அத்தியாயம் 43 - "புலி எங்கே?"
ஆதித்த கரிகாலர் எப்பேர்ப்பட்ட ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டார் என்பதை வந்தியத்தேவன் கவனித்தான். கண்மூடித் திறக்கும் நேரத்தில் குதிரையைச் செலுத்திக் கொண்டு வந்து பன்றியின் மீது தன் கையிலிருந்த வேலைச் செலுத்தினான். வேல் பன்றியின் முதுகுத் தோலின் மீது மேலாகக் குத்தியது. பன்றி உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிக் கொண்டு திரும்பியது. அந்த வேகத்தில் வந்தியத்தேவன் கையில் பிடித்திருந்த வேலின் பிடி நழுவிவிட்டது. பன்றியின் முதுகில் இலேசாகச் சென்றிருந்த வேல் நழுவிக் கீழே விழுந்தது.
பன்றி இப்போது வந்தியத்தேவன் பக்கம் திரும்பி ஓடி வந்தது. அவன் தன் அபாயகரமான நிலையை உணர்ந்தான். பன்றியின் தாக்குதலுக்கு அவனுடைய குதிரையினால் ஈடு கொடுக்க முடியாது. கையில் வேலும் இல்லை. இளவரசரோ இன்னமும் குதிரையின் கீழிருந்து வெளிப்படுவதற்கு முயன்று கொண்டிருக்கிறார். தான் குதிரை மேலிருந்தபடி ஏதாவது ஒரு மரத்தின் மேல் தாவி ஏறிக் கொண்டால்தான் தப்பிப் பிழைக்கலாம். சீச்சீ! எத்தனையோ அபாயங்களுக்குத் தப்பி வந்து கடைசியில் கேவலம் ஒரு காட்டுப்பன்றியினாலேயா கொல்லப்பட வேண்டும்?…
நல்ல வேளையாக அருகாமையிலேயே தாழ்ந்து படர்ந்த மரம் ஒன்று இருந்தது. வந்தியத்தேவன் குதிரை மீதிருந்து பாய்ந்து மரத்தின் கிளை ஒன்றைத் தாவிப் பிடித்துக் கொண்டான். கால் முதல் தோள் வரையில் அவனுடைய பலத்தை முழுவதும் பிரயோகித்து எழும்பி கிளை மீது ஏறிக் கொண்டான். அதே சமயத்தில் பன்றி அவனுடைய குதிரையை முட்டியது. குதிரை தட்டுத்தடுமாறி விழப் பார்த்துச் சமாளித்துக் கொண்டு அப்பால் ஓடியது.
கரிகாலர் இன்னமும் குதிரையின் அடியில் கிடந்தார். வந்தியத்தேவன் மரக்கிளை மீது இருந்தான். காட்டுப்பன்றி இருவருக்கும் நடுவில் நின்று இப்படியும் அப்படியும் திரும்பிப் பார்த்தது.
இரண்டு எதிரிகளில் யாரைத் தாக்கலாம் என்று அந்தக் காட்டுப்பன்றி யோசனை செய்கிறது என்பதை வந்தியத்தேவன் அறிந்தான். இளவரசர் இன்னும் குதிரைக்கு அடியிலிருந்து விடுவித்துக் கொண்டு வெளி வந்தபாடில்லை. வெளி வந்துவிட்ட போதிலும் பன்றியின் தாக்குதலை அவரால் அச்சமயம் சமாளிக்க முடியுமா என்பது சந்தேகந்தான். அவர் கையில் உடனே பிரயோகிக்கக் கூடிய ஆயுதம் இல்லை. வில்லை வளைத்து அம்பு விட வேண்டும். குதிரைக்கு அடியில் விழுந்து அகப்பட்டுக் கொண்டதில் அவருக்குப் பலமான காயம் பட்டிருந்தாலும் பட்டிருக்கலாம். எப்படியும் இளவரசருக்குச் சிறிது சாவகாசம் ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம். இவ்வளவையும் மின்னல் மின்னும் நேரத்தில் வந்தியத்தேவன் யோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தான். தான் ஏறியிருந்த மரக்கிளையைப் பலமாக உலுக்கி ஆட்டிக் கொண்டே “ஆகா ஊ கூ” என்று பெரியதாகச் சத்தமிட்டான்.
