அத்தியாயம் 27 - "நில் இங்கே!"
பாதாளச் சிறையைப் பற்றிக் கூறியதும் சின்னப் பழுவேட்டரையருக்குப் பழைய நினைவுகள் வந்தன. சம்பிரதாய மரியாதைப் பேச்சை மறந்துவிட்டுக் கூறினார்!- “ஆமாம்; நீ ஒரு தடவை பாதாளச் சிறைக்குப் போயிருக்கிறாய். இளைய பிராட்டியுடன் சென்றாய். உளவு அறிய வந்து தப்பி ஓடிவிட்ட ஒற்றன் ஒருவனைப் பற்றித் தகவல் தெரிந்து கொள்ளப் போனீர்கள் இல்லையா?”
“இல்லை, ஐயா! தாங்கள் சொல்வது சரியல்ல. நாங்கள் அன்று பாதாளச் சிறைக்குப் போனது ஒற்றனைப்பற்றி அறிந்து கொள்வதற்காக அல்ல. பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலர் ஓலையுடன் அனுப்பியிருந்த தூதரைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போனோம்.”
“அப்படி நீங்கள் எண்ணிக்கொண்டு போனீர்கள். அவன் ஒற்றனா, தூதனா என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? நீ ஏதும் அறியாத சிறு பெண். உன்னோடு அதைப்பற்றி விவாதித்துப் பயனில்லை. நீங்கள் போனதுதான் போனீர்களே! அவனைப்பற்றி ஏதாவது தெரிந்து கொண்டீர்களா!”
“இல்லை, நாங்கள் எவனைப் பார்க்கப் போனோமோ, அவன் உங்களுக்குக் கூடத் தெரியாமல் விடுதலையாகிப் போய் விட்டான். பழுவூர் இளைய ராணி நந்தினி தேவியின் கட்டளை எங்களை முந்திக் கொண்டு விட்டது. பாவம்! நீங்கள்தான் என்ன செய்வீர்கள்?”
சின்னப் பழுவேட்டரையர் உதடுகளைக் கடித்துக்கொண்டார். தமது எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தம் தமையனார் இளைய ராணிக்கு அதிக இடம் கொடுத்து வந்தது இத்தகைய இளம் பெண்களுக்குக்கூட அல்லவா ஏச்சாகப் போய்விட்டது? இவ்விதம் தமது உள்ளத்தில் தோன்றிய அவமான உணர்ச்சியை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “உங்கள் பங்குக்கு நீங்களும் ஓர் அரைப் பைத்தியக்காரனை விடுதலை செய்தீர்கள்!” என்றார்.
“ஐயா! அரைப் பைத்தியம் என்று புஷ்ப சேவை செய்து வரும் சேந்தன் அமுதனைத் தானே சொல்கிறீர்கள்? அவரை அன்று விடுதலை செய்ததினால் இந்தச் சோழ நாடு எவ்வளவு பெரிய நன்மை அடைந்தது என்பதை அறிந்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்!”
“பெண்ணே! எனக்கு ஆச்சரியம் இனி ஒன்றிலுமே ஏற்படப் போவதில்லை. இந்தச் சோழ ராஜ்யம் யார் யாருக்கெல்லாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டு எனக்கு அலுத்துப் போய்விட்டது. நீ கூட இப்போது ஏதோ ஒரு முக்கியமான நன்மையைச் சோழ நாட்டுக்குச் செய்வதற்காகத்தான் வந்திருக்கிறாய் அல்லவா?”
“ஆம், ஐயா! முக்கியமான காரியம் இல்லாவிட்டால் தங்கள் தமையனார் அனுப்பியிருப்பாரா? அதிலும் ஒன்றும் அறியாத அபலைப் பெண்ணாகிய என்னை அனுப்பியிருப்பாரா?”
“என் தமையனாருக்குப் புத்திசாலித்தனம் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. உன்னை அனுப்பியதிலிருந்தே அது தெரிகிறது. நீ கொண்டு வந்த செய்தியைச் சீக்கிரம் சொல்லி விடு!”
