச்சம் பளிச்சிட்டு மறைந்தது.

முதன் மந்திரி கடைசியாகக் கஜேந்திர மோட்சத்தைப் பற்றிக் கூறியதும், யானை அதன் துதிக்கையினால் தன்னைச் சுற்றி வளைத்துத் தூக்கியதும் இலேசாக நினைவு வந்தன. முதன் மந்திரி அநிருத்தர் கூறியபடியே நடந்து விட்டது. ‘மண்ணுலகில் என் ஆயுள் முடிந்து இப்போது மோட்சத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். மோட்ச உலகில் தேவர்களையும், தேவிகளையும் பார்ப்பேன்.’

‘ஆனால் எல்லாத் தேவர்களிலும் என் மனத்துக்குகந்த தெய்வமாகிய அவரை அங்கே நான் பார்க்க முடியாது. மனத்துக்கு இன்பமில்லாத அத்தகைய மோட்ச உலகத்துக்குப் போவதில் என்ன பயன்?’

அடடே! இது என்ன ஊசலாட்டம்! உடம்பை இப்படித் தூக்கித் தூக்கிப் போடுகிறதே! ஆனால் தலைவைத்திருக்கும் இடம் மெத்தென்று சுகமாயிருக்கிறது. தாயின் மடியைப் போல் இருக்கிறது. ஏன்! தாயைக் காட்டிலும் என்னிடம் பிரியம் வாய்ந்த இளைய பிராட்டியின் மடியைப் போலவும் இருக்கிறது!… ஆ! குந்தவைதேவி இப்போது பழையாறையில் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ? என்னைப் பற்றி செய்தி அவருக்கு இதற்குள் எட்டியிருக்குமோ?

‘மோட்ச உலகத்துக்கு வானவெளியில் மேக மண்டலங்களின் வழியாகப் பிரயாணம் செய்வது சரிதான். ஆனால் என்ன வாகனத்தில் பிரயாணம் செய்கிறேன்? சொர்க்கலோகத்துப் புஷ்பக விமானமா இது? அல்லது தேவேந்திரனுடைய ஐராவதம் என்ற யானையா? அப்பா! யானை என்றாலே சிறிது பயமாகத்தானிருக்கிறது! யானையும் அதன் துவண்டு, வளையும் துதிக்கையும்! – அப்படித் துவளும் துதிக்கையில் தான் எவ்வளவு பலம் அதற்கு?- போனது போயிற்று! இனி அதைப் பற்றிப் பயம் என்ன? கவலை என்ன?’

‘ஆனால் தலை வைத்திருக்கும் இடம் அவ்வளவு பட்டுப்போல் மிருதுவாயிருக்கும் காரணம் யாது? சுற்றிலும் இருளாயிருப்பதால் ஒன்றும் தெரியவில்லை. கையினால் துளாவிப் பார்க்கலாம். உண்மையில், பட்டுத் திரைச் சீலை மாதிரிதான் தோன்றுகிறது. கொஞ்சம் ஈரமாயும் இருக்கிறது.’

‘ஆகா! இது என்ன? என் கன்னங்களை யார் தொடுகிறது? மல்லிகைப் பூவைப் போன்ற மிருதுவான கரம் அல்லவா தொடுகிறது?’

“வானதி! வானதி!”

“அக்கா! நீங்கள் தானா?”

“நான்தான். வேறு யார்?”

“நீங்கள் கூட என்னுடன் மோட்ச உலகத்துக்கு வருகிறீர்களா?”

“மோட்ச உலகத்துக்குப் போக அதற்குள் உனக்கு என்னடி அவசரம்? இந்த உலகம் அதற்குள்ளே வெறுத்துப் போய் விட்டதா?”

“பின்னே, நாம் எங்கே போகிறோம்?”

“என்னடி அதுகூட மறந்து போய்விட்டதா? ஆனை மங்கலத்துக்குப் போகிறோம் என்று தெரியாதா?”

“என்ன ஊர்? இன்னொருதடவை சொல்லுங்கள்!”