அவனுடைய யுக்தி பலித்தது. பன்றி மூர்க்காவேசத்துடன் அவன் ஏறியிருந்த மரத்தை நோக்கிப் பாய்ந்து வந்தது.
“வரட்டும்; வரட்டும் வந்து மரத்தின் பேரில் முட்டிக் கொள்ளட்டும்” என்று வந்தியத்தேவன் எண்ணிக் கொண்டிருக்கும்போதே, அவன் ஏறி உட்கார்ந்து உலுக்கிய மரக்கிளை மடமடவென்று முறிந்தது. கடவுளை! இது என்ன ஆபத்து?… கிளையுடன் தரையில் விழுந்தால்? அடுத்த நிமிடமே பன்றியின் கோரப் பற்கள் அவனைச் சின்னாபின்னமாகக் கிழித்துவிடும். வேறு கிளை ஒன்றைத் தாவிப் பிடித்துக் கொண்டால்தான் பிழைக்கலாம். அப்படித் தாவிப் பிடிக்க முயன்றான். பிடிக்க முயன்ற கிளை சற்றுத் தூரத்தில் இருந்தபடியால் ஒரு கை மட்டுந்தான் பிடித்தது. பிடித்த கிளை மெல்லியதாயிருந்தபடியால் வளைந்து கொடுத்தது. கைப்பிடி நழுவத் தொடங்கியது, கால்கள் ஊசலாடின! சரி! கீழே விழ வேண்டியதுதான், உடனே மரணந்தான்! சந்தேகமில்லை. ஏதோ, கடைசியாக ஆதித்த கரிகாலரைக் காப்பாற்ற முடிந்தது அல்லவா? இளைய பிராட்டி இதை அறியும்போது மகிழ்ச்சி அடைவாள் அல்லவா? தன்னுடைய மரணத்துக்காக ஒரு துளி கண்ணீர் விடுவாள் அல்லவா?…
ஏதோ ஒரு பயங்கரமான சத்தம் கேட்டது! அதே சமயத்தில் கைப்பிடியும் நழுவி விட்டது! வந்தியத்தேவன் கண்களை இறுக மூடிக்கொண்டான். தடால் என்று கீழே விழுந்தான்; விழும்போதே நினைவை இழந்தான்.
வந்தியத்தேவன் நினைவு வந்து கண் விழித்துப் பார்த்த போது ஆதித்தகரிகாலர் அவன் முகத்தில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். சட்டென்று நிமிர்ந்து எழுந்து உட்கார்ந்து, “இளவரசே! பிழைத்திருக்கிறீர்களா?” என்றான்.
“ஆமாம்; உன்னுடைய தயவினால் இன்னும் பிழைத்திருக்கிறேன்” என்றார் ஆதித்தகரிகாலர்.
“காட்டுப்பன்றி என்ன ஆயிற்று?” என்று கேட்டான்.
“அதோ! என்று இளவரசர் சுட்டிக் காட்டிய இடத்தில் காட்டுப்பன்றி செத்துக் கிடந்தது.
வந்தியத்தேவன் அதைச் சற்று உற்றுப் பார்த்துவிட்டு, “அரசே! இவ்வளவு சின்ன உருவமுள்ள பிராணி என்ன பாடுபடுத்தி விட்டது? கந்தமாறன் காட்டுப்பன்றியைக் குறித்துச் சொன்னது அவ்வளவும் உண்மைதான். கடைசியில் அதை எப்படித்தான் கொன்றீர்கள்?” என்று கேட்டான்.