“பாண்டிய நாட்டுச் சதிகாரர்களைப் பற்றி அலட்சியமாயிருந்தது தவறு என்று தங்களிடம் கூறும்படி சொன்னார். வீர பாண்டியனுடைய ஆபத்துதவிகள் சிலர் உண்மையாகவே பயங்கரச் சதி செய்து வருகிறார்கள்; சோழ குலத்தைப் பழிவாங்க இன்று கெடு வைத்திருக்கிறார்கள். சக்கரவர்த்தியைப் பத்திரமாய்ப் பாதுகாக்கவேண்டும் என்று எச்சரிக்கும்படி கூறினார்…”
இதைக் கேட்ட காலாந்தக கண்டார் நகைத்தார். “இந்தப் பிரமாதமான செய்தியைத்தானா சொல்லி அனுப்பினார்? ஒருவேளை உன் பெரிய தகப்பனார் படை எடுத்து வரப்போவதைப் பற்றித்தான் தகவல் தெரிந்து சொல்லி அனுப்பினாரோ என்று பார்த்தேன். அவர் வெளியிலிருந்து கொடும்பாளூர் சைன்யத்தைப் பார்த்துக் கொண்டால், நான் கோட்டைக்குள்ளே சக்கரவர்த்திக்கு ஏதும் நேராமல் பார்த்துக் கொள்கிறேன். அதைப்பற்றி அவரும், நீயும், இளையபிராட்டியும் கூடக் கவலைப்பட வேண்டியதில்லை!” என்றார்.
“ஐயா! தாங்கள் இப்படி அலட்சியமாகக் கருதுவீர்கள் என்று தெரிந்து, மேலும் ஒரு விஷயம் சொல்லி அனுப்பியிருக்கிறார். பழுவூர் இளைய ராணியின் அரண்மனைக்கு அடிக்கடி யாரோ மந்திரவாதி ஒருவன் வந்து போனது பற்றித் தாங்கள் எச்சரிக்கை செய்தீர்களாம். அதற்கு அவர் செவி கொடாமல், தங்களைக் கோபித்துக் கொண்டாராம். ‘தம்பி! பெருங்குற்றம் செய்துவிட்டேன். அந்த மந்திரவாதி ரவிதாஸன் என்பவன்தான் பாண்டியச் சதிகாரன். வீர பாண்டியனுடைய ஆபத்துதவிகளின் தலைவன். சோழ குலத்தை வேரோடு கருவறுக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவன். அவனுடைய ஆள் ஒருவன் இன்றைக்குச் சக்கரவர்த்தியின் மீது பழிவாங்க முயலுவான்; அலட்சியம் வேண்டாம். சர்வ ஜாக்கிரதையுடனிருக்கவும் – இதுவே பெரிய பழுவேட்டரையர் தங்களுக்கு அனுப்பிய செய்தி! என் கடமையை நான் செய்துவிட்டேன்…”
காலாந்தக கண்டர் சிறிது திகைத்துத்தான் போய்விட்டார். இம்மாதிரி செய்தியைப் பெரியவரைத் தவிர வேறு யாரும் அனுப்பியிருக்க முடியாது.
“பெண்ணே! இது உண்மையானால் அவர் ஏன் இங்கு உடனே வரவில்லை? உன்னை எதற்காக அனுப்பினார்…?”
“என்னை அவர் அனுப்பவில்லை. அவர் இளையபிராட்டியிடம் கூறினார். இளைய பிராட்டி என்னை அனுப்பி வைத்தார். ஆதித்த கரிகாலருக்கும் இன்றைக்கே ஆபத்து வர இருக்கிறது. ஆகையால் அவரைக் காப்பாற்ற அவர் திரும்பிப் போயிருக்கிறார்.”
“எங்கேயிருந்து? அவர் உங்களை எங்கே பார்த்தார்?”
“குடந்தையில் ஜோதிடர் வீட்டில் பார்த்தார். இன்னும் தங்களுக்குச் சந்தேகம் தெளியவில்லையானால் இதையும் கேளுங்கள். தங்கள் அண்ணன் படகில் கொள்ளிடத்தைத் தாண்டி வந்தபோது புயல் அடித்துப் படகு கவிழ்ந்து விட்டது. தப்பிப் பிழைத்துக் கரையேறிப் பள்ளிப்படையில் படுத்திருந்த போது சதிகாரர்கள் பேசியதைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். ஐயா! இன்னும் இங்கேயே நின்று பேசிக் கொண்டிருக்க வேண்டுமா? அல்லது அரண்மனைக்குப் போகலாமா?”