“சரியாய்ப் போச்சு! ஆனைமங்கலத்துக்குப் போகிறோம்! ஆனையின் முதுகில் ஏறிக்கொண்டு போகிறோம்!”

“ஐயோ! யானையா?”

“அடி பைத்தியமே! உன் உடம்பு ஏனடி நடுங்குகிறது! யானை என்ற பெயரைக் கேட்டாலே பயப்படத் தொடங்கிவிட்டாயா?”

“அக்கா! சற்று முன்தூங்கிப் போய்விட்டேனா?”

“ஆமாம், ஆமாம்! யானையின் மேல் அம்பாரியில் பிரயாணம் செய்கிற சொகுசில் ஆனந்தமாய்த் தூங்கி விட்டாய்!”

“ஆனந்தம் ஒன்றுமில்லை, அக்கா! பயங்கரமான கனவுகள் கண்டேன்!”

“அப்படித்தான் தோன்றியது! ஏதேதோ பிதற்றினாய்!”

“என்ன அக்கா பிதற்றினேன்!”

“காலாமுகர் என்றாய்! பலி என்றாய்! கஜேந்திர மோட்சம் என்றாய்! யானைத் துதிக்கை என்றாய்! அப்புறம் முதன் மந்திரி அநிருத்தரைப் “பாவி, பழிகாரன்” என்று திட்டினாய். அந்தப் பிரம்மராயருக்கு நன்றாய் வேண்டும்! நீ தூக்கத்தில் அவரைப் பற்றித் திட்டியதையெல்லாம் அவர் கேட்டிருந்தால், பல நாள் தூங்கவே மாட்டார்!”

“அதெல்லாம் நடந்தது நிஜமாகக் கனவுதானா, அக்கா!”

“நிஜமாகக் கனவா? பொய்யாகக் கனவா? எனக்கு என்ன தெரியும்? நீ என்ன சொப்பனம் கண்டாய் என்பதே எனக்குத் தெரியாது.”

“காலாமுகர்கள் என்னைப் பிடித்துக்கொண்டு போனார்கள். முதன் மந்திரி என்னிடம் இளவரசரைப்பற்றி இரகசியத்தைக் கேட்டார். நான் சொல்ல மறுத்துவிட்டேன். உடனே யானையை அழைத்து என்னைத் தூக்கி எறிந்து கொல்லும்படி கட்டளையிட்டார். அப்போது நான் கொஞ்சங் கூடக் கலங்காமல் தைரியமாக இருந்தேன். அக்கா! அப்போது உங்கள் ஞாபகமும் வந்தது. நீங்கள் அங்கே இல்லையே, என்னுடைய தைரியத்தைப் பார்ப்பதற்கு என்று.”

“போகட்டும்; சொப்பனத்திலாவது அவ்வளவு தைரியமாக நடந்து கொண்டாயே? அதன் பொருட்டுச் சந்தோஷம்!”

வானதி சற்றுச் சும்மா இருந்துவிட்டு, “என்னால் நம்பமுடியவில்லை!” என்றாள்.

“உன்னால் என்னத்தை நம்ப முடியவில்லையடி?”

“நான் கண்டதெல்லாம் கனவு என்று நம்பமுடியவில்லை.”

“சில சமயம் சொப்பனங்கள் அப்படித்தான் இருக்கும். நிஜமாக நடந்தது போலவே தோன்றும். நான்கூட அப்படிப்பட்ட சொப்பனங்கள் பலமுறை கண்டிருக்கிறேன்.”

“அப்படி என்ன சொப்பனம் கண்டிருக்கிறீர்கள்? சொல்லுங்களேன்?”

“ஏன்? என் தம்பிகூடத்தான் அடிக்கடி என் கனவில் வருகிறான். இலங்கைக்கு அவன் போய் எத்தனை மாதம் ஆயிற்று? ஆனால் இரவில் கண்ணை மூடினால் அவன் தத்ரூபமாக என் முன்னால் வந்து நிற்கிறான்…”

“நீங்கள் அதிர்ஷ்டசாலி, அக்கா!”