“நான் கொல்லவில்லை உன்னுடைய வேலும் நீயுமாகச் சேர்ந்துதான் கொன்றீர்கள்!” என்றார் இளவரசர்.
வந்தியத்தேவன் அதன் பொருள் விளங்காதவனைப் போல் இளவரசரின் முகத்தைப் பார்த்தான். “என்னுடைய வேலைத் தாங்கள் நன்றாக உபயோகப்படுத்தியிருக்கிறீர்கள்! ஆனால் நான் ஒன்றும் செய்யவில்லையே? ஆபத்தான சமயத்தில் தங்களுக்கு உதவி செய்ய முடியாதவனாகி விட்டேனே?” என்றான்.
“நீ மரக் கிளையைப் பிடித்து உலுக்கிச் சத்தமிட்டாய் அல்லவா? அப்போது நான் குதிரை அடியிலிருந்து வெளிவந்து உன் வேலை எடுத்துக் கொண்டேன். என் மனத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த கோபத்தையெல்லாம் பாவம், இந்தப் பன்றியின் பேரில் பிரயோகித்தேன். வேலினால் குத்தப்பட்டதும் அது பயங்கரமாகச் சத்தமிட்டது. என் காதே செவிடாகி விடும் போலிருந்தது. ஆனால் வேலினால் மட்டும் அது சாகவில்லை. நீ மரக் கிளையிலிருந்து நழுவி அதன் பேரில் விழுந்தாய்; அந்த அதிர்ச்சியினால் தான் செத்தது!” என்று கரிகாலர் சொல்லிவிட்டுச் சிரித்தார். வந்தியத்தேவனும் அதை நினைத்து நினைத்துச் சிரித்தான். உடம்பைத் தடவிப் பார்த்துக் கொண்டு “பன்றியின் மேல் விழுந்ததினாலேயேதான், காயம் படாமல் தப்பினேன் போலிருக்கிறது. மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து இரணியாட்சனைக் கொன்றார் என்பதை இனி என்னால் நம்ப முடியும். அப்பா! எவ்வளவு மூர்க்கமான பிராணி” என்றான்.
“இந்தச் சிறு காட்டுப்பன்றிப் பார்த்துவிட்டு வராகவதாரத்தை மதிப்பிடாதே, தம்பி! வடக்கே விந்திய மலையைச் சேர்ந்த காடுகளிலே தலையிலே ஒற்றைக் கொம்பு உள்ள பன்றி ஒன்று இருக்கிறதாம். ஏறக்குறைய யானை அவ்வளவு பெரியதாயிருக்குமாம். அந்த மாதிரி பன்றியாயிருந்து, நீ ஏறியிருக்கும் மரத்தை முட்டியிருந்தால், மரம் என்னபாடு பட்டிருக்கும் என்று யோசித்துப் பார்!” என்றார் இளவரசர்.
“மரம் அடியோடு முறிந்து விழுந்திருக்கும், தாங்கள் எறிந்த வேலும் முறிந்திருக்கும். நம் கதி அதோ கதியாகியிருக்கும். சோழ குலத்தின் எதிரிகளுக்கு வேலை மிச்சமாகப் போயிருக்கும்” என்றான் வந்தியத்தேவன்.
“தம்பி! உண்மையைச் சொல்லு! என் குதிரை தடுமாறி விழுந்தவுடனே நீ வேலை எறிந்தாயே? அந்தக் காட்டுப்பன்றியின் மேல் எறிந்தாயா? என் பேரில் எறிந்தாயா?” என்று ஆதித்தகரிகாலர் கேட்டார்.
வந்தியத்தேவன் ஆத்திரத்துடன், “ஐயா! உண்மையாகவே தாங்கள் இந்த கேள்வி கேட்கிறீர்களா? அப்படித் தாங்கள் சந்தேகப்படுவதாயிருந்தால் பன்றியைக் கொன்று என்னைக் காப்பாற்றியிருக்க வேண்டிய அவசியம் இல்லையே?” என்றான்.