“பெண்ணே! நீ சொன்னதெல்லாம் உண்மையாகவே இருக்கட்டும். எப்பேர்ப்பட்ட சதிகாரனாயிருந்தாலும் கோட்டைக் காவலைக் கடந்து வரமுடியாது. நீ பெண்ணாயிருப்பதனால்தான் உள்ளே வரவிட்டேன்…”
“வெளியேயிருந்து வரவேண்டும் என்பது என்ன? சதிகாரர்கள் கோட்டைக்குள்ளேயே இருந்துவிட்டால்…?”
“ஒரு நாளும் முடியாத காரியம்….”
“சரி; அது தங்கள் பொறுப்பு. என் கடமையை…”
“நிறைவேற்றி விட்டாய். இனி நீ திரும்பிப் போகலாம்.”
“இல்லை, ஐயா! என் கடமையில் ஒரு பாதியைத்தான் நிறைவேற்றியிருக்கிறேன் சக்கரவர்த்தியைப் பார்த்து இளைய பிராட்டியின் செய்தியைச் சொல்லிவிட்டால் முழுவதும் நிறைவேற்றியதாகும்…”
“அந்தச் செய்தியையும் என்னிடமே சொல்லிவிடலாம்.”
“முடியாத காரியம், சக்கரவர்த்தியிடம் நேரில் தெரிவிக்கும்படி இளைபிராட்டியின் ஆக்ஞை. இதோ இளைய பிராட்டியின் முத்திரை மோதிரம்!…”
“ஆ! முத்திரை மோதிரம் யார் யாரிடமோ வந்துவிடுகிறது. இளைய பிராட்டிதான் கொடுத்தாள் என்பது என்ன நிச்சயம்? உன் பெரிய தந்தை இந்தக் கோட்டையை முற்றுகையிட்டிருக்கிறார். உன்னை எப்படி நம்புவது?….”
“ஓர் அபலைப் பெண்ணால் என்ன அபாயம் நேர்ந்துவிடும் என்று பயப்படுகிறீர்கள்?”
“பெண்ணே! பழுவூர் வம்சத்தினர் பயம் என்பது இன்னதென்று அறியமாட்டார்கள்…”
“அப்படியானால் என்னை அரண்மனை வரையில் போக விடுங்கள், தாங்களும் கூட வாருங்கள்….”
“இன்றைக்கெல்லாம் சக்கரவர்த்தியின் மனக் கலக்கம் மிகவும் அதிகமாயிருக்கிறது…”
“அந்தக் கலக்கத்தைக் தீர்ப்பதற்குரிய செய்தியுடன் நான் வந்திருக்கிறேன், ஐயா! விஷயம் இன்னதென்று அறிந்தால் என்னைத் தடுத்துத் தாமதப்படுத்தியதற்காகத் தாங்களே பச்சாத்தாபப் படுவீர்கள்…”
சின்னப் பழுவேட்டரையர் சிறிது வியப்புக் குறி காட்டி, “பெண்ணே! ஒருவேளை சின்ன இளவரசர் – பொன்னியின் செல்வரைப் பற்றிச் செய்திகொண்டு வந்திருக்கிறாயா?” என்றார்.
“ஆம், தளபதி!”
“ஆகா! சின்ன இளவரசர் சுகமாயிருக்கிறாரா? இப்போது எங்கே வந்துகொண்டிருக்கிறார்? அவருக்கு – சதிகாரர்களால் அவருக்கு…”
“ஆம்; பாண்டிய நாட்டுச் சதிகாரர்களால் அவருடைய உயிருக்கும் அபாயம் நேர இருந்தது. ஆனால் கடவுள் அருளால் விபத்து ஒன்றும் ஏற்படவில்லை சௌக்கியமாயிருக்கிறார். இது தங்களுக்குச் சந்தோஷமளிக்கும் அல்லவா?”
“நல்ல கேள்வி! சின்ன இளவரசர் சௌக்கியமாயிருப்பது பற்றிச் சந்தோஷப்படாமல் துக்கப்படுவார்களா? வா, வா! உன்னோடு வீண் பொழுது போக்க விரும்பவில்லை. அரண்மனைக்கு வந்து சக்கரவர்த்தியிடம் நேரில் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிடு!”