“என் அதிர்ஷ்டத்தை நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். அவன் கடலில் குதித்த செய்தி வந்ததிலிருந்து என் மனம் எப்படித் துடித்துக் கொண்டிருக்கிறது என்று உனக்குத் தெரியாது.”

“அப்படியானால் அதுவும் ஒரு பயங்கர சொப்பனம் அல்லவா? அவர் கடலில் முழுகியது மட்டும் நிஜமான செய்திதானா!”

“அதுவும் ஒரு துர்ச் சொப்பனமாயிருந்தால் எவ்வளவோ நன்றாயிருக்குமே? அது மட்டும் நிஜந்தானடி வானதி! இளவரசன் கடலில் குதித்ததை நேரில் பார்த்தவர் வந்து சொன்னாரே! அதை நம்பாமல் என்ன செய்வது?”

“வாணர்குல வீரரைத்தானே சொல்கிறீர்கள்? அவரே இளவரசரைப்பற்றி வேறு ஏதோ சொல்லவில்லையா? ஓடக்காரப் பெண்ணைப் பற்றியும் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தைப் பற்றியும் ஏதோ சொல்லவில்லையா?”

“இதெல்லாம் உன் சொப்பனமாயிருக்க வேண்டும். ஆம், ஓடக்காரி பூங்குழலியைப் பற்றியும், நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தைப் பற்றியும் நீ தூக்கத்தில் பிதற்றினாய்! புத்த பிக்ஷுணி ஆகப் போவதாகக் கூட உளறினாய்! அதற்குள் உனக்கு என்னடி இந்த உலக வாழ்க்கையின் மீது அவ்வளவு வெறுப்பு? எதற்காக நீ புத்த பிக்ஷுணி ஆகவேண்டும்?”

“அக்கா! என் மனது உங்களுக்குத் தெரியாதா? அவரைக் கடல் கொண்டுவிட்டது என்று கேட்ட பிறகு, எனக்கு இந்த உலகில் என்ன வாழ்வு வைத்திருக்கிறது! சொப்பனத்தில் கண்டபடியே யானை என்னைத் துதிக்கையால் தூக்கி எறிந்து கொன்றிருக்கக்கூடாதா என்று தோன்றுகிறது!”

“அடி பாவி! நீயும் போய் விட்டால் என் கதி என்னடி ஆகிறது?”

“உங்கள் விஷயம் வேறு, அக்கா! நீங்கள்…”

“ஆமாம், ஆமாம்! அருள்மொழியிடம் என்னைக் காட்டிலும் உனக்கு அதிக ஆசை! இல்லையா?”

“அக்கா! அப்படி ஒன்றும் நான் சொல்லவில்லை. தங்களைப் போல் நான் மனோதைரியம் உள்ளவள் அல்ல. அவர் இறந்து விட்ட பிறகு….”

“சீச்சீ! என்ன வார்த்தை சொல்லுகிறாய்? அவன் இறந்தான் என்று ஏன் சொல்ல வேண்டும்? உனக்கு நிச்சயமாய்த் தெரியுமா? பழுவேட்டரையர்களும், பழுவூர் ராணியும், பேதை மதுராந்தகனும் அப்படிச் சொல்லிக் கொம்மாளம் அடிப்பார்கள். நீயும், நானும், அப்படி ஏன் சொல்ல வேண்டும்? அல்லது ஏன் நினைக்கத்தான் வேண்டும்?”

“பின்னே, என்ன சொல்கிறீர்கள்? அவர் சுழிக் காற்றில் கடலிலே குதித்தபிறகு… வேறு என்ன ஆகியிருக்க முடியும்? பிழைத்திருந்தால் இத்தனை நாள் வந்திருக்க மாட்டாரா?”

“அடி பைத்தியமே! கடலில் குதித்தால், அவனைக் கடல் கொண்டு விட்டது என்று அர்த்தமா?”

“கரை ஏறியிருந்தால் இத்தனை நாள் தெரியாமலா இருக்கும்?”