“ஆமாம்; ஆமாம்! உன் பேரில் சந்தேகப்படக் கூடாதுதான். நீ மரக் கிளையை ஆட்டிக் கொண்டு கூச்சல் போட்டிராவிட்டால் எனக்கே அந்தப் பன்றி யமனாக இருந்திருக்கும். ஆனாலும் நீ வேலை எறிந்த போது ஒரு கணம் எனக்கு அத்தகைய சந்தேகம் உண்டாயிற்று. இப்போதெல்லாம் எனக்கு எதைப் பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் வீண் சந்தேகம் தோன்றுகிறது. யமன் என்னைத் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறான் என்ற பிரமையைப் போக்கிக் கொள்ளவே முடியவில்லை. யமன் இந்தப் பன்றியின் உருவத்தில் என்னைக் கொல்ல வந்ததாகவும் எண்ணினேன்…”
“அப்படியானால் மிக நல்லதாய்ப் போயிற்று. அரசே! தங்களைத் தொடர்ந்து வந்த யமன் செத்து ஒழிந்தான்; இனி என்ன கவலை? கந்தமாறனோடு நாம் போட்டியிட்ட பந்தயத்திலும் ஜெயித்து விட்டோ ம். பன்றியை இழுத்துக் கொண்டு போக வேண்டியது தானே? புறப்படலாம் அல்லவா?” என்றான் வல்லவரையன்.
“புறப்பட வேண்டியதுதான்! ஆனால் அவசரம் என்ன? சற்று இங்கே தங்கிக் களைப்பு ஆறிவிட்டுப் போகலாம்” என்றார் இளவரசர்.
“தாங்கள் களைப்படைந்ததாகச் சொல்லுவதை இப்போதுதான் முதன் முதலாகக் கேட்கிறேன். ஆம், குதிரையின் அடியில் சிக்கி ரொம்பக் கஷ்டப்பட்டுப் போயிருப்பீர்கள்.”
“அது ஒன்றுமில்லை; உடலின் களைப்பைக் காட்டிலும் உள்ளத்தின் களைப்புதான் அதிகமாயிருக்கிறது. வந்த வழி செல்ல வேண்டுமா? மறுபடியும் அந்த மூடர்களுடன் சேர்ந்தல்லவா பிரயாணம் செய்ய வேண்டி வரும்? அதைக் காட்டிலும் இந்த ஏரியைக் கடந்து போய்விட்டால் என்ன?”
“கடவுளே! இந்தச் சமுத்திரம் போன்ற ஏரியை நீந்திக் கடக்க வேண்டும் என்றா சொல்கிறீர்கள்? பன்றியிடமிருந்து என்னைத் தப்பவைத்து ஏரியில் மூழ்கடித்துக் கொல்ல வேண்டும் என்று உத்தேசமா?” என்றான் வந்தியத்தேவன்.
“உனக்கு நீந்தத் தெரியாது என்பது நினைவிருக்கிறது. என்னால் கூட இவ்வளவு பெரிய ஏரியை நீந்திக் கடக்க முடியாது. ஒரு படகு கிடைத்தால் காரியம் சுலபமாகிவிடும். சற்று முன் ஒரு படகு பார்த்தோமே, அது எங்கேயாவது சமீபத்தில் கரையோரமாகத் தானே தங்கியிருக்கும்? அதைத் தேடிப் பிடித்தால் என்ன?”
“குதிரைகளின் கதி என்ன ஆவது? காட்டு மிருகங்களுக்கு உணவாகட்டும் என்று விட்டு விட்டுப் போய்விடலாமா?” என்றான் வந்தியத்தேவன்.
உடனே ஏதோ ஞாபகம் வந்து திடுக்கிட்டவன் போல் துள்ளிக் குதித்து எழுந்து, “ஐயா! புலி எங்கே?” என்று கேட்டான்.