இவ்விதம் கூறிச் சின்னப் பழுவேட்டரையர் தம் யானையை மேலே செலுத்தினார். இளவரசரைப் பற்றி அறிந்து கொள்ள அவருக்கும் பெரும் ஆவல் உண்டாயிற்று. அவருடைய மாப்பிள்ளை மதுராந்தகன் தஞ்சை சிம்மாசனம் ஏறுவதற்கு அருள்மொழிவர்மன் ஒரு போட்டி என்பதாக அவர் என்றும் கருதியதில்லை. சக்கரவர்த்திக்கு அந்த எண்ணமே இல்லை என்பதை அவர் அறிவார். அருள்மொழி தந்தை சொல்லைத் தட்டக் கூடியவனும் இல்லை. குந்தவை தலையிட்டு ஏதேனும் குளறல் செய்யாமலிருக்க வேண்டுமென்பது கவலை. அவள் இப்போது ஏதேனும் சூழ்ச்சி தொடங்கியிருக்கிறாளா, என்ன? அருள்மொழியைத் தன் வசத்தில் வைத்துக்கொண்டு ஏதேனும் தந்தைக்குத் தாறுமாறான செய்தி அனுப்பியிருப்பாளா? இளவரசரைப் பற்றி இந்தக் கொடும்பாளூர்ப் பெண் உண்மையாகவே செய்தி கொண்டு வந்திருந்து சக்கரவர்த்தியிடம் கூறினால், அதை அவர் தம்மிடம் சொல்லாமல் இருக்கமாட்டார். அருள்மொழிவர்மரின் உத்தேசம் இன்னதுதான் என்று தெரிந்து கொண்டால், அதற்கேற்பத் தாம் செய்ய வேண்டியது பற்றித் தீர்மானித்துக்கொள்ளலாம் அல்லவா? அச்சமயத்தில் பூதி விக்கிரம கேசரி தஞ்சைக் கோட்டை மீது படை எடுத்து வந்திருக்கும் சதிகாரச் செயலைப் பற்றியும் சக்கரவர்த்தியிடம் தெரிவித்துவிடலாம் அல்லவா?…
இரண்டு யானைகளும் அரண்மனை வாசலில் வந்து நின்றன. சின்னப் பழுவேட்டரையர் இலகுவாக யானை மீதிருந்து கீழே குதித்தார். இன்னொரு யானை மலை அசைவதுபோல் அசைந்து மண்டியிட்டுப் படுத்தது. இரண்டு பெண்களும் யானைப்பாகனும் கீழே இறங்கினார்கள். வாசற் காவலனை அழைத்துச் சின்னப் பழுவேட்டரையர் ஏதோ கூறினார். அவன் அரண்மனையின் முன் வாசலைத் திறந்து விட்டான்.
காலாந்தக கண்டருடைய மனதில் அவருடைய தமையனார் சொல்லி அனுப்பியதாக வானதி கூறிய செய்தி உறுத்திக் கொண்டிருந்தது. அதை அவர் அலட்சியம் செய்யப் பார்த்தும் முடியவில்லை. முக்கியமாக, மந்திரவாதி ரவிதாஸனைப் பற்றி அறிந்தது. அவருடைய மன அமைதியை மிகக் குலைத்தது. வீர பாண்டியரின் ஆபத்துதவிகளைப் பற்றி அவர் முன்னமே அறிந்திருந்தார். ஆனால் அவர்களுக்குத் தஞ்சாவூர்க் கோட்டைக்குள்ளேயே இடம் கிடைத்திருந்தது என்று அறியவில்லை. பழுவூர் இளைய ராணி மந்திரவாதியை அழைத்துப் பேசுவதெல்லாம் பெரிய பழுவேட்டரையரை மேலும் மேலும் தன் வசப்படுத்துவதற்காகவே என்று அவர் நம்பிக் கொண்டிருந்தார். அண்ணன் தம்பிகளுக்குள்ளே விரோதத்தை வளர்ப்பதும், அவளுடைய நோக்கமாயிருக்கலாம் என்று நினைத்தார். இப்போது இந்தப் பெண் சொல்வது சிறிது பீதிகரமான செய்தியாகத்தான் இருக்கிறது. ஆயினும், எந்த மந்திரவாதி அல்லது சதிகாரன் என்ன செய்துவிட முடியும்? தம்முடைய