“என் தகப்பனாரின் கதை உனக்கு தெரியுமா? அவர் இளம்பிராயத்தில் பல மாத காலம் இருக்குமிடமே தெரியாமலிருந்தது. தேடிப்பிடித்துக் கொண்டு வந்து இளவரசுப் பட்டம் கட்டினார்கள். என் பாட்டனார் அரிஞ்சய சோழர் தக்கோலம் யுத்தத்திற்குப் பிறகு அடியோடு மறைந்து விட்டார். பல வருஷங்களுக்குப் பிறகுதான் அவர் இருக்குமிடம் தெரிந்தது. நான் சொல்லுகிறேன் கேள், வானதி! காவேரித்தாய் ஒரு சமயம் என் தம்பியைக் காப்பாற்றிக் கரை சேர்த்தாள். அது மாதிரியே சமுத்திர ராஜனும் பொன்னியின் செல்வனைக் கரை சேர்த்திருப்பார். நமது கடற்கரைக்கும் இலங்கைத் தீவுக்கும் மத்தியில் எத்தனையோ சிறிய சிறிய தீவுகள் இருக்கின்றன. அத்தீவுகளில் ஒன்றில் அருள்மொழி ஒதுங்கியிருக்கக் கூடும் அல்லவா? அவனைத் தேடும் வேலையை நன்றாகச் செய்யும்படி தூண்டுவதற்காகவே நான் இந்தப் பிரயாணம் புறப்பட்டேன், உன்னையும் அழைத்துக்கொண்டு, உனக்கு இதெல்லாம் ஞாபகமே இல்லை போலிருக்கிறது. உன் பேரில் தப்பு இல்லை. இளவரசரைப் பற்றிய செய்தி வந்ததிலிருந்து உன் புத்தியே பேதலித்து விட்டது. இப்போதுதான் கொஞ்சம் தெளிவாகப் பேச ஆரம்பித்திருக்கிறாய்!”

வானதி சிறிது நேரம் மௌனமாயிருந்துவிட்டு, “அக்கா! நாம் எந்த ஊருக்குப் போகிறோம் என்று சொன்னீர்கள்?” என்றாள்.

“ஆனைமங்கலத்துக்கு”

“அது எங்கே இருக்கிறது?”

“நாகைப்பட்டினத்துக்கு அருகில் கடற்கரை ஓரத்தில் இருக்கிறது. நீ ஏதோ சொப்பனம் கண்டு உளறினாயே, அந்தச் சூடாமணி விஹாரத்துக்கும் ஆனைமங்கலத்துக்கும் கொஞ்ச தூரந்தான். நீ புத்த பிக்ஷுணியாவதாயிருந்தால் கூட, அதற்கும் சௌகரியமாகவேயிருக்கும். ஆனால் நீ மணிமேகலையாவதற்கு அவசரப்பட வேண்டாம். பொன்னியின் செல்வனைப் பற்றித் திடமான செய்தி கிடைத்த பிறகு முடிவு செய்து கொள்ளலாம்!” என்று குந்தவை கூறி விட்டு இலேசாகச் சிரித்தாள்.

“அக்கா! இது என்ன நீங்கள் சிரிக்கிறீர்கள்! சிரிப்பதற்கு எப்படி உங்களுக்கு மனம் வருகிறது? இளவரசர் பிழைத்திருப்பார் என்று உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கிறதா?”

“நம்பிக்கை இல்லாவிட்டால், நான் இப்படி இருப்பேனா வானதி! நான் பார்த்து வைத்திருக்கும் ஜோசியங்கள் எல்லாம் பொய்யாகப் போவதில்லை. என் தம்பியின் கையில் உள்ள சங்கு சக்கர ரேகைகளும் பொய்யாகப் போவதில்லை. இது வரையில் எல்லாம் சரியாகத்தான் நடந்து வருகிறது.”

“என்ன சரியாக நடந்து வருகிறது? எனக்கு ஒன்றும் தெரியவில்லையே?” என்றாள் வானதி.