“நானும் அதை மறந்துவிட்டேன். பக்கத்தில் எங்கேயாவது மறைந்திருக்கப் போகிறது. யமன் பன்றி ரூபத்தில் வராமல் ஒரு வேளை புலி ரூபத்திலும் என்னைத் தொடரலாம் அல்லவா?” என்றார் இளவரசர்.
இருவரும் சுற்றும் முற்றும் உற்றுப் பார்க்கலானார்கள். சிறிது நேரம் பார்த்த பிறகு வந்தியத்தேவன் “அதோ!” என்று சுட்டிக் காட்டினான்.
ஏரியில் தண்ணீர் கொண்டு வந்து சேர்த்த அந்த வாய்க்கால் வடக்கே போகப் போக குறுகலாகிக் கொண்டு சென்றது. அவ்விதம் குறுகலாகியிருந்த இடத்தில் வாய்க்காலின் மீது ஒரு பெரிய மரம் விழுந்து இரு கரைகளையும் தொட்டுக் கொண்டிருந்தது. புலி அந்த மரப்பாலத்தின் மீது மெல்ல ஊர்ந்து சென்று அக்கரையை நெருங்கிக் கொண்டிருந்ததை இரண்டு பேரும் கவனித்தார்கள். இரண்டு பேருடைய மனத்திலும் ஒரே எண்ணம் உதித்தது.
“ஆகா! படகிலே வந்த பெண்கள்!” என்று இருவரும் ஏக காலத்தில் வாய்விட்டுக் கூறினார்கள்.
பின்னர், “இந்த வாய்க்காலை அடுத்துள்ள தீவின் கரையிலேதான் அந்தப் பெண்கள் இறங்கியிருக்க வேண்டும்” என்றான் வல்லவரையன்.
“காயம்பட்ட சிறுத்தை மிக அபாயகரமானது” என்றார் இளவரசர்.
“பன்றியுடன் புலியையும் கொன்று எடுத்துப் போகத்தான் வேண்டும்.”
“இந்த வாய்க்காலை எப்படித் தாண்டுவது? குதிரைகள் மரப்பாலத்தின் மேல் போக முடியாதே?”
“தண்ணீர் கொஞ்சமாகத்தான் இருக்கும்; இறங்கிப் போகலாம்.”
கரிகாலரின் குதிரையும் அதற்குள் எழுந்து வந்தியத்தேவன் குதிரைக்கு அருகே போய் நின்று கொண்டிருந்தது. எஜமானர்கள் அந்தரங்கம் பேசியதுபோல் அவையும் தங்களுக்குச் சற்று முன் நேர்ந்த அபாயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டன போலும். இருவரும் தத்தம் குதிரைமீது தாவி ஏறினார்கள்; வாய்க்காலில் குதிரைகளை இறக்கினார்கள். வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக இல்லைதான். ஆனால் சேறும் உளையும் அதிகமாயிருந்தன. குதிரைகள் தட்டுத் தடுமாறித் தத்தளித்துச் சென்றன.
கோடிக்கரைப் புதை சேற்றுக் குழிகளை நினைத்துக் கொண்டு வந்தியத்தேவன் “இந்தச் சேறு ஒன்றும் பிரமாதமில்லை” என்று தைரியமடைந்தான். அதைப் பற்றி கரிகாலருக்குச் சொல்லவும் தொடங்கினான்.
“நண்பா! வெளியிலுள்ள சேற்றைப் பற்றிச் சொல்லப் போய்விட்டாயே? மனிதர்களுடைய உள்ளத்தில் உள்ள சேற்றைக் குறித்து என்ன கருதுகிறாய்? ஒரு தடவை தீய எண்ணமாகிற சேற்றில் இறங்குகிறவர்கள் மீண்டும் கரை ஏறுவது எவ்வளவு கடினம் தெரியுமா?” என்று கரிகாலர் கேட்டார். இளவரசரின் உள்ளம் உண்மையில் சேறு போலக் குழம்பியிருக்கிறது என்று வந்தியத்தேவன் எண்ணிக் கொண்டான்.