அநுமதியின்றிச் சக்கரவர்த்தியின் அரண்மனைக்குள் ஓர் ஈயும் நுழைய முடியாது. சக்கரவர்த்தி வெளியில் வருவதும் கிடையாது. இருந்தாலும் அரண்மனையைச் சுற்றிலும் இன்னும் கொஞ்சம் பாதுகாப்பைப் பலப்படுத்தி வைப்பது நல்லது. புயல் – வெள்ளம் என்று சொல்லிக் கொண்டும், முதல் மந்திரியைப் பார்ப்பதற்காக என்று சொல்லிக் கொண்டும் அதிகம் பேர் இரண்டு நாளாகக் கோட்டைக்குள் வந்திருந்தார்கள். அவர்கள் எல்லாரும் வெளியில் போய்விட்டார்களா என்று தெரியாது. இன்று பகலில் திடீரென்று கோட்டைக் கதவைச் சாத்தியதும் நல்லதாய்ப் போயிற்று. துர்நோக்கம் கொண்டவர்கள், – சந்தேகாஸ்பதமான மனிதர்கள், – யாராவது இந்தக் கோட்டைக்குள் வந்திருக்கிறார்களா என்று நன்றாகப் பரிசோதனை செய்து பார்த்து விடலாம்…
இவ்விதம், யானை மேல் அரண்மனையை நோக்கி வரும் போதே எண்ணமிட்டுக் கொண்டு வந்தார். அரண்மனை வாசலில் ஒரு பக்கத்தில் எப்போதும் ஆயத்தமாயிருந்த தம் ஆட்களைச் சமிக்ஞையால் அழைத்தார். அவர்களிடம் கோட்டையின் உட்பக்கம் முழுவதும் நன்றாய்த் தேடிச் சந்தேகாஸ்பதமாக யார் தென்பட்டாலும் பிடித்துக் கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.
பிறகு, வேளக்காரப் படையாரிடம் அன்றிரவு முழுவதும் தூங்காமலே அரண்மனையையும் சுற்றுப்புறங்களையும் காவல் புரியவேண்டுமென்று சொல்ல எண்ணி, அவர்களுடைய தலைவனை அனுப்பும்படி ஆக்ஞாபித்தார். இந்த நிலையில், யானையின் மேல் வந்த பெண்கள் என்ன ஆனார்கள் என்று திரும்பிப் பார்த்தார். அவர்கள் அப்போது அரண்மனை முன்புறத்து நிலா முற்றத்தைத் தாண்டி முதல் வாசற்படிக்கு அருகிலே போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால்,… ஆனால்… இவன் யார்? அவர்களைத் தொடர்ந்து போகும் அந்த மூன்றாவது உருவம்? தலைப்பாகையைப் பார்த்தால், யானைப்பாகன் மாதிரி தோன்றியது! ஆகா! யானைப்பாகன் ஏன் தொடர்ந்து போகிறான்? அரண்மனைக்குள் அவனுக்கு என்ன வேலை? சக்கரவர்த்தியிடந்தான் அவனுக்கு என்ன காரியம்?
மிகப் பயங்கரமான ஓர் எண்ணம் அவர் மனத்தில் மின்னலைப் போல் தோன்றிச் சொல்ல முடியாத வேதனையை உண்டாக்கியது. கோபக்கனலை எழுப்பியது. ஒருவேளை இதில் ஏதேனும் சூழ்ச்சி இருக்குமோ? இவன்தான் சதிகாரனோ? இந்தப் பெண்களை ஏமாற்றிவிட்டு, யானைப்பாகனைப் போல் வந்திருக்கிறானோ? நாமும் ஏமாந்து விட்டோ மோ? தம் கண் முன்னால் சக்கரவர்த்தியைக் கொல்ல வந்த வீர பாண்டியரின் ஆபத்துதவி அரண்மனைக்குள்ளே போகிறதாவது? காலாந்தக கண்டனுக்கு அவ்வளவு பெரிய அசட்டுப் பட்டமா? அல்லது பூதிவிக்கிரம கேசரியின் சூழ்ச்சியில் சேர்ந்ததா? எதுவாயிருந்தாலும் சரி, இதோ மறு கணத்தில் எல்லாம் தெரிந்து போய்விடுகிறது!