“உனக்கு ஏன் தெரியப் போகிறது? நீ தான் சித்தப் பிரமை பிடித்து அலைகிறாயே? அருள்மொழிக்கு இளம் வயதில் பல கண்டங்கள் நேரும் என்று சொன்னார்கள். அதன்படி நேர்ந்து வந்திருக்கின்றன. பின்னே மற்றவையும் நடந்து தானே ஆக வேண்டும்?”

“மற்றவை என்றால்?”

“எத்தனையோ தடவை நான் சொல்லியாகிவிட்டது. நீயும் கேட்டிருக்கிறாய், மறுபடி எதற்காகச் சொல்லச் சொல்லுகிறாய்? பேசாமல் தூங்கு! பொழுது விடிந்து பார்த்துக் கொள்ளலாம்.”

வானதி மீண்டும் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்து விட்டு, “இராத்திரியெல்லாம் யானை மீது பிரயாணம் செய்யப் போகிறோமா அக்கா! எதற்காக?” என்று கேட்டாள்.

“அதுகூடவா உனக்கு ஞாபகம் இல்லை? பகலில் நாம் பிரயாணம் செய்தால் வழியில் உள்ள ஊர்களிலெல்லாம் ஜனங்கள் நம்மைச் சூழ்ந்து கொள்வார்கள். “பொன்னியின் செல்வன் எங்கே?” “சோழ நாட்டின் தவப்புதல்வன் எங்கே?” என்று கேட்பார்கள். பழுவேட்டரையர் மீது குற்றம் சுமத்துவார்கள். பழுவூர் இளைய ராணியைச் சபிப்பார்கள். சக்கரவர்த்தியைக் கூட நிந்தித்தாலும் நிந்திப்பார்கள். அதையெல்லாம் நாம் எதற்காகக் காதினால் கேட்க வேண்டும்? நான்தான் ஜனங்களை அப்படியெல்லாம் தூண்டி விட்டதாகப் பழுவேட்டரையர்கள் சொன்னாலும் சொல்லுவார்கள்! எதற்காக இந்த வம்பு என்றுதான் இராத்திரியில் புறப்பட்டேன். இதையெல்லாம் பழையாறையிலிருந்து புறப்படும்போதே உனக்குச் சொன்னேன்; மறுபடியும் கேட்கிறாய். நல்ல சித்தப்பிரமை பிடித்து உன்னை ஆட்டுகிறது! சூடாமணி விஹாரத்துப் புத்த பிக்ஷுக்களிடம் சொல்லித்தான் உன் சித்தப்பிரமையைப் போக்க வழி தேட வேண்டும்! போனால் போகட்டும்; நீ இப்போது தூங்கு! எனக்கும் தூக்கம் வருகிறது இந்த ஆடும் குன்றின் மீது உட்கார்ந்தபடியேதான் இன்று இரவு நாம் தூங்கியாக வேண்டும்” என்றாள் இளையபிராட்டி.