குதிரைகள் மிகப் பிரயாசையுடன் அக்கரையை அடைந்தன. காட்டுக்குள்ளே மிக ஜாக்கிரதையுடன் நாலா புறமும் உற்றுப் பார்த்துக் கொண்டு இருவரும் சென்றார்கள். கரிகாலரின் கையில் வில்லும் அம்பும் தயாராயிருந்தன. வந்தியத்தேவன் தன் வேலையும் புலியின் பேரில் எறிவதற்கு ஆயத்தமாக வைத்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று, காட்டில் சாதாரணமாகக் கேட்கும் சத்தங்களை அடக்கிக் கொண்டு ஒரு பெண்ணின் ‘கிறீச்’ என்ற குரல், “அம்மா! அம்மா! புலி!” என்று கதறுவது கேட்டது.
மணிமேகலை மரக் கிளையின் மீது சிறுத்தையைப் பார்த்த அதே சமயத்தில் வசந்த மண்டபத்தில் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த தோழிப் பெண் ஒருத்தியும் அந்தப் புலியைப் பார்த்து விட்டு அவ்விதம் அலறினாள். அந்தக் குரல் இரு நண்பர்களின் செவிகளிலும் விழுந்து ரோமாஞ்சனத்தை உண்டு பண்ணியது. குதிரைகளை வேகமாகச் செலுத்திக் கொண்டு குரல் வந்த திசையை நோக்கி அவர்கள் சென்றார்கள். ஏரிக் கரையின் ஒரு திருப்பம் திரும்பியதும் அவர்கள் கண்ட காட்சி இருவரையும் திடுக்கிட்டுத் திகில் கொள்ளும்படிச் செய்து விட்டது.
நந்தினியும், மணிமேகலையும் படித்துறையில் குளிப்பதற்காக இறங்கிக் கொண்டிருந்த சமயத்தில், அருகில் சாய்ந்திருந்த மரக்கிளை ஒன்றின் மீது சிறுத்தை சிறிது சிறிதாக ஊர்ந்து மேலேறிக் கொண்டிருந்தது. பன்றியோடு போட்ட சண்டையில் நன்றாக அடிபட்டுக் காயமுற்றிருந்த அந்தச் சிறுத்தை அப்போது தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் இது அந்தப் புலியைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அடுத்த கணம் சிறுத்தை தண்ணீரில் நின்ற பெண்களின் மீது பாயப் போகிறதென்று கரிகாலரும், வந்தியத்தேவனும் எண்ணினார்கள்.
வந்தியத்தேவன் வேலை உபயோகிக்கத் தயங்கினான். வேல் தவறிப் பெண்களின் மீது விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்தான். கரிகாலருக்கு அத்தகைய தயக்கம் ஒன்றும் ஏற்படவில்லை, வளைத்திருந்த வில்லில் அம்பைக் கோர்த்து நன்றாகக் குறிப்பார்த்து இழுத்து விட்டார். அம்பு விர்ரென்று சென்று சிறுத்தையின் அடி வயிற்றில் பாய்ந்தது. சிறுத்தை பயங்கரமாக உறுமிக் கொண்டு அப்பாலிருந்த பெண்களின் மீது பாய்ந்தது. அடுத்த கணத்தில் என்ன நேர்ந்தது என்பதைத் தெளிவாகப் பார்க்க முடியாதபடி ஒரே குழப்பமாகி விட்டது. சிறுத்தையும் பெண்கள் இருவரும் திடீரென்று மறைந்து விட்டார்கள். சில கணநேரம் கழித்து மூவரும் வெவ்வேறு இடத்தில் தண்ணீருக்குள்ளிருந்து வெளியே தலையை நீட்டினார்கள். ஏரியின் நீரோடு இரத்தம் கலந்து செக்கச் செவேலென்று ஆயிற்று.