நாலே எட்டில் நிலா முற்றத்தைக் காலாந்தக கண்டர் கடந்து சென்று யானைப்பாகன் சமீபம் அடைந்தார். “அடே! நில் இங்கே!” என்று ஒரு கர்ஜனை செய்தார்.
“நீ ஏன் உள்ளே போகிறாய்? யானைப்பாகனுக்கு அரண்மனைக்குள் என்ன வேலை?” என்று கூறிக்கொண்டே, அவனுடைய ஒரு கரத்தைத் தமது வஜ்ராயுதம் போன்ற கை முஷ்டியினால் பிடித்துக் கொண்டார்.
அவருடைய கோப கர்ஜனைக் குரலைக் கேட்டுவிட்டு முன்னால் சென்ற இரு பெண்களும் திரும்பிப் பார்த்தார்கள். அவர்களுடைய முகங்கள் சிறிது பயம், வியப்பு, ஆர்வம் முதலிய உணர்ச்சிகளைப் பிரதிபலித்தன. அதே சமயத்தில் புன்னகை மலர்ந்தது. வானதி “ஐயா!… அவர்… அவர்…” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்துச் சிறிது தயங்கினாள்.
குரோதத்தின் சிகரத்தை அடைந்திருந்த சின்னப் பழுவேட்டரையர் அவளைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை; அவள் வார்த்தையைப் பொருட்படுத்திக் கேட்கவும் விரும்பவில்லை. யானைப்பாகனுடைய தடுமாற்றத்திலிருந்து அவருடைய சந்தேகம் மேலும் மேலும் உறுதிப்பட்டது. முன்னொரு தடவை தம்மை ஏமாற்றிவிட்டுத் தப்பி ஓடிப்போன வாணர்குலத்து வாலிபனோ என்ற விபரீத எண்ணம் அந்தக் கணத்தில் தோன்றியது. மறுபடியும் தம்மை ஏமாற்றிவிட்டுப் போகலாம் என்று இவ்வளவு துணிச்சலுடன் வந்திருக்கிறானோ?…
பிடித்த பிடியை இன்னும் சிறிது கெட்டியாக்கிக் கொண்டு சின்னப் பழுவேட்டரையர் “அடா!” உண்மையைச் சொல்! நீ யார்? யானைப்பாகன்தானா? அல்லது சதிகாரனா? முன்னொரு தடவை என்னிடமிருந்து தப்பிச் சென்ற ஒற்றனா? இம்முறை தப்ப முடியாது!” என்று சொல்லிக் கொண்டே, பிடித்த பிடியை விடாமல் ‘யானைப்பாகன்’ முகத்தைத் தம்மை நோக்கித் திருப்பினார்.
அரண்மனையின் முன் மண்டபத்தில் எரிந்த தீபங்களின் வெளிச்சம் லேசாக அந்த ‘யானைப்பாகனின்’ கம்பீரமான முகத்தில் விழுந்தது.
“தளபதி! நான் யானைப்பாகன் கூடத்தான். தங்களிடமிருந்து என்றும் தப்பிச் சென்றதில்லை. தங்களிடம் என்னை ஒப்புக் கொடுக்கவே வந்திருக்கிறேன்!” என்றான் யானைப்பாகன்.
காலாந்தக கண்டர் அந்த முகத்தைப் பார்த்தார். அந்தக் குரலைக் கேட்டார். மேல் உலகம் ஏழும் இடிந்து அவர் தலை மேல் ஒருமிக்க விழுந்து விட்டது போலிருந்தது. அவ்விதமாகத் திகைத்துச் சித்திரப் பதுமைபோல் நின்று விட்டார். கைப்பிடியை விடுவதற்குக் கூட அவருக்குத் தோன்றவில்லை. கைப்பிடி அதுவாகத் தளர்ந்து இளவரசர் அருள்மொழிவர்மரை விடுதலை செய்தது.