வானதி இனி ஒன்றும் பேசக்கூடாது என்று தீர்மானித்து மௌனமானாள். அவளுடைய உள்ளம் ஒரே குழப்பமாயிருந்தது. அன்று நடந்ததையெல்லாம் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்துக் கொண்டாள். எல்லாம் உண்மையாக நிகழ்ந்த சம்பவங்களாகவே தோன்றின. ‘எனக்குச் சித்தப் பிரமை ஒன்றுமில்லை; அக்காதான் என்னைப் பைத்தியமாக அடிக்கப் பார்க்கிறாள்’ என்று சில சமயம் எண்ணினாள். யானை தன்னைத் துதிக்கையினால் சுற்றித் தூக்கிய பிறகு என்ன நடந்தது என்பதை எண்ணி எண்ணிப் பார்த்தாள். ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. என்னதான் நடந்திருக்கும்? தன் உயிருக்கே ஆபத்தான அந்த வேளைக்கு அக்கா சரியாக அங்கே வந்து தன்னைக் காப்பாற்றியிருக்க வேண்டும். அக்காவைப் பார்த்ததும், முதன் மந்திரி நடுநடுங்கிப் போயிருக்க வேண்டும். ஆயினும் யானைத் துதிக்கையின் பிடியிலிருந்து காப்பாற்றுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமா?… ஒரு வேளை இவ்வாறு இருக்குமோ?..தன்னைத் துதிக்கையால் கட்டித்தூக்கிய யானைதானா இது? மேலே அம்பாரி இருந்தது. அந்த இருட்டிலும் சிறிது தெரிந்தது. இளையபிராட்டி அந்த அம்பாரியிலேயே இருந்திருக்கலாம். யானை துதிக்கையினால் தூக்கித் தன்னைத் தூர எறிவதற்குப் பதிலாக மேலே அம்பாரியில் விட்டிருக்கக் கூடும். அந்த மாதிரி செய்ய யானைகள் பழக்கப்பட்டிருப்பதை வானதி பலமுறை பார்த்ததுண்டு. முதன் மந்திரியும், இளையபிராட்டியும் சேர்ந்து இம்மாதிரி சூழ்ச்சி செய்திருக்கிறார்களோ? எதற்காக? நான் தனியாகப் பிரயாணம் செய்வதைத் தடுக்கும் பொருட்டுத்தான். என்னுடைய தைரியத்தைச் சோதிப்பதற்காகவும் இளைய பிராட்டி இம்மாதிரி செய்திருக்கலாம். பொம்மை முதலையை என் அருகிலே விட்டு ஒரு சமயம் சோதனை செய்யவில்லையா?.. எப்படியாவது இருக்கட்டும்; நான் இன்று தனி வழியே புறப்பட்டது பெருந்தவறு. இப்போது அக்காவின் மடியில் தலையை வைத்துப் படுத்திருப்பது எவ்வளவு நிம்மதியாயிருக்கிறது. அக்காவின் வார்த்தைகள் எவ்வளவு தைரியமும் உற்சாகமும் அளிக்கின்றன! பொன்னியின் செல்வன் எங்கேயோ பத்திரமாகயிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை இந்தப் பிரயாணத்தின் முடிவில் அவரைச் சந்திப்போமா?.. இவ்வாறு எண்ணியபோது வானதியின் உள்ளத்தில் அளவில்லாத கிளர்ச்சி ஏற்பட்டது. மனச்சோர்வுக்கு நேர்மாறான உற்சாக இயல்பு இப்போது அவளை ஆட்கொண்டது.

யானை கம்பீரமாக நடந்து சென்று கொண்டிருந்தது. யானைமேல் அம்பாரி ஆடி அசைந்து கொண்டிருந்தது. முன்னும் பின்னும் காவற்படைகள் போய்க்கொண்டிருந்தன. மழை சிறு தூறலாயிற்று, பிறகு தூறலும் நின்றது. வானத்தில் மேகக் கூட்டங்கள் சிதறிக் கலைந்தன. நட்சத்திரங்கள் எட்டிப் பார்த்தன.

வானதி யானையின் அம்பாரிக் கூரை வழியாக மேலே வானத்தில் தெரிந்த நட்சத்திரங்களைப் பார்த்தாள். வானவெளியில் சஞ்சரிக்கும் நட்சத்திரங்களுக்கும், பூலோகத்தில் வாழும் மனிதர்களின் வாழ்க்கைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்க முடியுமா என்று அதிசயப்பட்டாள். பொன்னியின் செல்வர் உதித்த நட்சத்திரத்துக்கும், தான் பிறந்த நட்சத்திரத்துக்கும் உள்ள பொருத்தத்தை பற்றி ஜோதிடர்கள் சொல்வதில் ஏதேனும் உண்மையிருக்குமா? தன் வயிற்றில் பிறக்கும் மகன் மூன்று உலகத்தையும் ஆளப் போகிறான் என்று ஜோதிடர்களுடன் சேர்ந்து அக்காவும் சொல்வது உண்மையாகுமா? வால் நட்சத்திரம் தோன்றுவது ஏதோ உற்பாதத்துக்கு அறிகுறி என்று ஜனங்கள் பேசிக் கொள்கிறார்களே, அது எவ்வளவு தூரம் நிஜமாயிருக்கும்?

அப்படி என்ன உற்பாதம் நடக்கும்? பொன்னியின் செல்வர் கடலில் முழுகியதுதான் அந்த உற்பாதமா? அக்கா கொண்டுள்ள நம்பிக்கையின்படி அவர் திரும்பி வருவாரா? அப்படியானால், வேறு என்ன உற்பாதம் நடக்கக் கூடும்!…

இம்மாதிரியெல்லாம் வெகு நேரம் சிந்தனை செய்து கொண்டிருந்த பிறகு வானதி இலேசாகக் கண்ணயர்ந்தாள். அவள் கண்விழித்துப் பார்த்தபோது, பொழுது புலர்ந்திருந்தது. புள்ளினங்கள் உதய கீதம் பாடின. இளைய பிராட்டியும் விழித்துக் கொண்டிருந்தாள். அம்பாரியின் பட்டுத் திரையை விலக்கிகொண்டு வெளியே பார்த்து, “இதோ ஆனைமங்கலம் வந்து விட்டோ ம். சோழ மாளிகையின் வாசலுக்கே வந்து விட்டோ ம்” என்றாள்.

இரு இளவரசிகளும் யானை மீதிருந்து இறங்கினார்கள். மாளிகைக்குள்ளே பிரவேசித்தார்கள். அங்கே ஆயத்தமாயிருந்த அரண்மனைத் தாதிமார்கள் இளவரசிகள் இருவரையும் மாளிகையின் எல்லாப் பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று காட்டினார்கள். கடைசியில், மாளிகையின் கீழ்ப்புறத்துக்கு வந்து, அங்கிருந்த அலங்கார முன்றின் முகப்பில் நின்றபடி கடலுடன் கலந்த கால்வாயைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

“அக்கா! இளவரசரைத் தேடுவதற்கு ஏற்பாடு செய்யப் போவதாகச் சொன்னீர்களே? என்ன செய்திருக்கிறீர்கள்?” என்றாள் கொடும்பாளூர் இளவரசி.

“ஆமாடி வானதி! தேடுவதற்கு ஏற்பாடு ஆரம்பமாகி விட்டது. அதோபார், ஒரு படகு வருகிறது! அதில் வருகிறவர்கள் ஒருவேளை ஏதேனும் செய்தி கொண்டு வந்தாலும் கொண்டு வருவார்கள்!” என்றாள் குந்தவை.

வானதி திரும்பிப் பார்த்தாள். சற்றுத் தூரத்தில் மரக்கிளைகளின் இடைவெளியில் ஒரு சிறிய படகு வருவது தெரிந்தது. அதில் இருவர் இருந்தார்கள்.

“அக்கா! அந்தப் படகில் வருவது யார்?” என்று வானதி கேட்டாள்.

“படகு தள்ளுகிறவன் சேந்தன் அமுதன். தஞ்சாவூர்ப் பாதாளச் சிறையிலிருந்து நாம் அன்றொரு நாள் விடுதலை செய்தோமே, அவன். உட்கார்ந்திருப்பவள் பூங்குழலி!”

வானதிக்கு உடம்பு சிலிர்த்தது. “அக்கா! நான் அந்தப் பெண்ணைப் பார்க்க விரும்பவில்லை, உள்ளே போகிறேன்!” என்றாள்.

“என்னடி அவளைக் கண்டு அவ்வளவு பயம்! உன்னை அவள் விழுங்கி விடுவாளா, என்ன? நான் பார்த்துக் கொள்கிறேன். நீ பயப்படாமல் சும்மா இரு!” என்றாள் குந்தவை. படகு நெருங்கி வந்து கொண்டிருந்தது.

யானைத் துதிக்கையில் அகப்பட்ட வானதி எப்படி உயிர் பிழைத்தாள்? இதைக் குறித்து, அவள் இரண்டாவதாகச் செய்த ஊகந்தான் சரியானது. யானை துதிக்கையைச் சுழற்றி அவளைத் தூர எறியவில்லை. மேலே தூக்கி அம்பாரியின் அருகில் இலேசாக வைத்தது. அங்கே திரை மறைவில் ஆயத்தமாயிருந்த குந்தவை அவளை வாரி அணைத்து மடியில் போட்டுக் கொண்டாள்.

பிறகு முதன் மந்திரியும் பல்லக்கில் ஏறினார். “தேவி போய் வரட்டுமா? உன் பிரயாணம் இனிதாயிருக்கட்டும். அதன் முடிவும் இனிதாயிருக்கட்டும்!” என்று சொன்னார்.

“ஐயா! தங்கள் உதவிக்கு மிக்க நன்றி!” என்றாள் இளைய பிராட்டி.

“கொடும்பாளூர்ச் கோமகளைக் கோழை என்றாயே? அவளைப்போல் நெஞ்சழுத்தக்காரப் பெண்ணை நான் பார்த்ததேயில்லை.”

“முன்னேயெல்லாம் அவள் கோழையாகத் தானிருந்தாள். கொஞ்ச நாளாகத்தான் அவளுக்கு இவ்வளவு தைரியம் வந்திருக்கிறது” என்றாள் குந்தவை.

“எல்லாம் உன்னுடைய பயிற்சிதான். அந்தப் பெண் என்னைப் பயங்கர ராட்சதன் என்று எண்ணியிருப்பாள்; போனால் போகட்டும். என்னைப் பற்றி எவ்வளவோ பேர் எத்தனையோ விதமாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். நான் அதற்காகவெல்லாம் கவலைப்படுவதில்லை போய் வாருங்கள், அம்மா!”

இவ்விதம் முதன் மந்திரி கூறியதும், அவருடைய பல்லக்கும் நாலு வீரர்களும் மட்டும் மேற்குத் திசையில் செல்ல, யானை, குதிரை பரிவாரங்கள் எல்லாம் கிழக்கு நோக்கிச் சென்றன.

முதன் மந்திரி பல்லக்குப் புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் மழை பிடித்துக் கொண்டது. மழையைப் பொருட்படுத்தாமல் சிவிகை தூக்கிய ஆட்களும், சிவிகையைக் காத்த வீரர்களும் சென்று கொண்டிருந்தார்கள். மழை குறைந்து தூறல் நிற்கும் சமயத்தில் திடீரென்று பல்லக்கு நின்றது.

“ஏன் நிற்கிறீர்கள்?” என்று முதன் மந்திரி கேட்டார்.

“சுவாமி, அந்த மரத்தடியில் யாரோ கிடப்பது போலத் தெரிந்தது!” என்றான் முன்னால் சென்ற காவலர்களில் ஒருவன்.

முதன் மந்திரி அவன் சுட்டிக்காட்டிய திசையை உற்றுப் பார்த்தார். பளிச்சென்று ஒரு மின்னல் மின்னியது.

“ஆமாம், யாரோ கிடக்கிறதாகத்தான் தெரிகிறது, இறங்கிப் பார்க்கிறேன்” என்றான் முதன் மந்திரி.

சிவிகையிலிருந்து இறங்கி அருகில் சென்றபோது மரத்தடியில் கிடந்த மனிதன் முனகும் சத்தம் கேட்டது.

“யார் இங்கே!” என்றார் அநிருத்தர்.

அதற்குப்பதிலாக, “முதன் மந்திரி போலிருக்கிறதே!” என்ற தீனமான குரல் கேட்டது.

“ஆம்;” கேட்டது முதன் மந்திரிதான்!

“இங்கே கிடப்பது யார்?”

“ஐயா! தெரியவில்லையா? நான்தான் மதுராந்தகன்!”

“இளவரசே! இது என்ன கோலம்? இங்கே எப்படி வந்தீர்கள்? என்ன நேர்ந்தது?” என்று பரபரப்புடன் கேட்டுக் கொண்டே முதன் மந்திரி மதுராந்தகரைத் தூக்கி நிறுத்த முயன்றார்.

results matching ""

    No results matching ""